Published : 03 Mar 2015 12:17 PM
Last Updated : 03 Mar 2015 12:17 PM
பள்ளிக்கூடத்தில் சுற்றுலா போயிருந் தோம். ஒரு சாக்லேட் வாங்கினால் கூட, செலவை நோட்டுப் புத்தகத் தில் குறித்தான் வீரமணி. “பைசா சுத்தமாக அப்பா கணக்குக் கேப்பாரு...” என்றான்.
அவன் அப்பா, இரும்புக் கடை வைத் திருந்தார். ஒருமுறை நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பும்போது, கடையில் வாடிக்கையாளரிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
“ரெண்டு ரூபா கொறைஞ்சாக் கூட தர முடியாது. மொத்தப் பணத்தைக் குடுத் துட்டு சரக்கை எடுத்துட்டுப் போங்க...”
சொன்ன வேகத்தில் பார்சல் கட்டி வைத்திருந்த பொருட்களை எடுத்து கடைக்குள் வைத்துவிட்டார்.
பல வருடங்கள் கழித்து வீரமணியைத் தற்செயலாகச் சந்தித்தேன்.
“பக்கத்துலதான் வீடு, வாயேன்..!” என்று கூப்பிட்டான்.
பேசியபடி நடந்தோம்.
“அப்பா தெனம் கல்லாக் காசை எண்ணி முடிக்கறதுக்கே ராத்திரி பதினொண்ணு, பன்னெண்டு ஆகும். அப்புறம்தான் சாப்பிட உட்காருவாரு. இப்ப வரவு, செலவுலாம் பெரும்பாலும் கம்ப்யூட்டர்ல இ-டிரான்ஸ்ஃபர்லயே எனக்கு முடிஞ்சிடுது…” என்றான்.
கீழே கடைகள். மாடியில் வீடு.
“நாலு கடைங்கள்லேர்ந்து வாடகை வருது. மாடியில ஒரு போர்ஷனை ஐ.டி. பசங்களுக்கு விட்டிருக்கோம். ஆறு பேரு. ஆளுக்கு அஞ்சாயிரம். ஃபேமிலிக்கு விட்டா, பாதிகூட வராது.”
அவன் மாறவே இல்லை.
“வாப்பா… எப்படியிருக்க? அப்பப்ப புஸ்தகத்துல உன் முகத்தைப் பார்க்கறதுண்டு...” என்று அவன் அம்மா வரவேற்றாள்.
ஹாலில் அமர்ந்தோம்.
திடீரென்று ‘ணங்… ணங்...’ என்று ஒலி. திரும்பிப் பார்த்தால், சிறை போல் கிரில் கதவு கொண்ட அறை. வெளியில் பூட்டப்பட்டிருந்தது. கிரில் கம்பிகளினூடே கைகளை நுழைத்து, “என்னை வெளிய விடு..!” என்று வீறிடும் பெரியவர்.
தாடியும், மீசையும் ஒழுங்கற்று அடர்ந்திருந்தன. முழு வேட்டியை ஈரத் துண்டு போல் கட்டியிருந்தார். கண்கள் உள்வாங்கியிருந்தன. திகைத்து, வீரமணியைப் பார்த்தேன்.
“அப்பாதான்… இவர் வெளியே போயிட்டா ஆபத்து...” என்றான்.
எழுந்து அருகில் சென்றேன்.
“சரக்குலாம் கரெக்டா வந்து சேர்ந்ததா..?” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
“நீ கண்டுக்காத… இப்படித்தான் பேத்திட்டு இருப்பாரு...” என்று வீரமணி அவருடைய கைகளைப் பிடித்து உள்ளே தள்ளினான்.
“நீ குடுத்த செக் திரும்பிடிச்சு… பேங்க்ல அபராதம் வேற போட்டுட் டாங்க…” என்றபடி மர அலமாரியைத் திறந்தார். பல நோட் புத்தகங்களில் ஒன்றை எடுத்து, அதற்குள் இருந்த ஒரு காசோலையைக் கொண்டுவந்து கம்பிகளூடே நீட்டினார். 20 வருடங் களுக்கு முந்தைய தேதியிட்ட காசோலை!
“கதவைத் திறடா…” என்று வீரமணி யிடம் கோரினேன். திறந்துவிட்டான். அவர் வெளியே ஓடிவந்து சோபாவில் அமர்ந்தார்.
“இந்த முறை பணமாக் குடுத்துரு...” என்றார்.
“சும்மா இருங்க… இது வீராவோட ஃப்ரெண்ட்! உங்க கஸ்டமர் இல்ல...” என்று வீரமணியின் அம்மா அதட்டினார்.
