Published : 18 Mar 2015 11:37 AM
Last Updated : 18 Mar 2015 11:37 AM

திரை விமர்சனம்: கோர்ட் (மராத்தி)

அமைதி.. அமைதி.. கோர்ட் நடக்கிறது

நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

குற்றம்: சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக.

எப்படித் தூண்டினார்?: அவர் மேடையில் பாடல்கள் பாடியதன் மூலமாக. உணர்ச்சிப் பாடல்கள் மூல மாக. ‘இவ்வுலகம் வாழ வழியில் லாதது. சாகத்தான் லாயக்கு’ என்றக் கருத்தைச் சொன்ன தால்.

அவருக்கு வருமானம்: குழந்தை களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது.

அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக் கொடுத்தது: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி.

இதில் வரும் வழக்கறிஞர்கள் கூட மாறுபட்ட பாத்திரங்கள்தான்...

அரசாங்க வழக்கறிஞர்: கொஞ்சம் ஏழைதான். சாதாரண வீடு. பையனை பள்ளியில் இருந்து அவரே போய் கூட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தேங் காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயரும் உண்டு. பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்களுடன் அதிக பழக்கம் கொண்டவராக இருக்கிறார். பெண்.

கவிஞருக்காக வாதாடும் வழக் கறிஞர்: கொஞ்சம் வசதியானவர். சாதாரண மக்களுக்கும் அவருக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி நடந்து கொள்கிறார். மாலை நேர பார், ஆங்கில பல்கேரியன் நடன நிகழ்ச்சிகளுக்குப் போவார். உயர்ந்த ரக மதுபானம் வாங்குபவர், ஜாஸ் கேட்பவர். சற்றே உயர் சாதிக்காரர். பெயர் வோரா.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்றத்தின் நீதிபதி: ஆங்கிலம் பிடிக்கும். அதேசமயம், ‘கவிதை, கவிஞர்... இதெல்லாம் என்ன?’ என்று எரிச்சல்படுபவர். சாட்சியாக வந்த பெண் - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடை போட்டுக் கொண்டு வந்த காரணத்தால், நீதிமன்றத்துக்கு இந்த டிரஸ் கோடு சரிபட்டுவராது என்று வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்தி வைப்பவர்.

மாலை நேரத்தில் நாடகங்களுக்குப் போய் நகைச்சுவைகளை ரசிப்பவர். அவ்வப்போது பிக்னிக் என்று போகிறவர். கவிஞரிடம் இருந்து 40 தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை ஆச்சரியம் பொங்கக் கேட்பவர்.

கவிஞர் மீதான விசாரணை நடக்கிறது. அவருக்கு வயது 65. ஆனால் வயது உடல் நிலை கருதி அவரது தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டாலும், அரசாங்க பெண் வழக்கறிஞர் மறுக்கிறார். ‘இவர் பலமுறை விதிகளை மீறியவர். ஜாமீன் தரக்கூடாது. இவர் புரட்சிகர கருத்துகளை பாடி மக்களை தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுவார்’ என்கிறார்.

செத்துப் போன துப்புரவு தொழிலாளியின் மனைவியிடம் நீதிபதி விசாரிக்கிறார். அவளுக்கு கணவனின் வயது தெரியவில்லை. கவிஞரின் பாடல் தற்கொலைக்குத் தூண்டித்தான் கணவர் செத்தாரா... தெரியாது. அவர் பாதுகாப்பு முகமூடி, கவசம், உறைகள் அணிய மாட்டார். அதுவும் காரணமாக இருக்கலாம்.

கவிஞருக்கு தற்காலிகமாக ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறை, வழக்கு அனுபவங்களை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அச்சகத்தில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். விசாரணை தொடர்கிறது.

அழுக்கு நீதிமன்றம், நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நெரிசலான இருக்கைகள் எல்லாம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன.

கவிஞர் ஒருவரை முன்வைத்து ஒரு படம் நீளுவது விசேஷமானது, அவர் தலித் கவிஞர். மும்பை புற நகரில் வாழ்கிறவர். மேடையில் பாடும் தோற்றத்தில் கத்தார் போன்ற புரட்சிக் கவிஞரை - பாடகரை நினைவூட்டுகிறார்.

கடைசிக் காட்சியில் நீதிபதி தனது நண்பர்களுடன் பிக்னிக் போகிறார். பயணத்தில்... ஐ.ஐ.டி. படித்து பெரிய தொகையை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி கவலைப்பட்டுக் கொள்கிறார். தூங்கிப் போகிறார். பையன்களோ கலாட்டா செய்து அவரை எழுப்பிவிடுகிறார்கள். பொறுப்பற்ற இளைஞர்கள் என்று ஒருவனை அறைகிறார். மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறார். கிண்டல் செய்து விமர்சிக்கும் இளைய தலைமுறை, தூங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ள இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள் வென்றுள்ளது. இதன் இயக்குநர் சைத்தன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.

உண்மையில் சாக்கடை குழியில் இறந்த போன தொழிலாளி ஒருவரின் மனைவி! மற்ற நடிகர்களும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, இதற்கென்றே பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும், தூங்கும் யாரையும் தட்டி எழுப்பும் மராத்தி படம்தான் இந்த - ‘கோர்ட்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x