Published : 24 Apr 2015 12:35 PM
Last Updated : 24 Apr 2015 12:35 PM
அப்பா சூப்பர் ஸ்டார், கணவர் நாடறிந்த நடிகர். ஆனால் பேச்சில் பந்தா காட்டுவதில்லை ஐஸ்வர்யா தனுஷ். ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில் நம்மிடம் பேசியதிலிருந்து...
இம்முறை கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஆகியோருடன் இணைந்திருக்கிறீர்களே...
‘3’ படம் மாதிரியே ‘வை ராஜா வை’ எடுத்திருப்பேன் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும். முழுக்கக் காதலைச் சுற்றியே ‘3’ இருந்தது. ‘வை ராஜா வை’ முழுக்க ஒரு கமர்ஷியல் படம். இப்படம் பார்க்க வரும்போது ‘3’ படத்தை நினைப்பில் இருந்து எடுத்துவிட்டு வாருங்கள்.
நான் எழுதியிருக்கும் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ, அவர்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்படத்துக்குக் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் பொருத்தமாக இருந்தார்கள்.
பிறந்த வீடு புகுந்த வீடு என எல்லோரும் சினிமா பின்னணி கொண்டவர்கள். படம் இயக்கும் முன் ஆலோசனை கேட்பீர்களா?
குடும்பத்தில் இருக்கும் அனைவருமே திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதால் தான் என்னுடைய வேலை எளிமையாக இருக்கிறது. ஒரு கதை எழுதினேன் என்றால் குடும்பத்தில் இருக்கும் இயக்குநர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை என்பது என் கருத்து.
உங்கள் வளர்ச்சியில் அம்மாவுக்குப் பங்கு உண்டா?
நான் படப்பிடிப்புக்குச் சென்றால் குழந்தைகளை அம்மாதான் பார்த்துக் கொள்கிறார். அம்மாவிடம் விட்டுச் செல்வதால்தான் என்னால் எந்தப் பயமும் இன்றி படத்தை இயக்க முடிகிறது. என்னுடைய குழந்தைகள் நாள் முழுவதும் பாட்டியுடன் விளையாடியபடி ஜாலியாக இருப்பார்கள்.
குழந்தைகளோடு இருக்கும் நேரம் எவ்வளவு?
‘3’ முழுக்கச் சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், ‘வை ராஜா வை’ படத்துக்குக் கஷ்டப்பட்டேன். நிறையப் பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தும்போது குழந்தைகளின் நினைப்பு வந்தால் கஷ்டமாக இருக்கும்.
அதேபோலச் சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது காலையில் இருந்து மாலைவரை படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தைகளைக் கவனித்துத் தூங்க வைத்துவிட்டு இரவு படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவேன். காலையில் குழந்தைகள் எழும்பும் முன் வீட்டுக்கு வந்துவிடுவேன். வெற்றிபெற வேண்டும் என்றால் கஷ்டப்பட்டுத்தானே ஆக வேண்டும்.
எந்த மாதிரியான இயக்குநராகத் தெரிய விருப்பம்?
அதற்கு இன்னும் நான் 4, 5 படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முழுக்கக் காதல் பின்னணியில் ஒரு படம், இப்போது கமர்ஷியல் பாணியில் ஒரு படம். தனிப்பட்ட முறையில் கேட்டால் ஐஸ்வர்யா எல்லா விதமான கதைகளையும் சூப்பராக இயக்குவார் என்று அனைவரும் சொல்ல வேண்டும். அதுதான் என் ஆசை.
என்ன மாதிரியான படங்கள் பார்க்கிறீர்கள்?
எல்லா ஹாலிவுட் படங்களையும் பார்த்துவிடுவேன். எனக்கும் தனுஷுக்கும் நேரம் கிடைத்தால் போதும், ஏதாவது திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்போம். இப்போது தனுஷ் நிறைய உலக சினிமாக்கள் பார்க்கிறார். அவருடன் நானும் உட்கார்ந்துவிடுகிறேன்.
வாசிக்கும் புத்தகங்கள்?
புத்தகங்கள் விஷயத்தில் எனக்கு த்ரில்லர் வகை நாவல்கள் ரொம்பப் பிடிக்கும். சைக்காலஜியும் பிடிக்கும்.
‘ஒ மை காட்’ இந்திப் படத்தின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகவும், உங்கள் தந்தை அதில் நடிக்க, நீங்கள் இயக்க இருப்பதாகவும் நடுவில் தகவல்கள் வெளியானதே..?
அப்படி ஒரு எண்ணமே இல்லை. தவறான செய்தி இது.
பிரபலங்களின் பின்புலம் உங்களுக்கு உதவியா உபத்திரவமா?
அப்பா, கணவர் இருவருக்குமே நல்ல பெயர் இருக்கிறது. அவர்களுடைய மகள், மனைவி என்ற முறையில் எந்த ஒரு கெட்ட பெயரையும் வாங்கி அவர்களுக்குக் களங்கம் விளைவிக்காமல், நல்ல பெயர் எடுத்தால் போதும்.
எப்போதுதான் ரஜினியை இயக்கப் போகிறீர்கள்?
அப்பாவை இயக்கும் அளவுக்கு அனுபவம் வரவில்லை என்பதுதான் உண்மை. முதலில் நான் என்னுடைய இயக்கத்தில் நிறைய படங்கள் பண்ணிக்கொள்கிறேன். அதற்குப் பிறகு பார்க்கலாம். அதுவரை ஒரு ரசிகையாக அப்பாவின் படங்களை விசில் அடித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT