Published : 30 May 2014 12:00 AM
Last Updated : 30 May 2014 12:00 AM
ரன்பீர் கபூருடன் ‘ ராக் ஸ்டார்’ இந்திப் படத்தில் 2011-ல் அறிமுகமாகும் வரை நர்கீஸ் ஃபக்ரியை பாலிவுட் அறியாது. அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளியதும் மடமடவென்று நர்கீஸுக்குப் படங்கள் கிடைத்ததில் காத்ரீனா, தீபிகா, சோனாக்ஷி, கங்கணா என ஹாட் ஹீரோயின்கள் கோலோச்சும் பாலிவுட்டின் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தார் நர்கீஸ். இந்திய சர்வதேச விருதுகள் விழாவில் (ஐ.ஐ.எஃப்.ஏ) சிறந்த சூடான ஜோடி விருதை ராக் ஸ்டார் பாத்துக்காக வென்ற நர்கீஸ், இந்தியப் பெண் அல்ல. எமி ஜேக்சன், சன்னி லியோன் போல அந்நிய தேசத்திலிருந்து பாலிவுட்டை ஆக்கிரமிக்க வந்தவர். நர்கீஸின் அப்பா ஒரு பாகிஸ்தானி. அம்மா செக் தேசத்தைச் சேர்ந்த பெண். இப்படியொரு கலவையில் உருவான ஹாட் சாக்லேட்டாக இருக்கும் நர்கீஸ், உயரம், உருவம் எல்லாவற்றிலுமே பாலிவுட் ரசிகர்களை ஒரே வீச்சில் கவர்ந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
நியூயார்க்கில் பிறந்து வளர்ந்து அங்கே வளரும் மாடலாக ஊடகங்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்த நேரத்தில் அப்பாவின் பூர்வீகம் நர்கீஸுக்குத் தெரியவர, ஆவலுடன் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்கிறார். அங்கே அவர் கண்ட ஆச்சரியகரமான வஸ்துக்கள் இந்தி மசாலா சினிமாக்கள். கராச்சியில் மாய்ந்து மாய்ந்து இந்திப் படங்களை பார்த்த நர்கீஸுக்கு பாலிவுட்டில் நமது அதிஷ்டத்தை ஏன் பரிசோதித்துப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அதற்கான முயற்சியைத் தொடங்க, ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே, மெயின் தேரா ஹீரோ என வரிசையாகப் படங்கள் கிடைத்தன. தனது சொந்த தேசத்தின் அழகை அதுவரை அவ்வளவாய்க் கண்டுகொள்ளாத ஹாலிவுட் தற்போது ’ ஸ்பை’ படத்தின் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க இவரை அழைத்திருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நர்கீஸ் கோலிவுட்டுக்கு வருவதுதான் தற்போதைய சூடான செய்தி. பிரசாந்த் நாயகனாக நடித்துவரும் ‘சாஹசம்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வருகிறார் நர்கீஸ். இதைப் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். 2 நாள் கால்ஷீட்டுக்கு 25 லட்சம் அள்ளிக்கொடுக்க இருக்கிறார்களாம் நர்கீஸுக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT