Published : 20 Mar 2015 12:19 PM
Last Updated : 20 Mar 2015 12:19 PM
நரேன் நாயகனாக நடித்த 'தம்பிக்கோட்டை' படத்தில் கடைசியாக நடித்தார் பூனம் பாஜ்வா. தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து ஜெயம்ரவி நடிக்கும் 'ரோமியோ ஜூலியட்' படம் மூலமாகத் திரும்ப வந்திருக்கிறார். “மறுபடியும் வந்தது சந்தோஷமாக இருக்கிறது. இடையில் 'ஆம்பள' படத்தில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினேன்” என்று கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபடி ஆரம்பித்தார் பூனம் பாஜ்வா.
'ரோமியோ ஜூலியட்' படத்தில் சிறு வேடத்தில்தான் நடித்திருக்கிறீர்களா?
‘தெனாவட்டு', ‘கச்சேரி ஆரம்பம்' படங்களில் பார்த்த ரொம்ப சாதுவான கிராமத்துப் பெண் வேடம் அல்ல. கிராமத்துப் பெண்ணாக என்னைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்ப புதுமையாக இருக்கும். எதையும் துணிச்சலாக அணுகக்கூடிய நகரத்துப் பெண்ணாக நடிக்கிறேன்.
நகரத்துப் பெண் என்றவுடன் ரொம்ப க்ளாமராக நடித்திருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இதில் வில்லியாக நடிக்கிறேன் என்று கற்பனைச் செய்திகள் வேறு வந்தன. இரண்டாம் பாதியில்தான் வருவேன் என்றாலும் என்னுடைய வேடத்தில் நிறைய சுவாரசியம் இருக்கிறது. அதை விரிவாகச் சொல்ல முடியாது.
ஒரு பாடல், சிறு வேடம் என நடிக்க ஆரம்பித்துவிட்டதற்குக் காரணம் என்ன?
ஒரு நடிகையாகப் பரிசோதனை முயற்சிகளையும் செய்தால்தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். கிராமத்துப் பெண் வேடத்தில் மட்டுமே நல்ல நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பது தவறான கருத்து. கமர்ஷியல் படங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என்பது எல்லாம் என்னைப் பொறுத்தவரை தவறில்லை.
இந்தித் திரையுலகைப் பாருங்கள்... அனைத்து நாயகிகளுமே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்கள். வேலை என்று வந்துவிட்டால், என்ன வேடம், ஒரு பாடலா என்பது பற்றியெல்லாம் அங்கே கவலைப்படுவதில்லை. இப்போது அதே மாதிரியான கலாச்சாரம் இங்கும் வந்து கொண்டிருக்கிறது. ‘ஆம்பள' படத்தில் ஒரு பாடலுக்கு நான் நடனம் ஆடியது எனக்குப் பரிசோதனை முயற்சி. நன்றாக இருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஒரு பாடல் என்று வந்துவிட்டால் சம்பளம் நிறைய கிடைக்கும் என்பதுதான் காரணம் என்கிறார்களே?
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது. எட்டு வருடங்களாகத் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிக்க ஆரம்பிக்கும்போது படம் பெரியதா, யார் இயக்குநர், யார் நடிகர், என்ன சம்பளம் இப்படிப் பல விஷயங்கள் பார்க்க வேண்டியது இருக்கும். சம்பளம் மட்டுமே என்றால் நான் திரும்பவும் வந்த பிறகு என்னை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
உங்களுக்கு எந்த மொழியில் நல்ல வேடம் கிடைக்கிறது?
நல்ல வேடம் என்றால் தமிழ்தான். ‘சேவல்' படத்தில் கிடைத்த வேடம் மாதிரி எனக்கு வேறு மொழிகளில் கிடைக்கவில்லை. படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதில் முழுநீள வேடம் எனக்குக் கிடைத்தது.
என்னுடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு அமைந்த மலையாளம், தெலுங்கு வாய்ப்புகள் எல்லாமே ‘சேவல்' படம் பார்த்துக் கிடைத்தவைதான்.
எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விருப்பப்படுகிறீர்கள்?
எனக்குக் கனவு வேடம் என்றெல்லாம் கிடையாது. நல்ல உடைகள், நல்ல நடனம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேடமாக இருந்தாலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். முதலில் சீரியஸான படங்களில் மட்டுமே நடிக்கத் விரும்பினேன். ஆனால், இப்போது ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க விரும்பவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT