Published : 24 May 2015 09:27 AM
Last Updated : 24 May 2015 09:27 AM

திரை விமர்சனம்: டிமான்ட்டி காலனி

நாயகன் சீனிவாசனுக்கு (அருள் நிதி) மூன்று நண்பர்கள். அவர்களில் ஒருவர் உதவி இயக்குநர் ராகவ். சென்னையில் டிமான்ட்டி காலனி என்ற பகுதியில் நீண்ட காலமாக ஒரு பங்களா வீடு பூட்டிக்கிடக்கிறது. அதைப் பற்றி ஆராய்ந்து பேய்க் கதை ஒன்றை எழுதி அதைத் திரைப்படமாக்க வாய்ப்பு தேடி அலைகிறார்

பேய்கள் வாழ்வதாக நம்பும் அந்த பங்களாவுக்குக் கடும் மழை பொழியும் ஓரிரவில் நண்பர்கள் நால்வரும் செல்கிறார்கள். அங்கே அமானுஷ்யத்தை உணரும் அவர்கள் தாங்கள் குடியிருக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக்குத் திரும்பு கிறார்கள். அழையா விருந்தாளியாக அங்கே வந்துவிடுகிறார் டிமான்ட்டி காலனி பேய் வீட்டில் உலவிவந்த வெள்ளைக்காரப் பேயான டிமான்ட்டி துரை. டிமான்ட்டிக்குச் சொந்தமான தங்க நகை ஒன்றை ராகவ் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். அதன் பின்னர் நடக்கும் திகிலான சம்பவங்களின் தொகுப்பே டிமான்ட்டி காலனி.

பேய் பங்களாவுக்குப் போய்விட்டு வந்த பின்னர் நண்பர்கள் பேய்ப் படம் ஒன்றை டிவியில் பார்க்க விரும்பு கிறார்கள். அப்போது ஆரம்பிக்கிறது திகில். அவர்கள் டிவிடி ப்ளேயரில் ஒரு படத்தைச் செருகி படம் பார்க்கத் தயாராகிறார்கள். ஆனால் டிவியில் தெரிவதோ சாட்சாத் அவர்களே. அறையின் கதவுகள் பூட்டிக்கொள் கின்றன. அந்த அறையிலிருந்து அவர்கள் வெளியேற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையவில்லை. ஒரே அறைக்குள் கிட்டத்தட்ட படத்தின் பாதிக் காட்சிகளைக் காட்ட வேண்டிய சூழலை நன்கு சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். சத்தத்தின் மூலமே பயங்கரத்தையும் திகிலையும் உணர்த்த முடியும் என்று நம்பி பின்னணி இசையை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால் பல காட்சிகளில் அது அளவுக்கு மீறிய அமிர்தமாகிவிட்டிருக்கிறது.

ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில் நுட்பத்தில் காட்டப்பட்ட தேர்ச்சியும் நேர்த்தியும் படத்தின் காட்சிகளில் தென்படவில்லை. டிமான்ட்டி துரையின் ப்ளாஷ் பேக் காட்சியில் அவருடைய மனைவி தொடர்பான ஒரு மர்மத்தை இயக்குநர் உருவாக்குகிறார். ஆனால் அந்த மர்மம் எடுபடவே இல்லை. அதே போல் சீனிவாசன் ‘ஜில்லு’ என அழைக்கும் அந்தப் பெண் தொடர் பான காட்சியும் படத்துக்கு வலுசேர்ப் பதாக இல்லை. முதல் பாதியில் பேய் பங்களாவுக்கு முன் யதார்த்தமான சித்தரிப்புகளோடு தொடங்கும் படம், நண்பர்கள் பேய் பங்களாவுக்குள் நுழைந்ததும் அப்படியே உறைந்து விடுகிறது.

நண்பர்கள் எப்படிக் கொல்லப் படுகிறார்கள் என்பது முன்னரே காட்டப் பட்டுவிட்டதால் பேய் கொல்லும் காட்சி யில் பெரிய அளவிலான திகிலில்லை. இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் நடிகர்கள். அருள்நிதியும் அவருடைய நண்பர்களாக நடித்திருக்கும் ரமேஷ் திலக், சனத், அபிஷேக் ஜோசப் ஆகியோரும் கொடுத்த வேலையை முறையாகச் செய்திருக்கிறார்கள். தலா ஒரு காட்சியில் வந்துபோனாலும் எம்.எஸ். பாஸ்கர், மதுமிதா இருவரது நகைச்சுவை நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் போதிய வாய்ப்பு இல்லாததால் படத்தில் நகைச்சுவையும் சுருங்கிவிட்டது.

கலை இயக்குநர் ஆர். ஷங்கர், ஒளிப் பதிவாளர் அரவிந்த்சிங், படத்தொகுப் பாளர் புவன். சீனிவாசன் ஆகியோர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் புதுமையான காட்சிகள் போது மான அளவு இல்லாததால் காலனியில் சுவாரசியம் குறைந்துவிட்டது. ஆகவே பார்வையாளர்களை மிரட்ட வேண்டிய டிமான்ட்டி காலனி வழக்கமான பேய்ப் படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x