Published : 02 May 2014 01:52 PM
Last Updated : 02 May 2014 01:52 PM

முகம் காட்ட மறுக்கும் அஜித்!

திரையுலகம் இன்று திறந்த வெளி மைதானமாக இருக்கிறது. திறமை இருக்கும் யாரும் தனது அதிர்ஷ்டத்தை இங்கே பரிசோதனை செய்து பார்க்க முடியும். ஆனால் தொண்ணூறுகளின் நிலைமை அதுவல்ல. ஏற்கனவே திரையுலகில் தங்களுக்கென்று தனிப் பாதை அமைத்துக்கொண்ட பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் முழு வீச்சில் சினிமாவில் நுழைந்து, தங்களுக்கான இடத்தை அதிகச் சிரமமில்லாமல் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘லாஞ்சிங் பேட்’ என்றும் ‘காட் ஃபாதர்’ என்றும் வருணிக்கப்படும் பின்புலமோ, வழிகாட்டியோ இல்லாமல், தன்னை மட்டுமே நம்பித் திரைக்குள் அடி எடுத்து வைத்தவர்களில் ஒருவர் அஜித். இவரைப் போல நுழைந்தவர்கள் வந்த வேகத்திலேயே அடையாளம் பெற முடியால் அடித்துப் பிடித்து சினிமாவை விட்டு விலகியிருக்கிறார்கள். அஜித்தோ, எந்தத் துறையாக இருந்தால் என்ன, உழைத்துக் கொண்டேயிருந்தால் ஒரு நாள் உயர்ந்துவிடலாம் என்று 20 வயதில் உழைக்க ஆரம்பித்தவர். இன்று தனது ரசிகர்களால் ‘தல’ என்று கொண்டாடப்படும் வசீகரமான நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அஜித்தின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது அவரது உழைப்பு மட்டும்தானா?

செய்வது துணிந்து செய்!

அவ்வையும் பாரதியும் எழுதிய ஆத்திச்சூடிகள் அஜித்துக்குப் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. ஆத்திச்சூடியில் சொல்லப்பட்ட அத்தனை குணங்களும் தன்னிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அஜித், அவற்றில் பலவற்றைத் தன் வசமாக்கிக்கொண்டிருக்கிறார். எனினும் எவ்வித அலட்டலும் இல்லாமல் வாழ்கிறார். “மனித முன்னேற்றத்துக்குத் தேவையான அத்தனையும் ஆத்திச்சூடியில் இருக்கிறது. ஆனால் ஆத்திச்சூடியை நாம் கண்டுகொள்வதே இல்லையே” என்ற வருத்ததுடன் ஆத்திசூடியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதைச் சிறு நூலாக அச்சிட்டுத் தன் சந்திக்கும் பலருக்கும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

உங்களுக்குப் பிடித்த நட்சத்திரம் யாரென்று கேட்டால் பெரும்பாலான ரசிகர்கள் குறிப்பிடும் வெகு சிலரில் அஜித்துக்கும் ஒரு கம்பீரமான இடம் கிடைத்திருக்கிறது. இந்த இடம் அவருக்குச் சட்டென்று கிடைத்துவிடவில்லை. 22 ஆண்டு கால உழைப்பின் விளைவு இது. செய்வதைத் துணிந்து செய்ய வேண்டும் என்ற முனைப்பு, யாருக்கும் எதற்காகவும் பயந்து விலகக் கூடாது என்ற தெளிவு என அஜித்தின் ஆளுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அஜித்துக்கு நடனம் ஆடத் தெரியவில்லை. அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்பது அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. இதே விமர்சனம் எம்.ஜி.ஆர். மீதும் வைக்கப் பட்டது. ஆனால் ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடி னார்கள். அதேபோன்ற வசீகரத்தை இன்று அஜித்திடமும் காண முடியும். இந்த வசீகரத்தின் ஆதார வலு அஜித்தின் எளிமை.

நட்சத்திர சாமான்யன்

முதுமையை எப்படியெல்லாம் மறைக்க முடியும் என்று ஒப்பனைக்குள் ஒளிந்துகொள்ளும் முகங்கள் நிறைந்த திரையுலகில், எனது இயல்பான தோற்றத்தையே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளட்டும், கதைக்கும் காட்சிக்கும் அவசியமிருந்தால் தவிர என் தலைக்கு ‘மை’ பூசி நடிப்பதில் விருப்பமில்லை என்று நரைத்துவிட்ட தலையுடனேயே தனது சமீபகாலப் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார் அஜித். உண்மையும் இயல்புமே எளிமையின் இன்னொரு முகம் என்பதை உணர்ந்து அதை விடாப்பிடியாகக் கடைபிடிக்கும் வாழ்க்கையை வாழ முற்படும் அஜித், ஆராவாரமற்ற சாமன்ய மனிதனாக வாழ விரும்புகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் வரிசையில் நின்று வாக்களிக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான இவர், நடிகன் என்றால் கொம்பு முளைத்தவன் அல்ல என்கிறார். நட்சத்திரங்களுக்குப் பெரும் பலமாக இருப்பவை ரசிகர் மன்றங்கள். ஆனால் தனது ரசிகர் மன்றங்களைக் கலைக்கும் துணிச்சல் கொண்டவர் அஜித். அப்படியும் அதே அன்புடன் அஜித்தை ஆராதிக்கிறார்கள் ரசிகர்கள். அஜித் படத்துக்கான தொடக்க கட்ட வசூலே இதைத் தெளிவாக்கிவிடும். இத்தனை ரசிகர்களும் அளவற்ற துணிச்சலும் இருந்தும் அரசியலிருந்து அடியோடு விலகியிருக்கும் கலைஞராகவே இருக்கிறார் அஜித்.

காரைத் தள்ளிய அஜித்

சினிமாவில் மட்டும் சாகசங்கள் செய்யும் மனிதனாக இருப்பதில் விரும்பமில்லாத அஜித், நிஜ வாழ்விலும் நாயகனாக இருக்க விரும்பியது திரையுலகில் அதுவரை இல்லாத முன்மாதிரி. இருபது வயதில் தொடங்கி மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்டவர், பிறகு முப்பது வயதுமுதல் உயிர் பயத்தையும், சினிவில் தனக்கிருந்த சந்தை மதிப்பையும் ஓரங்கட்டிவிட்டு, தன் வேகத்தை ஃபார்முலா கார் பந்தயங்களில் பரிசோதனை செய்து பார்த்தவர். பெரிய ஸ்பான்ஸர்கள் கிடைக்காத நிலையிலும் கார் பந்தயங்களில் விடாமல் கலந்து கொண்ட அஜித், இதுவரை ஆடம்பாரமான கார் வைத்துக்கொள்ள விரும்பியதில்லை.

தனது நண்பரின் இன்டிகா காரில் அவருடன் அடிக்கடி இரவு வேளைகளில் சென்னையை வேடிக்கை பார்த்தபடி வலம் வருவது அஜித்தின் வழக்கம். ஒருமுறை படப்பிடிப்பு இல்லாத நாளொன்றில் நண்பரின் காரில் சென்னை, திருவான்மியூரில் இருந்து புறப்பட்ட அஜித், இரவு 9.30 மணிக்கு நண்பருடன் தியாகராய நகர் வந்திருக்கிறார். அங்குள்ள கண்ணதாசன் சிலை அருகேயுள்ள பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு திரும்பவும் திருவான்மியூர் திரும்பிச் செல்ல நினைத்திருக்கிறார்கள். ஆனால் பெட்ரோல் பங்கிற்கு அரை கிலோ மீட்டருக்கு முன்னதாகவே கார் நின்றுவிட்டது. பதற்றமடைந்த நண்பரை அமைதிப்படுத்திய அஜித், “நீ உள்ளே உட்கார். நான் காரைத் தள்ளுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே கொஞ்சமும் யோசிக்காமல் கீழே இறங்கி காரை பங்க் வரை தள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்.

அறம் செய விரும்பு

தண்ணீர்க் குடம் இல்லாத தண்ணீர்ப் பந்தலில் வினைல் விளம்பரங்கள் பளபளக்கும் காலம் இது. பல் விளக்கினால்கூட ஊடகங்களை அழைத்துச் சொல்லும் மனப்பாங்கு கொண்டவர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். ஆனால் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் தன் முகம் காட்ட விரும்பாதவர்களில் ஒருவர் அஜித். காதும் காதும் வைத்த மாதிரியல்ல, யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு யார் உதவி செய்தது என்று தெரியாமலேயே அவர்களுக்கு உதவி செய்யும் அபூர்வமான குணம் அஜித்திடம் இருக்கிறது. சமீபத்தில் இப்படி அஜித் தன் முகம் மறைத்துக்கொண்டு செய்த உதவியானது, உதவி பெற்றுக்கொண்டவரின் வழியாகவே வெளியே வந்துவிட்டது.

அவர் விவரணைச் சித்திரங்கள் வரையும் ஓவியர். மகனின் விருப்பத்தை நிறைவேற்ற அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்த்து அவனை அனுப்பி வைத்திருக்கிறார். “நான் பகுதிநேரமாக வேலை செய்து தங்கும் செலவைச் சமாளித்துக்கொள்கிறேன்” என்று ஆர்வத்துடன் அமெரிக்கா சென்ற மகனுக்கு அங்கே அதிர்ச்சி. இளங்கலை பயிலும் மாணவர்கள் வேலை செய்ய அமெரிக்கச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. அப்பாவிடம் விஷயத்தை சொல்கிறான். தன் சேமிப்பு முழுவதையும் மகனுக்காகச் செலவு செய்த அந்த ஓவியருக்கு மகனின் கடைசி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்த முடியாத இக்கட்டான நிலை. இதை அவர் தன் நண்பரிடம் சொல்ல, அது அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அஜித் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஓவியரை அழைத்து வரச்செய்த அஜித், உங்கள் மகனின் எஞ்சிய கல்விச் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் ஆனால், இது உங்கள் மகனுக்குக்கூடத் தெரியக் கூடாது என்று சொல்லி உதவியிருக்கிறார்.

கடின உழைப்பும் எளிமையும் பிறருக்கு உதவும் குணமும் கொண்ட அஜித்தை ரசிகர்கள் தலை மேல் வைத்துக்கொண்டாடுவதில் என்ன ஆச்சரியம்?

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்.

புகைப்படங்களின் காதலன்

பிரபலங்கள் நிறைந்த வீடுகளில் குழந்தைகளைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை என்று சொல்வதுண்டு. ஆனால் தனது மகள் அனோஷ்கா பிறந்தது முதல், தாம் வீட்டில் இருக்கும் எல்லா நாட்களும் மகளை படம்பிடித்துத் தேதி வாரியாகப் புகைப்படங்களைப் பாதுகாத்துவருகிறார் அஜித். தனது பால்யப் கால புகைப்படங்கள், தன் மனைவி ஷாலினியின் பால்ய காலப் புகைப்படங்களைத் தேடித் தேடிச் சேகரித்து வீடெங்கும் நிறைத்து வைத்திருக்கும் அஜித்தின் நெருக்கமான ஒரே நண்பன் போட்டோகிராபி. ” புகைப்படங்கள் நம் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் ஒளிக்காமல் சொல்லும் நண்பர்கள்” என்பது அஜித்தின் புகைப்படத் தத்துவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x