Published : 15 Mar 2015 10:31 AM
Last Updated : 15 Mar 2015 10:31 AM
இப்படித்தான் திருடப்போகிறோம் என்று நகைக் கடை உரிமையாளரிடம் வரைபடம் வரைந்து காட்டிவிட்டுத் தங்களின் வேலையைத் தொடங்கும் மூன்று தந்திரக்கார இளைஞர்கள் ஆடும் களவாட்டம்தான் இந்த ‘ராஜதந்திரம்’.
தர்மராஜாவின் (ஆடுகளம் நரேன்) சுக்ரா ஃபைனான்ஸ் திவாலாகி மக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியோடு தொடங்குகிறது படம். சிறை செல்லும் தர்மராஜா என்ன ஆகிறார் என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மூன்று இளைஞர்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறார் இயக்குநர் ஏ.ஜி. அமித்.
அர்ஜூன் (வீரா) தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சாமர்த்தியமான மோசடிகளில் ஈடுபடுகிறான். ஆனால் பெரிய மோசடிகளில் ஈடுபடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.
மிஷல் டிமெல்லோ (ரெஜினி) என்னும் பெண் எம்.எல்.எம். நிறுவனத்தில் இவர்களைச் சேர்த்துவிடு கிறாள். அவளுக்காகவே அந்தத் திட்டத்தில் சேரும் அர்ஜுனுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது.
சிறையிலிருந்து வெளியே வரும் தர்மராஜாவும் போலிச் சான்றிதழ்கள் தயாரித்துத் தருவதில் கில்லாடி யான மாதவ அய்யரும் (இளவரசு) சேர்ந்து ஒரு பெரிய நகைக்கடையைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டு கிறார்கள். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அர்ஜுன் தான் இதற்குச் சரியான ஆள் என்று மாதவ அய்யர் தீர்மானிக்கிறார். தந்திரங்களின் போர்க்களத்தில் இறுதி யில் வென்ற ராஜதந்திரம் எது என்பதுதான் கதை.
ஆரம்பத்திலிருந்தே திரைக்கதையில் ஒட்டிக்கொள் ளும் திரில்லரும் கலகலப்பும் படம் முழுக்க தொடர் கிறது. சின்னச் சின்னத் திருட்டுகளிலிருந்து நகைக் கடை கொள்ளை வரை எல்லாமே விறுவிறுப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஹோட்டலில் நடக்கும் தங்க பிஸ்கட் திருட்டு கலகலப்பும் விறுவிறுப்புமாய் சித்தரிக்கப்படுறது. படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுவது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.எம். உறுப்பினராக ரெஜினா செய்யும் பிசினஸ் முயற்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பணத்துக்காக அவர் ஏன் அப்படித் தவிக்கிறார் என்பதை விளக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. விஷயம் புரியாமல் தன்னைத் திட்டும் வீராவிடம் அவர் சண்டைபோடும் காட்சியில் வசனம், ரெஜினாவின் நடிப்பு இரண்டும் அருமை.
ஹோட்டலில் தங்க பிஸ்கட் பையைப் பறிகொடுத்த கோஷ்டி அதைப் பறித்த இளைஞர்களைத் தேடி அலையும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. காதல் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.
நகைக்கடையைத் திருடத் திட்டமிட்டிருக்கும் சம்பவம் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிய வரும் சூழலில் காவல் துறை அதைக் கையா ளும் விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. திட்டத்தைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் அதைக் கையாளும் விதமும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.
ஆனால் இதையெல்லாம் யோசிக்கவிடாத அளவுக்குத் திரைக்கதை றெக்கை கட்டிப் பறப்பது படத்தின் பலம்.
நடுநிசி நாய்களில் மனப் பிறழ்வு கொண்டவராக வந்த வீரா இதில் படம் நெடுகத் தந்திரக்காரத் திருடனாக வருகிறார். திட்டம் போடுதல், களத்தில் இறங்கித் திருடுதல், வாய் வீச்சு ஆகியவற்றில் அவர் நடிப்பு கச்சிதம். கலகலப்புடன் கூடிய கதையில் அவர் கொஞ்சம் இலகுவாக நடித்திருக்கலாம்.
மூவரில் ஒருவரான தர்புகா சிவா பொழியும் காமெடித் தூறல் ஈர்ப்பை விதைத்துச் செல்கிறது.
நரேன், ‘பட்டியல்’ சேகர் ஆகிய இருவரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். பட்டியல் சேகரின் முக பாவங்கள் மனதில் நிற்கின்றன. இளவரசு கொடுத்த வேலையை வழக்கம்போல ஒழுங்காகச் செய்கிறார்.
திரைக்கதையின் வேகத்தையும், போக்கையும் புரிந்துகொண்ட பிரவீண்குமாரின் எடிட்டிங், சந்தீப் சவுதாவின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன. பாடல் இசை ஜி.வி.பிரகாஷ் குமார். பரவாயில்லை என்று சொல்ல லாம்.
விறுவிறுவென நகரும் திரைக்கதையில் நகைக் கடைத் திருட்டை இரண்டாம் பாதியில் இருந்து தொடங்கியிருக்கிறார், இயக்கு நர். அதை இன்னும் சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கலாம்.
காவல்துறை இந்த விஷயத்தைக் கையாளும் விதத்தில் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT