Last Updated : 10 Apr, 2015 12:08 PM

 

Published : 10 Apr 2015 12:08 PM
Last Updated : 10 Apr 2015 12:08 PM

இதுவரை வெளிவராத நிஜ சூப்பர்மேன்!

சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் பறந்து பறந்து செல்லும் பிரம்மாண்டக் கதைக்களங்களும் நவீனத் தொழில்நுட்பங்களும், ஹாலிவுட் உலகின் வாய்பிளக்க வைக்கும் கிராஃபிக்ஸ்களின் உபயமும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை வசியம் செய்யக் கூடிய எவர்க்ரீன் பொழுதுபோக்குப் படங்கள்.

ஆனால், கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுமளவுக்கு மிக உயரமான மலைகளில் இருந்தும், மேகங்களுக்கு ஒட்டடை அடிக்கும் வானுயரக் கட்டிடங்களின் உச்சியில் இருந்தும் குதிக்கும் ரியல் ஹீரோக்களின் நிஜ வாழ்க்கைப் பின்னணியில் எந்த ஒப்பனையும் இல்லை; எந்தத் தொழில்நுட்பங்களும் இல்லை. இதுபோன்ற ரியல் ஹீரோக்களை மையப்படுத்திய ஒரு ஆவணப்படம் அமெரிக்காவில் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் பெயர் ‘சன்ஷைன் சூப்பர்மேன்’.

கிராபிக்ஸ் உதவியுடன் கற்பனை மனிதர்கள் செய்யும் சாகசங்கள் எல்லாம் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டவை. அதுவே பல நேரங்களில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், ரத்தமும் சதைமான நிஜ மனிதர்கள் செய்யும் இந்தச் சாகசங்கள் தந்திரங்கள் எதுவுமற்ற திகில் ரகம்.

அதுவும் தலையில் கேமராக்களைக் கட்டி கொண்டு அந்தரத்தில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தபடி, மலையிலிருந்து நேரடியாகக் குதிக்கும் காட்சிகள் திக் திக் என்று இருக்கும். பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்யும் இதுபோன்ற சாகசங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மார்க் ஸ்டார்க்.

உலகப் புகழ்பெற்ற பேஸ் ஜம்பிங் வீரர் கார்ல் பொயினிஸின் அனுபவம்தான் இந்தப் படத்தின் பின்னணிக் கதை. இவர் பேஸ் ஜம்பிங் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர். இவரது மனைவியும் இதேபோல ஒரு பேஸ் ஜம்பிங் வீராங்கனை. இருவரும் சாகசச் சாதனைகளைச் செய்யும்போதே இதயத்தையும் பரிமாறிக் கொண்டவர்கள்.

நார்வேயில் உள்ள ட்ரோல் வால் மலையில் 1984-ல் மலை உச்சியில் இருந்து அவர் குதித்துக் கின்னஸ் சாதனை செய்தார். இந்தச் சாதனையைத் தொடர்ந்து அங்கு எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. இப்படி கார்லின் வாழ்க்கை அனுபவத்தைச் சாதனையும் துயரமும் நிறைந்த கதையாக்கி, அதில் அவரது ஒப்பனையற்ற காதலையும் குழைத்து, பேஸ் ஜம்பிங் வீரர்களின் சாகசங்களையும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நம் ஊரில் ஆவணப் படங்களை அங்கீகரிப்பது அரிது. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. ஆவணப்படத்தைத் திரையரங்குகளில் தான் வெளியிடுவார்கள். மக்களும் அந்தப் படத்தை அங்கீகரிக்கும் வகையில் காசு கொடுத்துப் பார்ப்பார்கள். அந்த வகையில் இந்தப் படத்துக்காக அமெரிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தப் படம் சாகசங்களின் சாட்சியாக இருக்கப்போகிறது என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x