Published : 10 Apr 2015 12:23 PM
Last Updated : 10 Apr 2015 12:23 PM
நேற்றுவரை யாரெனத் தெரியாத ஒருவர் மீது திடீரெனக் காதல் ஏற்படுகிறது. காதல் என்னும் மாயம் தீண்டிய உடன், இனி ஒருவர் இல்லாமல் அடுத்தவர் வாழ முடியாது என்ற அளவுக்கு நெருக்கமான உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.
‘உனக்கெனப் பிறந்தேன்’ என்ற எண்ணத்தையும் ‘அவளில்லாமல் நானில்லை’ என்னும் உணர்வையும் ஏற்படுத்தும் காதலின் அதிசயம் பல பாடல்களில் பதிவாகியிருக்கின்றன. உணர்விலும் சொற்களிலும் நெருக்கமான இரு பாடல்களை இங்கே பார்ப்போம்.
இந்திப் பாட்டு:
படம்: அதிகாரி
பாடலாசிரியர்: ரமேஷ் பந்த்
பாடியவர்கள்: கிஷோர்குமார், ஆஷா
இசை: ஆர்.டி. பர்மன்.
பாடல்:
கோயி மானே யா நா மானே
ஜோ கல் தக் தே அஞ்சானே
வோ ஆஜ் ஹமே ஜான்
ஸே பீ பியாரே ஹோகயே
அப் தோ ஹம் கோ ஏக் ஹீ
சப்னா பூரா கர்னா ஹை
பொருள்:
யாரும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி
நேற்றுவரை அறியாமல் இருந்த அவள்
இன்று என்னுடைய உயிரினும்
இனியவளாய் ஆகிவிட்டாள்.
தற்பொழுது என் தவிப்பெல்லாம் என்
பொற்கனவை மெய்யாக்குவதே
வரும் எல்லாப் பிறவிகளிலும்
என் அன்பைப் பெறும் திலகமாக
உன் நெற்றியை ஆக்குவது
என்று முதல் உன்னை அறிந்தேனோ
அன்று முதல் விதியை நம்பினேன்
உன்னுடையவனாக ஆக விரும்பி
உன்னுடையவனாகவே ஆகிவிட்டேன்.
அப்படிப் பார்க்காதே அழகிய சிரிப்புடன்
எனக்கு ஏதோ ஆகிவிடுகிறது.
உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றால்
உள்ளம் கட்டவிழ்ந்து சென்றுவிடுகிறது.
இதயத்தைக் கொடுத்து இதயம் கிடைத்த பின்
எதற்கு இந்தத் திரை என்னிடம்
கண்களுக்குக் கண்கள் காட்டிவிட்டது சைகை
விழிகளில் வரிசை கன்னங்களில் சிவப்பு
முகத்தில் பூத்தன பூக்கள்
இத்தனை தடவை உன்னைக் கண்டும்
எனக்கு மனம் நிறைவதில்லை
கருமை நிறக் கூந்தல்
கட்டழகு செந்நிற உடல்
அத்தனையும் ஆதாரமாகும் என்
எத்தனை நீண்ட வாழ்க்கைக்கும்.
எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி
நேற்றுவரை அறியாமல் இருந்த அவள்
இன்று என்னுடைய உயிரினும்
இனியவளாய் ஆகிவிட்டாள்.
பாடலைப் பாடிய கிஷோர் படத்தில் நடித்த தேவ் முகர்ஜியின் தாய்மாமா. இந்தப் பாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் கண்ணதாசனின் வரிகளைத் தன் மெல்லிய ரீங்காரம் போன்ற குரலில் அச்சு அசலாக எதிரொலிக்கும் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய தமிழ்ப் பாடலைப் பாருங்கள்:
படம்: வாழ்க்கைப் படகு
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
பாடல்:
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
(நேற்று)
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன?
பூமுகம் சிவந்தா போகும்
(நேற்று)
பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்தது கனவோ என்று
வாடினேன் தனியாய் நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
(நேற்று)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT