Published : 06 Mar 2015 11:22 AM
Last Updated : 06 Mar 2015 11:22 AM
“குணால் என்கிற ஆடியோ தொழில்நுட்பக் கலைஞர்தான் க்ரேய்க்கை அறிமுகப்படுத்தினார். அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனால், மக்களின் கைதட்டல்கள் ஆஸ்கர் விருதுக்கு ஒரு படி மேல்தான்.
அந்த வகையில் கமல் சார், கே.பி சார், கே.விஸ்வநாத் சார் என மக்களிடம் கைதட்டல்கள் அள்ளியவர்கள் படத்தில் க்ரேய்க் பணியாற்றி இருக்கிறார் என்று நினைக்கும்போது கூடுதல் சந்தோஷம்” என்று கன்னம் தடவிச் சிரித்தபடி பேச ஆரம்பித்தார் உத்தமவில்லன் படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.
'உத்தம வில்லன்' எந்த மாதிரியான கதைக்களம்?
ஒரு படத்துக்குள் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறேன். அதுதான் உண்மை. 21ம் நூற்றாண்டில் காமெடி கலந்த பிரம்மாண்டமான ஒரு கதை. அதில் சூப்பர் ஸ்டாராகக் கமல் நடித்திருக்கிறார்.
'சதிலீலாவதி', 'பஞ்சதந்திரம்' பாணியில் காமெடியில் ஒரு புது முயற்சி பண்ணியிருக்கிறோம். இன்னொருபுறம் 8-ம் நூற்றாண்டு காலம். பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புதுமையான கதைக்களம்.
இந்த இரண்டு உலகத்துக்கும் ஒரு இணைப்பு இருக்கும். அதுதான் திரைக்கதை. அதை கமல் சார் சூப்பராகக் கோர்த்திருக்கிறார். இரண்டு உலகங்களையும் மிகப் பிரம்மாண்டமாகப் படமாக்கி இருக்கிறோம்.
ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி என்று நிறைய நாயகிகள் இருக்கிறார்களே?
படத்தில் முக்கியமாக ஐந்து பெண்கள் இருக்கிறார்கள். யாருடைய கதாபாத்திரமும் வீணாகத் திணித்தது போன்று இருக்காது. அவரவர் கதாபாத்திரங்களை நான் சொன்ன உடனேயே, கொஞ்சமும் யோசிக்காமல் ஒப்புக் கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டு முரண்பட்ட வார்த்தைகளை இணைத்துத் தலைப்பு வைத்திருக்கிறீர்களே?
இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுமே உத்தம வில்லன்கள்தான். எல்லோருக்குள்ளும் ஓர் உத்தமன், ஒரு வில்லன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். அதையே நான் படத்திலும் வைத்திருக்கிறேன் அவ்வளவுதான். ஒரு மனிதனுக்குள் இருக்கும் உத்தமன், வில்லன் இருவருக்கும் தினமும் நடக்கும் சம்பவங்களும் போராட்டமும்தான் திரைக்கதைக்கான தீனி.
கமலுடன் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கம், நட்பு பற்றி சொல்லுங்கள்?
முதலில் ரசிகன், சக நடிகன் பிறகே இயக்குநர் என எங்களுக்குள் இருக்கும் நட்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவருடைய நம்பகத்தன்மை என்னை வியக்க வைக்கும். அவர் சென்னையில் இருப்பார், நான் பெங்களூருவில் இருப்பேன். இருவருக்குமே அதிகமாகத் தொலைபேசி, வாட்ஸ் அப் நட்புதான் என்றாலும், அந்த நட்பு மிகவும் உறுதியானது.
அவருடன் நேரில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாது. சினிமா, கலை, இலக்கியம், உலக அரசியல், காமெடி என எதைப் பற்றி பேசினாலும் மலைப்பாக இருக்கும். அந்த மலைப்புக்குக் காரணம் அவர் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் விதம். அனைத்து விஷயங்களிலும் என்ன அப்டேட் ஆகியிருக்கிறதோ, அதை உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
'உத்தம வில்லன்' படத்தைப் பொருத்தவரை இருவரும் இணைந்து பெரிய அளவில் ஆட்டம் ஆடியிருக்கிறோம். என் மீது அதிக நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தார். இந்தப் படம் மூலமாக மேலும் எங்களது நட்பு வலிமையாகி இருக்கிறது என்றுதான் சொல்வேன்.
நடிகர், நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர் இந்த வரிசையில் எந்தக் கமலை உங்களுக்குப் பிடிக்கும்?
எல்லா கமலையுமே எனக்குப் பிடிக்கும். சினிமாவில் எல்லாத் துறையிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அதேபோல, நடிப்பு என்று வரும்போது படப்பிடிப்பில் நான் மானிட்டரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். காட்சி முடிந்து கட் சொல்லக்கூட மனம் வராது. அந்த அளவுக்கு அவரது நடிப்பின் தாக்கம் இருக்கும்.
கமல் படப்பிடிப்பில் பணியாற்றுபவர்களைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா விஷயத்திலும் அப்டேட் ஆனவர்களாகத்தான் இருப்பார்கள். படப்பிடிப்பில் ஒரு சின்னக் காட்சி, செட் வேலை என எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார் கமல். எந்தவொரு விஷயம் என்றாலும் அதில் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பார்.
தமிழ்த் திரையில் முன்போல நீங்கள் படம் இயக்குவதோ நடிப்பதோ இல்லையே ஏன்?
நான் என்ன நடிக்க மாட்டேன் என்றா சொல்கிறேன். எனக்குக் கதைகள் வரவில்லை அவ்வளவுதான். 1997-ல் ‘டூயட்' படம் பண்ணினேன். அதன்பிறகு கன்னடத்தில் நான் நடித்த 9 படங்கள் தொடர்ச்சியாக 100 நாள் படங்கள். ஆகையால் பெங்களூருவுக்கு மாறினேன். மற்றபடி நான் தமிழ்த் திரையை மறப்பவனில்லை. எந்தவொரு பெரிய நடிகரை வைத்து இயக்கவும், நல்ல கதை வந்தால் நடிப்பதற்கும் நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்.
நீங்களும் பாலசந்தர் பள்ளியிலிருந்து வந்தவர். நீங்கள் இயக்க, கமல் நடிப்பதைப் பற்றி பாலசந்தர் என்ன சொன்னார்?
'புன்னகை மன்னன்' படப்பிடிப்பின் போதுதான் பாலசந்தர் சார் என்னை கமலிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இப்படத்துக்காக போய் கேட்ட போது நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணியிருக்கிற விதத்தை நீங்கள் திரையில் பாருங்கள். அந்தக் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாரும் பண்ணியிருக்க முடியாது.
அவருக்கு எப்படியாவது இந்தப் படத்தை காட்டிவிட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. அவருடைய இறுதிப் படத்தை நான் இயக்கி இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கண்களும் ததும்புகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT