Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM
அரைத்த மாவையே அரைக்க நினைக்கும் கோலிவுட்டில், தமிழ் ரசிகர்களுக்குப் புத்துணர்வு தரும் புதிய புதிய கதைக்களங்களில் சவாரி செய்யத் துடிக்கும் இளம் இயக்குநர் திரு.
விஷால் - லட்சுமிமேனன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர், பட வெளியீட்டு நாள் நெருங்கிவிட்ட போதும் பதற்றமில்லாமல் இருக்கிறார். “சில விஷயங்கள் ரொம்ப சரியா வரும்னு மனசு சொல்லிட்டா அது அப்படியே நடக்கும். இந்தப் படத்தின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்று நம்பிக்கை தெறிக்கப் பேச ஆரம்பித்தார்....
பாண்டிய நாட்டில் பயந்த சுவாபம் கொண்ட இளைஞராக நடித்தார் விஷால். அந்தப் படத்துக்கு வெற்றி கிடைத்த காரணத்தால்தான் விஷாலைத் தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்ட இளைஞனாகச் சித்திரிக்கும் கதையை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?
கண்டிப்பாக இல்லை. இந்தக் கதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. இணையத்தில் நார்கோலெப்சி குறைபாடு கொண்டவர்களின் பிரச்சினைகளைப் பற்றித் தேட ஆரம்பித்ததும், ஏகப்பட்ட கேஸ் ஸ்டடிகள் புதையல்போல கிடைத்தன. பிரச்சினையை எதிர்கொண்டு அதை வென்று காட்டிய பலரது வாழ்க்கைச் சம்பவங்களைப் படித்தபோது முதலில் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. முதலில் இதையொரு இயல்பான நகைச்சுவைப் படமாக இயக்கிவிடலாமா என்றுதான் எண்ணினேன். ஆனால் எதிர்பாராமல் இப்படியொரு குறை கொண்ட ஒரு இளைஞனின் பழிவாங்கும் கதையாக அது தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டது. விஷாலுக்கு இதுபோன்ற கதைகள் கச்சிதமாகப் பொருந்தக்கூடியவை. காரணம் அவர் கதாநாயகன் மட்டுமல்ல, கதைகளின் நாயகன்.
கதையைக் கேட்ட தயாரிப்பாளரும், விஷாலும் என்ன சொன்னார்கள்?
படத்தின் கதையும் காட்சியமைப்பு களும் எந்த அளவுக்குப் பேசப்படுமோ அதேபோல இதில் இடம்பெற்ற காதல் எபிசோட் பேசப்படும் என்று தயாரிப் பாளர் தனஞ்செயனும் விஷாலும் ஒரே மாதிரி குறிப்பிட்டார்கள். அழகும், அறிவும், பணமும் இருந்தாலே ஆயிரம் பரிசோதனைகளுக்குப் பிறகு காதலிக் கும் புத்திசாலிப் பெண்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், இதுபோன்ற ஒரு குறை பாடுள்ள இளைஞனாக இருக்கும் விஷாலை லட்சுமி மேனன் எதனால் காதலித்தார், ஒரு இக்கட்டில் எப்படி காப்பாற்றுகிறார் என்ற நியாயம் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாகக் கவரும்.
விஷால் இந்தப் படத்தில் என்ன வேலை செய்பவராக வருகிறார்? படத்தின் தலைப்பில் உள்ள சிகப்பு என்ற வார்த்தை எதைக் குறிப்பிடுகிறது?
இதுபோன்ற குறைபாடுள்ள ஒருவருக்கு யார் வேலை கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? படத்தில் அதுவே ஒரு முக்கியமான காட்சியாக வருகிறது. முதலில் ’நான் சிகப்பு மனிதன்’என்ற தலைப்பைப் படத்திற்கான ஒர்க்கிங் டைட்டிலாகத்தான் வைத்தோம் படம் முடிந்து முதல் பிரதி தயாராகிப் படத்தை ஒரு முறை எல்லோரும் பார்த்த பிறகு வேறொரு தலைப்பை யோசிக்கவே மனம் வரவில்லை. இதை விஷாலிடம் சொன்னதும், விஷால் முறையாகத் தலைப்பை வாங்கிக் கொடுத்தார்.
லட்சுமி மேனன் காதலிக்கிறார் என்பது ஓ.கே. ஆனால் இப்படியொரு மகனை அவரது பெற்றோர் எப்படிச் சமாளிக்கிறார்கள்? அவரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்ல உங்கள் திரைக்கதையில் இடமிருக்கிறதா?
இதுவும் கதையில் முக்கியமான அங்கம். உயரமான அழகான மகன், அறிவானவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்டவன் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா? அவனுக்கு நட்பும், காதலும் கிடைக்குமா? அவனுக்குக் கல்யாணம் நடக்குமா? அவனை எப்படிக் கையாள்வது என்பதில் அப்பா அம்மாக்களின் பாட்டை இதில் சொல்லியிருக்கிறேன். இதில் விஷாலின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் அற்புதமாக நடித்திருக்கிறார்.
தூக்க வியாதி கொண்ட விஷாலுக்கு நீச்சல் குளத்தில் என்ன வேலை?
அந்த காட்சியைப் பற்றிப் பேசினால் அதில் இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும் இன்னும் ஒரு வாரம்தானே அதுவரை ரசிகர்களுக்கு சஸ்பென்சாக இருக்கட்டும் ப்ளீஸ்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT