Published : 02 May 2014 01:51 PM
Last Updated : 02 May 2014 01:51 PM
விளம்பரங்கள் இல்லாமல் சினிமாக்கள் இல்லை. ஆனால் விளம்பரங்களால் மட்டும் சினிமா இல்லை. விளம்பரங்களே இல்லாமலும் (உலகம் சுற்றும் வாலிபன்), குறைந்தபட்ச விளம்பரத்தோடும் (முள்ளும் மலரும்) அன்று பல படங்கள் மக்களின் மனதை வென்றன. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழ். விளம்பரங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை.
ஒரு நல்ல சினிமாவுக்கு மிகப் பெரிய விளம்பரம், அதைப் பார்த்தவர்கள் வெளியே சொல்லும் நல்ல வார்த்தைகள்தான். ஆனால், முதலில் அவர்களைப் பார்க்க வைக்க, திரையரங்குகளுக்கு வரவழைக்க வேண்டும். அதற்கு விளம்பரங்கள் அவசியம். இன்று ஒரு திரைப்படத்தின் திரையரங்கு வாழ்க்கை அதிகபட்சம் மூன்று வாரம் அல்லது 25 நாட்கள் மட்டுமே. முதல் வாரம் வசூல் மிக முக்கியம். பத்து வருடங்களுக்கு முன்பு, முதல் வார வசூல், படத்தின் மொத்த வசூலில் 20 முதல் 25 சதவீதம் மட்டுதான். இன்று ஒரு படம் முதல் வாரம் வசூல் செய்யவில்லை என்றால், அதோ கதிதான். இரண்டாவது வாரம் பிக்அப் ஆகும், வசூல் வரும் என்ற வாய்ப்பெல்லாம் அனேகப் படங்களுக்கு இல்லை. ஏனெனில், அடுத்த வாரம், மேலும் இரண்டு முதல் நான்கு புதிய படங்கள் வெளிவந்து, கடந்த வாரம் வந்த படம், பாராட்டப்படும் படமாக இருந்தாலும் பழைய படமாகக் கருதப்பட்டு, பெரும்பாலான மக்கள் அந்த வாரப் படங்களை மட்டும் கவனத்தில் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. எனவே, முதல் வார வசூல் சாதனைதான் தற்போது படங்களின் வசூல் வெற்றிக்கு ஆதாரம்.
படம் வெளியான முதல் மூன்று நாட்களும் / முதல் வாரமும், பெரிய வசூலை ஒரு படம் செய்ய, அதிகபட்ச பார்வையாளர்களைக் கவனிக்க வைக்கும் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.
படம் வெளிவரும் முன் அதிகபட்சமாகக் கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள், ஒரு படத்தின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி, முதல் மூன்று நாட்கள் / முதல் வாரம், சிறந்த வசூலைக் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு விளம்பரப்படுத்தப்படும் படங்கள், ஏதோ ஒரு விதத்தில், பார்வையாளர் களைக் கவர வேண்டும் என்பதும் அவசியம் (முன்னணி / எதிர்பார்க்கப்படும் நடிகர், இயக்குநர், பாடல்கள், பட முன்னோட்டம், பட விளம்பரங்கள் என ஏதோ ஒன்று அல்லது முடிந்தால் அனைத்தும் தேவை). வெளிவரும் முன் எந்த விதத்திலும் மக்களைக் கவரும் அம்சம் எதுவுமே இல்லாத ஒரு படத்திற்கு அதிக விளம்பரங்கள் செய்வதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.
விளம்பரங்கள் எவ்வாறு ஒரு திரைப்படத்தின் மீது மிகப் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தி, வசூலில் சாதனை செய்தன என்பதற்குத் தமிழில் முதல் உதாரணம் 1948-ல் வெளிவந்த எஸ்.எஸ். வாசன் அவர்களின் படம் சந்திரலேகா. முப்பது லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஆன விளம்பரச் செலவு மட்டும் 5 லட்சத்துக்கு மேல். அப்போது, 5 லட்ச ரூபாயில், ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தையே எடுத்துவிட முடியும். அத்தகைய சூழ்நிலையில், விளம்பரங்களுக்கு 5 லட்சம் செலவு செய்து வாசன் ஒரு பெரிய ஆர்வத்தை மக்களிடம் உண்டாக்கினார். படம் வெளிவந்த உடன், அப்படத்திற்கு ஜேஜே எனக் கூட்டம் அலை மோதியதற்கு, மிகப் பெரிய விளம்பரங்களும் ஒரு காரணம். பெரும் விளம்பரங்கள் செய்து, மக்களைக் கவர நினைக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் வாசனே முன்னுதாரணம்.
வாசன் அவர்களைப் பின்பற்றிப் பல பெரிய தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் விளம்பரங்களில் கவனம் செலுத்தி, மரபார்ந்த விளம்பர உத்திகளோடு , புதுமையான விளம்பர உத்திகளையும் கையாண்டு தங்களின் படங்களை மக்கள் மத்தியில் வெளியாகும் முன்பே பிரபலப்படுத்தி வெற்றி கண்டு வருகிறார்கள்.
அதேபோல சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்து வெற்றி கண்டுவரும் சி.வி. குமார், பல பெரிய நிறுவங்களுடன் இணைந்து அவர் தயாரித்து வெளியிட்ட சில படங்களின் விளம்பர + விநியோகச் செலவு, படத் தயாரிப்புச் செலவைவிட அதிகம். சிறிய, மீடியம் பட்ஜெட்டில் வெளிவந்த சமீபத்திய சில படங்களை உள்ளடக்கிய தகவல்கள் இதை நமக்கு உணர்த்தும்.
ஒரு சிறிய பட்ஜெட் படத்திற்கு, தயாரிப்புச் செலவைவிட விளம்பர + விநியோகச் செலவு அதிகமாகும். நடுத்தர, மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு, விளம்பர + விநியோகச் செலவுகள், தயாரிப்புச் செலவில் 20 முதல் 40 சதவீதம்வரை ஆகும் (உதாரணம் இவன் வேற மாதிரி).
தமிழ் சினிமாவில் தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத நிலையில் குறைந்தது 200 படங்களாவது இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம். தயாரிப்புச் செலவை மட்டும் கணக்கில் கொண்டு தயாரிக்க முற்படும் தயாரிப்பாளர்களிடம், படம் தயாரானவுடன் விளம்பரம் + விநியோகம் செய்யப் பணம் இருப்பதில்லை. இது பாதிக் கிணறு மட்டுமே தாண்டிய ஒரு நிலைமை. அந்தச் செலவுகளைச் செய்ய விநியோகஸ்தர்களும் முன்வராதபோது, படம் எடுத்து முடிப்பதற்குள், இருந்த எல்லாப் பணத்தையும் செலவு செய்துவிட்டபடியால் மேற்கொண்டு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல், படங்கள் வெளிவராமல் தவிக்கின்றன.
தயாரிப்புச் செலவை மட்டுமே பார்க்காமல், விளம்பர + விநியோகச் செலவுகளையும் படத்தின் பட்ஜெட்டில் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த மொத்தப் பணத்தையும் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நிலைமை இருந்தால் மட்டுமே ஒரு படத்தைத் தயாரிக்க முற்பட வேண்டும். தயாரிப்புச் செலவுக்கு மட்டும் ஏற்பாடு செய்துகொண்டு தயாரிப்பில் இறங்கினால், விளம்பரப்படுத்துவதற்கான பணம் இல்லாமல், உங்கள் படம் மக்களைச் சென்று சேர முடியாமல் போகலாம். இதனால் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம்.
படம் எடுத்தால் போதும் என்பது பாதிக் கிணறு தாண்டும் நிலைதான். விளம்பரச் செலவும் சேர்ந்தால்தான் முழுக் கிணறும் தாண்டுவதாகும். முழுக் கிணறும் தாண்டும் நிலை வந்த பின் படத் தயாரிப்பில் இறங்குவதே புத்திசாலித்தனம்.
(dhananjayang@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT