Published : 20 Mar 2015 11:33 AM
Last Updated : 20 Mar 2015 11:33 AM

திரைப் பாடம் 19: சக் தே இந்தியா - எதிரிகள் ஏன் தேவை?

விளையாட்டு உளவியலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சாண்டி கேர்டன். எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனுக்காகக் கோச்சுகளுக்காக பயிற்சி எடுத்தபோது நான் அவருக்கு உதவினேன். ஆட்டக்காரர்களுக்கு அவர்கள் விளையாடும்போது களத்தில் ஏற்படும்போது பிரச்சினைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவார்.

குறுகிய காலத்தில் ஒரு ஆட்டக்காரரின் மனதை ஆலோசனை மூலம் எப்படி நிலைப்படுத்துவது என்கிற வித்தையை அவரிடம்தான் கற்றேன். விளையாடும்போது கண நேரத்தில் மனதில் ஏற்படும் மாறுதல்கள் எப்படி விளையாட்டைப் பாதிக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்.

ஒரு கணத்தில் ஏற்படும் சிறு பிழை அந்த விளையாட்டை மட்டும் அல்ல விளையாடுபவரின் வாழ்க்கையையே கூடப் புரட்டிப் போடலாம்.

அப்படி ஒரு சம்பவம்தான் கபீர் கானுக்கு நடந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்தப் பெனால்டி ஷாட்டைத் தலைமைப் பொறுப்பில் உள்ள தானே ஏற்க, மொத்த உலகின் பார்வையும் கபீர் கான் மீது. பதற்றம் தந்த கவனத் தளர்ச்சியில் அந்த எளிதான வாய்ப்பைத் தவறவிடுகிறார். விளைவு: அவமானமான தோல்வி.

துவண்டிருக்கும் எதிர் அணித் தலைவரைக் கை குலுக்கிப் பாராட்டியதை ஒரு புகைப்படக்காரர் படம் பிடிக்க, கபீருக்குத் துரோகிப் பட்டம் கிடைக்கிறது. முஸ்லிமான கபீர் பாகிஸ்தான் அணியிடம் விலை போய்விட்டதாகக் கொந்தளிப்பு. தோல்வியின் வலியும், துரோகப் பட்டமும், புறக்கணிப்பும் ஒன்றாகத் தாக்கத் தன் சொந்த வீட்டை விட்டுத் தாயுடன் வெளியேறுகிறார் கபீர் கான்.

ஏழு ஆண்டுகள் விளையாட்டை விட்டு விலகினாலும் மனம் தகுந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது. பெண்கள் ஹாக்கி அணியின் கோச்சாகும் வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் ஹாக்கி மீது நம்பிக்கை இல்லாதிருந்த ஹாக்கி சங்கத்திடம் உலகக் கோப்பைக்கு அவர்களைத் தயார் செய்யலாம் என்று கபீர் சொல்லும்போது யாரும் அதை நம்பவில்லை. பின் ஆடவர் அணியுடன் ஒரு ஆட்டம் ஆடி கடினமான சவால் விடுத்ததும் ஹாக்கி சங்கம் உலகக் கோப்பைக்குப் பெண்கள் அணியை அனுப்பச் சம்மதிக்கிறது.

16 மாநில வீராங்கனைகள் கொண்ட பெண்கள் அணியோ ஒற்றுமையில்லாமல் கிடக்கிறது. மூத்த வீராங்கனைகளின் ஆணவம், மாநிலப் பற்று, கலாச்சார மற்றும் மொழி வேற்றுமைகள் என அவர்களை ஒன்று சேர்ப்பதுதான் முக்கியச் சவாலாக இருந்தது.

கபீரின் கண்டிப்பான நடத்தை அவர்களை வெறுப்பேற்றுகிறது, எல்லோருக்கும் பொது எதிரியாகக் கபீர் தென்பட்ட அந்தக் கணம்தான் அவர்களை ஒன்று சேர்க்கிறது. பின் அவர் மனம் அறிந்து அனைவரும் அவர் வழிகாட்டலில் அணி திரள்கிறார்கள்.

உலகக் கோப்பையில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஒவ்வொரு ஆட்டமாய் முன்னேறி இறுதிச் சுற்றில் ஆறு முறை வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் கோப்பையை வெல்கிறது இந்தியா!

ஒரு உலகக் கோப்பையின் கடைசி நேரத் தவறில் தன் வாழ்வின் மேன்மையைத் தொலைத்த கபீர் கான் பெண்கள் அணியின் சாதனை மூலம் அதை மீட்டெடுக்கிறார். ஷாஹீ அமீனின் எளிமையான கதை சொல்லலிலும், ஷாரூக் கானின் அதியற்புத நடிப்பிலும் படம் கம்பீரமாய் நிற்கிறது.

இந்தத் திரைப்படத்தை என் நிர்வாகப் பயிற்சிகளில் அதிகம் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் இந்தப் படத்திலுள்ள நுட்பமான நிறுவன உளவியல் பாடங்கள்தான்.

மூன்று முக்கிய விஷயங்களை மட்டும் இங்குக் காணலாம்.

1. ஒவ்வொரு குழுவும் தோன்ற, நிலையாய் இருக்க, ஒரு பொது எதிரி (அல்லது பொதுக் காரணம்) தேவை. டி.வி.எஸ் கம்பெனிகளுக்கு “தரக் கட்டுப்பாடு” என்பதுதான் பொதுக் காரணம். தெளிவான, பலமான பொது எதிரி இல்லாமல் குழுக்கள் உருவாகாது.

அப்படித் தோன்றினாலும் காலத்திற்கும் நிலைக்க முடியாது. தொடர்ந்து ஒரு பொதுக் காரணத்தைத் தக்க வைக்க வேண்டும். இந்தப் படத்தில் முதலில் தானே எதிரியாகத் தோற்றம் தந்து, பின்னர் கோப்பையைப் பொதுக் காரணமாக்கியது அந்தக் குழுவைக் கட்டுக்கோப்பாகக் கடைசி வரை வைக்க உதவியது.

2. “யதா ராஜா ததா ப்ரஜா” என்பது போலத் தலைமை முக்கியம். இங்கு ஆசானின் பங்கு எனச் சொல்லலாம். தோற்காமல் இருக்க விளையாடுவதும், முடிந்த மட்டும் விளையாடுவதும், எதிராளியை வீழ்த்த விளையாடுவதும், தன் குழு மானத்துக்காக விளையாடுவதும் வேறு வேறு மன நிலையில் ஆடும் ஆட்டங்கள். ஆசானின் மன அமைப்பும், தேவையும், நம்பிக்கையும்தான் குழுவின் ஆற்றலைச் சீரமைக்கிறது.

இன்று நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளுக்கு நபர்களைத் தேர்வு செய்ய நிறைய உளவியல் ஆய்வுகள் செய்து எடுப்பதற்குக் காரணம் இதுதான். ஒரு குழுவை வழி நடத்திச் செல்ல நல்ல தலைமை மிக மிக முக்கியம். கபீர் கானின் தன்மானத் தாகம்தான் பெண்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

3. நம்மிடம் உள்ள மக்கள் சிறப்பானவர்களாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களிடமிருந்து சிறப்பான பங்களிப்பைக் கொணர முடியும்போது அந்தக் குழு ஜெயிக்கிறது. இந்த 16 பெண்களுக்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகள். திருமணமாகிக் குடும்பத்தின் ஆதரவில்லாமல் போட்டிக்கு வந்தவர், தான் சீனியர் என்ற உணர்வில் அகந்தை காட்டுபவர், கட்டுக்கடங்கா கோபம் கொள்பவர், பாஷை தெரியாதவர்கள் எனப் பல குறைகளுடன் வருகிறார்கள். ஆனால் அவர்களைக் குழுப்படுத்தி அவர்களின் குறைகளை நிறையாக்குவதில்தான் வெற்றி சித்திக்கிறது.

நம்மிடம் இல்லாத திறமையா என்ன? ஆனால் அவை முறையாக நெறிப்படுத்தப்படுகின்றனவா? பொது காரணத்துக்குப் பயன்படுகிறதா? இந்தக் கேள்விகளை உங்கள் குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம், அரசியல் கட்சிகள் என எல்லா இடங்களிலும் வைக்கலாம். இதன் பதில்கள் உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும். இந்த கேள்விகளைக் கேட்க வைக்கும் சக் தே இயக்குநருக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x