அவர் மிரண்ட குழந்தை போல சட்டென்று என் மடியில் தலைவைத்துப் படுத்தார்.
“எழுந்திருங்க, எழுந்திருங்க...!”
“இருக்கட்டும்மா… நானும் அவர் மகன் மாதிரிதான்...” என்றேன்.
கிழவர், மனித வெப்பத்தில் சுகம் தேடும் பூனைக்குட்டிபோல் மடியில் ஒடுங்கியிருந்தார். பாரமே இல்லை. எனக்குள் ஏதோ கலைந்தது. தோளை வருடிக் கொடுத்தேன். திடீரென்று விலுக் என்று எழுந்தார்.
என் கையில் இருந்து காசோலையைப் பிடுங்கினார். பழுப்பே றிய தாள்களில் பற்று, வரவு என்று எண் களாக நிரம்பியிருந்த நோட் புத்தகத்தில் அதை பத்திரமாக வைத்தார்.
“எனக்கு மசால் தோசை வாங்கித் தர்றியா..?” என்றார்.
பரிதாபமாக வீரமணியை நிமிர்ந்து பார்த்தேன்.
“பிசினஸ்ல பார்ட்னர் செமத்தியா ஏமாத்திட்டான், அப்போ விழுந்தவர் தான். மூளைக்கு முழுசா ரத்தம் போகாம ஏதோ பிளாக் ஆயிடுச்சாம். மறதி நோய்டா...” என்றவன் தொடர்ந்தான் “மூணு மாசம் முன்னால அசந்த நேரத் துல வெளியே போயிட்டாரு.
வீட்டுக்குத் திரும்பி வரத் தெரியலை. காலைல 8 மணிக்குப் போனவரை ராத்திரி 9 மணிக்கு மேல பேங்க் வாசல்ல கண்டு பிடிச்சோம். எங்கெங்கேயோ சுத்திட்டு, அங்க போய் படுத்திருக்காரு. பேங்க் திறக்கறதுக்காக வெயிட் பண்றாராம்! அப்புறம்தான் ரெண்டாயிரம் ரூபா செலவு பண்ணி, ரூமுக்கு கிரில் கேட் போட்டோம்...”
வீராவின் அம்மா ஜாடை காட்டியதும், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து அதே அறைக்குள் செலுத்தி, கிரில் கதவை மீண்டும் பூட்டினான் அவன்.
“டாக்டர்கிட்ட காட்டினீங்களா..?”
“எவ்வளவோ செலவு பண்ணியாச்சு, தம்பி. அமெரிக்காலேர்ந்துகூட மாத் திரை வரவழைச்சோம். ஒரு மாத்திரை தொள்ளாயிரம் ரூபா. எதுவும் வேலைக்கு ஆவல…”
உள்ளறையில் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் நான்கைந்து நோட் புத்தகங்கள்.
“பில் நம்பர் 1027. சரக்கு ரெண் டாயிரத்து முந்நூத்தி எண்பது ரூபா. வண்டிக் கூலி, நூத்தி இருபது ரூபா…” என்று விரல்விட்டு எண் ணிக்கொண்டிருந்தார்.
“ராத்திரி ஒரு மணிக்கு எழுந்து லைட்டைப் போட்டுக்கிட்டு நோட்ல வரவு செலவுனு கிறுக்கிட்டு இருப்பாரு.. இதுக்கு முடிவே இல்ல…” என்றான், வீரமணி.
மனசு வலித்தது.
‘கனாக் கண்டேன்’ திரைப்படம். பிறந்த வீட்டில் இருந்து வாங்கிவந்த பணத்தை, வட்டிக்கு மேல் வட்டி கேட்கும் மதனின் மேஜையில் வாரிக் கொட்டுவாள், அர்ச்சனா (கோபிகா).
“ஃப்ரெண்ட்னு கூடப் பார்க்காம ஏன் பணம், பணம்னு அலையற..?” என்று கலங்குவாள்.
மதன் (பிருத்விராஜ்) சிரிப்பான்.
“ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை. ஆர்வம். லட்சியம். எனக்கு? பணம்..! ஐ ஜஸ்ட் லவ் தி ஸ்மெல் ஆஃப் கரன்ஸி...” என்று பணத்தை எடுத்து முகர்ந்து ரசிப்பான்.
இறுதிக் காட்சியில் நாயகனுடன் சண்டையிட்டு மின்சாரம் தாக்கி விழுந்து பிழைத்த பின், தெருவோரம் மனநலம் தவறியவனாகச் சுருண்டு கிடப்பான் - எல்லாமே மறந்துபோனவனாக!
இந்தக் காட்சியை அமைப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது, வீரமணியின் அப்பாவைப் பார்த்தது.
- வாசம் வீசுவோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT