Published : 03 Mar 2015 08:35 AM
Last Updated : 03 Mar 2015 08:35 AM
காமெடியையே பிரதான பல மாகக் கொண்டு நாயகனாக நிலைபெற்று விட்ட சிவகார்த் திகேயனின் ஆக்ஷன் அவதாரம்தான் காக்கி சட்டை. அப்பா விட்டதைத் தொடர வேண்டும் என விரும்பும் மதிமாறன் (சிவகார்த்திகேயன்) கான்ஸ்டபிளாகக் காவல்துறையில் சேர்கிறார். ஆனால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாமல் இருப்பதை நினைத்து வெறுப்படைந்து இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் மல்லுக் கட்டுகிறார். ஒரு பெரிய கேஸைப் பிடித்து வந்து, அப்புறம் பேசு என்று பிரபு சவால்விட, படம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.
இதற்கிடையே தனியார் மருத்துவ மனையில் நர்ஸாகப் பணிபுரியும் ஸ்ரீ திவ்யாவுடனான சந்திப்பு, காதல் என ஒரு இழை பயணிக்கிறது. ஸ்ரீதிவ்யா வின் குடும்பத்தினரோ காவல் துறை யைச் சேர்ந்தவருக்குப் பெண்ணைக் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள்.
காவல் நிலையம் அருகில் நடக்கும் ஒரு விபத்து சிவகார்த்திகேயனைப் புதிய பாதையில் பயணிக்கவைக்கிறது. காய மடைந்த சிறுவன் மூளைச் சாவு அடை வதில் ஏற்படும் சந்தேகத்தைத் தொடர்ந்து புலனாய்வு செய்யும் சிவகார்த்திகேயன், அபாயகரமான சர்வதேச வலைப்பின்னல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த வலைப்பின் னலை எப்படி அறுக்கிறார், நர்ஸ் வீட்டில் போலீஸ்காரரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது மீதிக் கதை.
நகைச்சுவை, நடனம், அலட்டிக் கொள்ளாத குணம் ஆகியவற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு நடி கரை திடீரென்று ஆக்ஷன் அவதாரத்தில் பொருத்துவது சாதாரண விஷய மல்ல. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இந்தச் சவாலை ஓரளவு கையாண்டிருக்கிறார்.
வழக்கமான போலீஸ் கதைகளில் எதிர்ப்படுகிற திருப்பங்கள் இதிலும் ஏராளம். அண்மையில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தைப் போலவே இதிலும் நாயகன் காவல் துறை அதிகாரி, மனித உடல் உறுப்புத் திருட்டு ஆகியவை இடம்பெறுவதைத் தற்செயலானது என நம்புவோம்.
உடல் உறுப்புத் திருட்டு என்னும் விஷ யம் சற்றே சஸ்பென்ஸுடன் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் மனோபாலா மூலமாக வில்லனை நெருங்கும் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. இந்த இடங்கள் ஏற்படுத்தும் எரிச்சலையும் சலிப்பையும் கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் காட்சிகள் ஈடுகட்டி விடுகின்றன.
க்ரைம் பிரிவின் காவலர்கள் மாறு வேஷம் போட்டுக் கொண்டு துப்பறியும் காட்சிகள் சிறுபிள்ளைத்தனம். முன் பாதியில் பாடல்கள் திணிக்கப்பட்டிருக் கின்றன. வில்லன் அரசியலில் நுழையும் திருப்பம் இயல்பாக இல்லை. போலீஸ் படம் என்றாலே இயக்குநர் ஹரி பாணியில் புள்ளிவிவரங்களை யும் தகவல்களையும் மூச்சுவிடாமல் அடுக்க வேண்டுமா என்ன?
இத்தனைக்கும் நடுவே இழையோ டும் கலகலப்பு காட்சிகள் கொஞ்சம் பக்கபலம்.
தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ளாமலேயே கூடுதல் பரி மாணத்தைச் சேர்த்துக்கொண்ட வகை யில் சிவகார்த்திகேயனுக்கு இது முக்கிய மான படம். அப்பாவித்தனம், காமெடி, நடனம் ஆகியவற்றில் வழக்கம் போலவே கலக்குகிறார். சண்டைக் காட்சிக்குத் தேவையான பார்வையை யும் உடல் மொழியையும் கொண்டு வருவதில் தேறிவிடுகிறார். அடிக்கடி மூன்று முகம் ரஜினியையும் சிங்கம் சூர்யாவையும் நினைவுபடுத்தும் வித மாக வசனம் ஒப்பிப்பதைத் தவிர்த் திருக்கலாம்.
ஸ்ரீதிவ்யாவுக்குக் காதலைத் தாண்டி யும் படத்தில் வேலை இருந்தாலும் இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார். கண்ணை உறுத்தும் அளவுக்கு அவரது மேக்அப் தூக்கல்.
தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு புதிய வில்லன். விஜய் ராஸ் பிரமாதப்படுத்தி யிருக்கிறார்.
‘காதல் கண் தட்டுதே’ பாடலும், படமாக்கப்பட விதமும் அருமை. மற்ற பாடல்கள் அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் கவர்கிறார் அனிருத்.
கலகலப்பு, புலனாய்வு, அளவான ஆக்ஷன் என்று நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் புலனாய்வில் காமெடியைக் கலந்த விதம் படத்துடன் ஒன்றமுடியாமல் செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT