Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்

தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டி

மூத்த கலைஞர்களுள் ஒருவரான பாலுமகேந்திரா பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிய தலைமுறைகள் பல விதங்களிலும் ஆறுதல் அளிக்கிறது. தமிழ் வாசனையோ கிராமிய மணமோ அற்ற ஒரு தலைமுறைக்கும் அவை இரண்டையும் தன் மூச்சுக் காற்றாகக் கொண்ட ஒரு தலைமுறைக்கும் இடையே நடக்கும் சந்திப்பின் சலனங்கள் என்று இதன் கதையை வரையறுக்கலாம். கிராமக் கலாச்சாரத்தின் சத்தான அம்சங்களோடு சாதி உணர்வு என்னும் களையும் நவீனத்துவத்திற்கு முகம்கொடுக்காத ஒவ்வாமையும் இருப்பதையும் இப்படம் பதிவுசெய்கிறது. நகர வாழ்வையும் நவீனத்துவக் கூறுகளையும் விமர்சிக்கும் இந்தப் படம் அவற்றை வில்லனாகச் சித்தரிக்காமல் இருப்பது ஆறுதலளிக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உருவாகும் அன்பு மொழி, வயது, கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டிய உறவையும் மாற்றங்களையும் சாத்தியப்படுத்துவது நெகிழவைக்கிறது.

அழகான காட்சிப் படிமங்கள், மனதை வருடும் இசைக்கோலங்கள், நேர்த்தியான நடிப்பு, சமூகம், மொழி ஆகியவை குறித்த அக்கறை ஆகியவை இந்தப் படத்தின் வலுவான அம்சங்கள். நகரம் - கிராமம், தமிழ் - ஆங்கிலம், போன்ற எதிர் நிலைகளின் சந்திப்பில் உருவாகும் முரண்களும் அவற்றின் விளைவுகளும் திரைக்கதையாக விரிகின்றன. இயல்பும் ரசனையும் மிகுந்த காட்சிகள் படத்தைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. மனிதர்களின் மாற்றங்களைச் சித்தரிக்கும் காட்சிகள் மிகையானவையாகத் தெரிகின்றன. எதிர்நிலைகளிடையே உருவாகும் முரண்பாடுகளின் ஊடாட்டத்தை மேலும் வலுவாகச் சித்தரித்திருக்கலாம்.

ஒரு கனவைத் திரக்கதையாக்கிய விதத்திலும் அந்தத் திரைகக்தையைப் படமாக்கிய விதத்திலும் பாலுமகேந்திராவுக்கு வெற்றி. முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கும் அவரது நடிப்பும் பாராட்டத்தக்க விதத்தில் உள்ளது. முரண்பாடுகளைக் கையாளும் விதத்தில் பழைய பாலுமகேந்திராவின் படைப்பூக்கம் வெளிப்பட்டிருந்தால் இது மிக முக்கியமான படமாக இருந்திருக்கும். - அரவிந்தன்

தங்க மீன்கள் : வாழ்க்கைச் சித்திரம்

தமிழ் சினிமாவில் திடீரெனப் பிரபலமடைந்துவிட்ட பிளாக் காமெடிப் படங்களுக்கு நடுவே ராமின் இயக்கத்தில் வெளிவந்து கவனம் பெற்ற படம் தங்க மீன்கள். குழந்தைகள் படமாகவும், அரசுப் பள்ளிகளின் சிறப்பைப் பிரச்சாரம் செய்வதாகவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் இப்படம் இவற்றையெல்லாம் தாண்டிய ஓர் அசலான வாழ்க்கைச் சித்திரத்தைப் பதிவுசெய்கிறது.

இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்ட கல்யாணி, அவனுக்காக வீட்டைவிட்டு ஓடிவந்து குடும்பம் நடத்தும் வடிவு. நாகர்கோயில் புற நகரில் ஒரு மேட்டு நிலத்தில் அமைந்துள்ள அவர்கள் வீடு. அங்கு ஓய்வுபெற்ற ஆசிரியரான கல்யாணியின் தந்தையுடனும் தாயுடனுமான அவர்கள் வாழ்க்கை. இந்த நால்வருக்கும் இடையிலான உறவின் மையம் குழந்தை செல்லம்மா. மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கலையும் பாசாங்குகளையும் சின்னச் சின்ன உரையாடல்களில், பாவனைகளில் உணர்த்துகிறது இப்படம். ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் தன் மகளுக்கான கல்விக் கட்டணமான 2 ஆயிரம் ரூபாய் செலுத்த சிரமப்படுகிறான் கல்யாணி. ஆனால் அவன் தந்தை சொந்தமாகக் கார் வைத்திருக்கிறார். ஒரே வீட்டுக்குள் இரு வேறு விதமான வாழ்க்கை. படத்தில் வரும் மனிதர்கள் இயல்பான பலவீனங்களுடன் இருக்கிறார்கள். சொற்ப வருமானத்துக்குள் காதல், கனவுகள், சுயமரியாதை என்பவற்றுக்குள் வாழும் சாமான்ய மனிதர்களின் உருவமாக வருகிறான் கல்யாணி. கல்யாணி பாத்திர விவரிப்பும் அதை ராம் வெளிப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியன. மகளின் பாரிய அன்பு உருவாக்கும் குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ள அல்லது அதைச் சமன்செய்ய இயலாத ஒரு தந்தையின் தவிப்பை ஹச் நாய்க்குட்டியாக உருவகித்திருக்கிறார் ராம்.

தங்க மீன்கள் உலவும் ஆழ் குளத்தில் தொடங்கிப் பார்வையாளனை உள்ளிழுத்துக் கொள்ளும் இப்படம் அதே குளத்தில் கரடி பொம்மை மிதக்கும் காட்சியுடன் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் இன்னும் சில காட்சிகளாகப் படம் நீள்வது படத்திற்கு ஒற்றைப்படைத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது.

இம்மாதிரியான பலவீனங்களுக்கு அப்பாற்பட்டு தங்க மீன்கள் தமிழ்த் திரையில் எழுந்த ஓர் இயல்பான வாழ்க்கைச் சித்திரம். - மண்குதிரை

சூது கவ்வும் : நகைச்சுவை அரசியல்

இந்த ஆண்டு பிரம்மாண்டமான பின்னணியுடன் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த பல படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால் சில படங்கள் இம்மாதிரியான எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்து பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் நலன் குமாரசாமியின் சூது கவ்வும் குறிப்பிடத்தகுந்த படம். தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உண்டாக்கியிருக்கும் சினிமாவுக்கு இணையான மாற்று முயற்சிகளின் பின்னணியில் இருந்து உற்சாகத்துடன் வந்திருப்பவர் நலன்.

உலகமயமாக்கலுக்குப் பின் சமூகம் அடைந்திருக்கும் மாற்றங்களை எவ்விதமான அறிவுரை தொனியோ புலம்பலோ இன்றி நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது இப்படம். வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் வரையறைகள் எதுவும் இல்லாத கதாநாயகன், கடத்தலைத் தொழிலாகக் கொண்டிருக்கிறான். விஜய் சேதுபதியுடன் கடத்தலில் கூடவே வரும் அவன் காதலி திடீரென ஒரு காட்சியில் கற்பனை உருவாக வெளியேறிவிடுகிறாள். இது தமிழ் சினிமா பார்வையாளருக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. கடத்தலுக்காக நாயகன் உருவாக்கி வைத்திருக்கும் நியதிகள், அவனிடம் வந்து சேரும் மூன்று இளைஞர்கள், அவர்களின் இயல்பான உரையாடல்கள் எல்லாம் சுவாரசியமானவை.

நலன் இளைஞர்களின் வண்ணமயமான ஒரு உலகத்தைக் காட்சிப்படுத்துகிறார். இதன் நகைச்சுவை என்பது தனியான சொற்களையும், பாவனைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல. ப்ளாக் காமெடி பாணியுடன் வந்து வெற்றிபெற்ற இப்படம் தமிழ் சினிமாவின் போக்கைத் திசைதிருப்பியது.

வெறும் நகைச்சுவை என்று வகைப்படுத்த முடியாதபடி சமகாலத்தின் சமூக அரசியலைச் சொல்லும் படம் இது. - ஆர்.ஜெய்குமார்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் : மாறுபட்ட பயணம்

கதை சொல்லும் பாணியில் முதிர்ச்சி, ஒளியமைப்பு மற்றும் கோணங்களில் ஓவிய மொழி என்று பிரத்யேக பலங்களுடன் படங்களை இயக்கிவரும் மிஷ்கின் இந்த வருடம் தந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ தமிழ் திரையுலகின் முன்நகர்வுக்கு ஒரு உதாரணம். மிஷ்கின் பிரதானப் பாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் கதை ஏற்கனவே பலமுறை கையாளப்பட்டது தான் என்றாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் தனது தனித்தன்மையைப் படம் பெற்றது. பாடல்கள் இல்லாத இப்படத்தின் முக்கியத் தூணாக இளையராஜாவின் பின்னணி இசைக்கோவை இடம்பிடித்தது. இளம் நாயகன்  கதையின் தன்மையை உள்வாங்கி சிறப்பாக நடித்திருந்தார். எழுத்தாளரும் விமர்சகருமான ஷாஜி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக இயல்பாக நடித்திருந்தார். சென்னையின் இரவுகளில் மஞ்சள் விளக்கொளியில் மின்னும் சாலைகளும் மரங்களும் கதையில் நிகழும் சம்பவங்களுக்கு மவுனசாட்சிகள் போல் உறைந்திருந்தது, இயக்குநரும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்காவும் ஒத்த மனதுடன் பணிபுரிந்திருந்ததை வெளிப்படுத்தியது. பெரிய அளவில் வணிக வெற்றி இல்லையென்றாலும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை இப்படம் பெற்றது. கனவுலகுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான ஒரு மங்கலான உலகில் பயணம் செய்த அனுபவத்தையும் இப்படம் தந்தது. - வெ.சந்திரமோகன்

மூடர் கூடம் : சாமார்த்தியமும் சமூக விமர்சனமும்

இன்றைய சமூகம் குறித்த தீவிரமான விமர்சனத்தையும் வைத்த படம்தான் மூடர் கூடம். ஒரு நவீன நாடகம் போன்ற செட் அப்பில், சின்னச் சின்னக் கதைகளைச் சேர்த்து, சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் இது. சொந்த ஊரில் பெற்றோரை இழந்து, சென்னையில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் அநாதை இளைஞர்கள் நால்வர் சந்திக்கிறார்கள். இந்த நால்வரும் சந்திக்கும் இடம் காவல் நிலையத்தின் லாக் அப். நால்வரில் ஒருவரான வெள்ளையின் அப்பாவை ஏமாற்றிப் பணக்காரராக இருக்கும் மாமா பக்தவத்சலத்தின் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அதனால் ஏற்படும் அபத்தங்களும் திருப்பங்களும்தான் மூடர் கூடம்.

கதையின் போக்கிற்கேற்ப சித்தர், பாரதி பாடல்கள் ஆகியவை படத்தின் போக்கிலேயே நிரவி வருவது அருமையான அனுபவமாக இருந்தது. தனித்து விடப்பட்ட இளைஞர்கள் மாறுபட்ட சூழலில் எப்படி மாறுகிறார்கள் என்பதை அருகிலிருந்து பார்ப்பதுபோல உணர்ந்துகொள்ளலாம்.

பணக்காரர்-ஏழை பாகுபாடு, குழந்தைகளுக்கு அன்பு கிடைக்காத நிலை, ஆங்கில மோகம் போன்ற தீவிரமான பிரச்னைகள் படம் முழுவதும் பேசப்பட்டிருந்தன. ஆனால் அதை அடுத்த ஷாட்டிலேயே நகைச்சுவையாக மாற்றிவிடும் சாமர்த்தியமும் நவீனுக்கு இருந்தது.

வணிக அளவில் இந்தப் படம் வெற்றியடையாவிட்டாலும், இயக்குனர் நவீனும், இந்தப் படத்தின் கதைக்களமும் ஊடகங்களால் அதிகம் பாராட்டப்பட்டது. - எஸ்ஆர்எஸ்

பரதேசி : நிறைவேறாத கனவு

கறுப்பர்களின் அடிமை நிலை குறித்தும் வெவ்வேறு நாடுகளில் நடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் தோய்ந்த விடுதலைப் போராட்டங்கள் குறித்தும் உலகளவில் சிறந்த திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழில் இலக்கியரீதியாக இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு பிழைக்கப்போன தலித் தொழிலாளர்களின் நிலை குறித்து புதுமைப்பித்தன், துன்பக்கேணி நெடுங்கதையை எழுதியுள்ளார். ஆனால் தமிழில் ஒடுக்கப்பட்டோரின் வலிகளையும், அவர்களின் இருண்ட உலகத்தையும் சற்று நெருங்கிப் பார்த்த திரைப்படங்கள் அரிது. அவ்வகையில் இயக்குனர் பாலாவின் பரதேசி ஒரு முன்னோடி முயற்சி. பொள்ளாச்சித் தேயிலைத் தோட்டங்களில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்களின் கொத்தடிமை நிலைகுறித்து, அப்பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர் டேனியலால் எழுதப்பட்ட ‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது பரதேசி திரைப்படம்.

