Published : 03 Apr 2015 11:59 AM
Last Updated : 03 Apr 2015 11:59 AM

திரைப் பாடம் 20- பயணம் செய்தால் புதையல் கிடைக்கும்!

மூன்று நண்பர்களின் கதை. கபீர் தனக்குத் திருமணம் நிச்சயமானதால் தன் இரு நண்பர்களுக்கு பேச்சிலர்ஸ் பார்ட்டி கொடுக்க நினைக்கிறான். ஸ்பெயின் நாட்டிடுக்குச் சென்று அங்கு ஒவ்வொருவருக்கும் பிடித்த வீர தீர சாகசம் ஒன்றைச் செய்ய வேண்டும். இதுதான் பொதுத் தீர்மானம். இம்ரான் உற்சாகமாகப் புறப்படுகிறான். அர்ஜுன் பணிச்சுமையால் முதலில் மறுத்துப் பின்னர் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் ஸ்பெயின் பயணம்தான் படம். ஒரு கேளிக்கைப் படம் போலத் துவங்கி வாழ்வியலை அழகாகச் சொல்கிறது ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’.

பிரபலக் கவிஞர் ஜாவேத் அக்தர் கவிதைகள் படம் முழுதும் வருகின்றன. அவர் மகன் ஃபரான் அக்தர் மூன்று நாயகர்களின் ஒருவர். வசனமும் ஃபரான் எழுதியிருக்கிறார். மகள் ஜோயா அக்தர்தான் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைஃப், அபய் தியோல் எனப் பெரிய நட்சத்திரங்கள் சாதாரண கதாபாத்திரங்கள் ஏற்று நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

காதலியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டாலும் கல்யாணத்துக்கு முழுவதும் தயாராகாத கபீர், வேலையையே வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் அர்ஜுனுக்கோ பணம் சம்பாதிப்பது ஒன்று தான் குறி. விளையாட்டுப் பிள்ளைபோல வரும் இம்ரான், தன்னையும் தன் தாயையும் விட்டுச் சென்ற தந்தையையும் இந்தப் பயணத்தில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம். இவர்கள் பயணத்தில் குறுக்கிடுகிறாள் லைலா.

ஆழ் கடலில் நீந்தும் ஸ்கூபா டைவிங் என்றால் அர்ஜுனுக்கு பயம். அதை லைலா உதவியுடன் வெல்கிறான். அது அவனை லைலாவுடன் காதல் கொள்ள வைக்கிறது. லைலாவின் வருகையால் கபீரை சந்தேகப் படும் நடாஷா, திருமணத்துக்கு முன்பே மனைவியின் ஆக்கிரமிப்பு உணர்வை வெளிப்படுத்த முடியாமல் மூச்சுத் திணறு கிறான் கபீர். தன் தந்தையைக் கண்டு அவர் குடும்பத்தைப் பிரிந்த காரணத்தை அறிகிறான் இம்ரான்.

சாலைவழிப் பயணம் சாகஸத்துக்கு மட்டும் அல்ல, பல புதிய அனுபவங்களையும் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. சண்டையிடும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர். வாழ்க்கை என்பது இந்தத் தருணத்தில் முழுவதுமாய் வாழ்ந்து தீர்ப்பதுதான் என்று புரிந்துகொள்கிறார்கள்.

பணத்துக்காக ஓடிய அர்ஜுன் செல்போனை வைத்துவிட்டுக் காதலியுடன் வானம் பார்த்து ரசிக்கிறான். காதலையும் வாழ்க்கையையும் சுதந்திரத்தோடும் இயல்போடும் அணுகும் லைலாவால் தன் வாழ்க்கையைப் புதுப்பிக்கிறான். நிராகரிப்பின் வலியைத் தந்தை மூலம் உணர்ந்த இம்ரான், நண்பனுக்கு இழைத்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்கிறான். தான் திருமணத்துக்குத் தயாராக இல்லை என்பதை அறிந்த கபீர், தன் கல்யாண ஏற்பாட்டை நிறுத்துகிறான். தன் காதலியை மனைவியாக்குவதை விடத் தோழியாக்குவதே சரி என்று உணர்கிறான்.

ஒவ்வொரு சாகஸ விளையாட்டும் ஒரு குறியீடாகப் பயன்படுகிறது. ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, விமானத்திலிருந்து குதித்துப் பாராசூட்டில் பறப்பது, காளைகள் துரத்த ஓடுவது என ஒவ்வொரு விளையாட்டிலும் கதை முன்னேறுகிறது.

வாழ்க்கை ஒருமுறைதான்; அந்த வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்துகொள்வது முக்கியம். வாழ்வின் நோக்கம் அறிதல் கொடுப்பினை. அது இவர்களுக்கு ஒரு சாலைவழிப் பயணத்தில் கிடைத்துவிடுகிறது.

2011-ல் வெளியாகி விருதுகளையும் பாராட்டுகளையும் வசூலையும் குவித்த படம் இது. கதைக்களமாக ஸ்பெயின் தேசத்தைத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். ரம்மியமான இயற்கைக் காட்சிகள், கலாச்சாரத்தில் தோய்த்தெடுத்த கேளிக்கைகள், விளையாட்டுகள் என இந்தப் படத்தை ஸ்பெயின் தேசம் வண்ணமயமாக்கி விடுகிறது. குறிப்பாக அந்தத் தக்காளித் திருவிழா. ஹோலிப் பண்டிகை போலப் பொடிக்குப் பதில் தக்காளி தாக்குதல்.

ஒரு சாதாரண ரோட்மூவி போலத் தோன்றும் இந்தப் படத்தில் யோசிக்க வைக்கும் விஷயங்கள் உண்டு.

எதற்கும் நேரமில்லாமல் ஓடிச் சம்பாதித்து விட்டு நாற்பது வயதுக்கு மேல் உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிக்கணும் என்று நினைக்கிற இளைஞர்கள் பெருகி வரு கிறார்கள். நாற்பது வயது வரை வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வாழ்வது என்பது நாளைய இலக்கு நோக்கி ஓடுவதா அல்லது இன்றைய பயணத்தை ரசிப்பதா?

மைண்ட்ஃபுல்னெஸ் என்ற நிலையை அறிய விப்பாசனா போன்ற பயிற்சிகள் உண்டு. புத்தர் கூறியது போல நேற்று, இன்று என்ற நிலைகளில் இயங்கி வரும் மனதை இன்றைய செயல்களில் பூரணமாக ஈடுபடுத்துவதுதான் அது. ஒருகோப்பைத் தேநீர் குடிப்பதாக இருந்தாலும், கை குலுக்கலாக இருந்தாலும், காய் நறுக்குவ தாக இருந்தாலும் மனம் லயித்துச் செய்யும்போது ஒரு தெய்விகத் தன்மை கிட்டுகிறது. அதுபோலச் சுற்றுலாப் பயணமும் மனதை ஒருமுகப்படுத்தும். நேற்றைய பாரங்களையும் நாளைய பயங்களையும் நீக்கும். புனித யாத்திரை என்ற தனிச்சொல் எதற்கு? யாத்திரை என்றாலே புனிதம்தானே?

துறவிகளும், ஞானிகளும், படைப்பாளிகளும், பக்தர்களும் தங்களை அறிந்துகொள்ள, புதுப்பித்துக்கொள்ள பயணங்கள் உதவுகின்றன. இன்று நம் தேசத்திலும் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இடங்களைப் பார்க்கும் அவசரத்தில் ஓடாமல் பாதைகளை ரசிக்கும்போது மனம் கரைந்து ஆன்மிக அனுபவமாகிறது.

வேலையில் மனஅழுத்தம் உள்ளவர்கள் இலக்கில்லாமல் ஒரு நான்கு நாட்கள் சுற்றி வந்தால் அந்தப் புது அனுபவம் புலப்படும்.

வாழ்க்கை இரண்டாம் முறை வாழக் கிடைக்காது என்பதுதான் இந்தத் திரைப்படத் தலைப்பின் அர்த்தம். இந்துக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருக்கலாம். இருக்கட்டும். இந்தப் பிறவியை முழுவதுமாக வாழ்வோமே. இந்தக் கதாமாந்தர்கள் மூவரையும்போலக் கடந்த காலத்தின் பாரம் துறந்து, தங்கள் நோக்கம் அறிந்து நிகழ் காலத்தை முழுவதுமாக வாழலாமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x