எரியும் பனிக்காடு நாவல் வாசிப்பு மூலமாகத் தரும் தீவிர அனுபவத்தை, நாயகனை மையப்படுத்தி, படத்தின் முதல்பகுதியில் குறைத்து ஒரு வணிகப்படத்தின் சுவாரசியங்களைச் சேர்த்தார் பாலா. இடைவேளைக்குப் பிறகு எஸ்டேட் தொழிலாளர்களின் அவலநிலை வேகவேகமான காட்சிகளாக வந்து உடனடியாக கிளைமாக்ஸ் வருவது படத்தின் பெரும்குறையாக கருதப்பட்டது. ஆனாலும் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அதிகம் பதிவுசெய்யப்படாத தமிழ் வாழ்க்கையின் துயரமான பகுதியை பெரிய சமரசங்களின்றி பதிவுசெய்ததில் பரதேசி திரைப்படம் முக்கியமானது. வறுமை இருந்தாலும், சொந்த கிராமத்தில் தன்னிறைவுடன், சின்னச் சின்ன சந்தோஷங்களுடன் வாழும் மக்கள் பிழைப்புக்காக பரதேசம் போகும்போது அநாதைகளாக அவர்கள் மாறிப்போவதை இந்தப் படம் நிதர்சனமாக காட்டியது. இடைவேளைக்கு முன்பு, உறவினர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்படும் நிலையில் அநாதையாக இறந்துபோகும் ஒரு மனிதனின் கை வெறுங்கையாக உயரும். இதுபோன்ற அழுத்தமான காட்சிகளுக்காக பரதேசி படம் எப்போதும் நினைவில் நிற்கும்.

வணிகரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையெனினும் தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற படம் இது. - ஷங்கர்

ஹரிதாஸ் : குறையொன்றும் இல்லை

அதிகம் கவனிக்கப்படாத ஆட்டிசம் என்னும் குறைபாட்டைக் கையில் எடுத்ததற்காகவே ‘ஹரிதாஸ்’ படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனைப் பாராட்டலாம்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கிஷோரின் மகன் ஹரிதாஸ். அம்மாவின் மறைவால் பாட்டியிடம் வளரும் ஹரிதாஸ், பாட்டியின் பிரிவுக்குப் பிறகு தந்தையிடம் வருகின்றான். அதுவரை ரவுடிகள், என்கவுண்டர் என்று மட்டுமே இருந்த கிஷோர், தன் மகனையும் அவனுடைய குறைபாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்.

ஹரிதாஸின் குறைபாடு ஆட்டிசம் என்பதை அவனுடைய அப்பாவுக்கு மட்டுமல்ல, நமக்குமே சேர்த்துச் சொல்கிறார் மருத்துவர். ஹரிதாஸாக வரும் ப்ரித்விராஜின் நடிப்பு, படத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. இலக்கற்ற பார்வையும், சற்றே வளைந்த கைகளும், தளர்ந்த நடையுமாக நம் மனசுக்குள் நுழைந்துவிடுகிறான்.

அப்பாவையும் மகனையும் பிணைக்கும் அன்பு இழை, நம்மையும் அவர்களுடன் ஒன்றச்செய்துவிடுகிறது. காதல், டூயட் இல்லாமல் ஒரு குறைபாட்டைச் சொல்ல குறும்படம்தான் எடுக்க முடியும் என்ற பொதுவான நினைப்பைத் தன் படத்தால் உடைத்தெறிந்து இருக்கிறார் குமரவேலன்.

மகனின் திறமையை அடையாளம் கண்டறியும் தந்தை, அவனை மாரத்தான் போட்டிக்குத் தயார்படுத்துகிறார். அதில் வெற்றிபெறுகிறவன், பின்னாளில் விளையாட்டுத்துறையில் சாதிக்கிறான். வெற்றிபெற்ற அந்த இளைஞனிடம் இருந்து படத்தைத் துவக்கியிருப்பது நல்ல முயற்சி. எந்தக் கருத்தையுமே வலிந்து சொல்லாமல், இயல்பாகச் சொல்லியிருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.- பிருந்தா சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x