Published : 13 Mar 2015 10:33 AM
Last Updated : 13 Mar 2015 10:33 AM

சுவரில் முட்டிக்கொண்ட போஸ்டர் டிசைனர்!

“என்னைக் கேட்டால் வடிவமைப்பு என்பதன் இன்னொரு அர்த்தம் வியப்பு என்று சொல்லுவேன்” என்று போஸ்டர் டிசைனுக்குப் புது அர்த்தம் கொடுத்துப் பேச ஆரம்பிக்கிறார், 25 வயதில் 24AM என்ற வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி கவனிக்க வைத்திருக்கும் ட்யூனி ஜான். அவரிடம் சினிமா போஸ்டர் வடிவமைப்பு பற்றி உரையாடியதிலிருந்து..

சினிமா போஸ்டர் வடிவமைப்பு துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

எனக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம். கல்லூரிகள் கலந்துகொண்ட கலை விழா ஒன்றுக்கு போஸ்டரையும் வடிவமைத்துக் கொடுத்தேன். உனக்கு டிசைன் நன்றாக வருகிறது இதைப் போலவே முயற்சி செய் என்றார்கள். பிறகு சென்னையில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக வடிவமைப்பு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். பிறகு வடிவமைப்பு வேலையை நாமே ஏன் தனியாகச் செய்யக் கூடாது என்று எனது 24AM நிறுவனத்தைத் தொடங்கிவிட்டேன்.

ஒரு படத்துக்கான போஸ்டர் வடி வமைப்பை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

ஒரு படத்தின் போஸ்டர் வடிவமைப்பு என்பது அதன் டைட்டில் டிசைனில் ஆரம்பிக்கிறது. இதுதான் படத்தின் கதை, டிசைன் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சொல்லுவார். கதையைச் சொன்னால் பாதுகாப்பு கிடையாது என்று சிலர் ஒருவரிக் கதையை மட்டும் சொல்லுவார்கள். அப்போது வடிவமைப்பில் வேறுபாடு காட்டுவது உண்மையில் சவாலாகிவிடும். அல்போன்ஸ் புத்திரன் என்னுடைய நண்பர். ‘நேரம்’ படத்தின் முழுக் கதையையும் என்னிடம் சொல்லிவிட்டார், அதனால் அந்த படத்தின் போஸ்டர் வடிவமைப்பை வித்தியாசமாகச் செய்ய முடிந்தது. இப்படித்தான் ஒவ்வொரு படமும்.

போஸ்டர் வடிவமைப்புக்கு உங்களுக்கு உடனுக்குடன் பாராட்டு கிடைக்குமா?

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள நண்பர்கள் நன்றாக இருந்தால் கொண்டாடி விடுவார்கள். அதை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம். ‘பீட்சா’, ‘அட்டக்கத்தி’ படங்களுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ‘நேரம்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. ‘ஜிகர்தண்டா’, ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களுக்கும் நிறைய பாராட்டுகள் குவிந்தன. ‘மாஸ்’ படத்தின் போஸ்டர் பார்த்துவிட்டு, “சூப்பர் பாஸ்” என்று சூர்யா போன் பண்ணி பாராட்டினார். ‘ஜிகர்தண்டா’ படத்துக்கு சித்தார்த் பாராட்டினார். முக்கியமாக இயக்குநர்கள் போன் செய்து பாராட்டுவார்கள். அதைப் பெரிதும் மதிக்கிறேன்.

படங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

ஒரு படம் ஒப்புக்கொள்ளும் முன்னால் பட்ஜெட் என்ன, எப்போது வெளியீடு, எப்போது இசை வெளியீடு என்று கேட்பேன். ஆனால் வித்தியாசமான கதை வரும்போது யோசிக்காமல் ஒப்புக் கொள்வேன். இப்போதுகூட ‘ஜின்’ என்ற படத்துக்கு போஸ்டர் வடிவமைக்கிறேன். காரணம் நான் யோசித்து விளையாடுவதற்கு அந்த போஸ்டரில் நிறைய இடங்கள் இருக்கின்றன. கதைக் களம் அப்படி.

படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறதா?

நிறையப் பேர் கூப்பிடுவார்கள். சிலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். படத்தின் முதல் போஸ்டர் வடிவமைப்பை நான்தான் செய்கிறேன். ஆனால் நிறையப் பேர் மதிக்க மாட்டேன் என்கிறார்கள். “ போஸ்டர் வடிவமைப்பு என்பது முன்னர்தான் கடினம். ஆனால் இப்போதுதான் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டதே. கம்ப்யூட்டரைத் தட்டினால் வடிவமைப்பு வந்துவிடப் போகிறது” என்று என்னிடம் சொன்னார் ஒரு இயக்குநர். எனக்குச் சுவரில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. அப்படி எல்லாம் போஸ்டர் வடிவமைப்பு பண்ணிவிட முடியாது. இது நிச்சயமாகப் படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது. மென்பொருட்கள் என்பவை வண்ணங்களும், தூரிகைகளும் தரும் கருவிகள் மட்டுமே. வடிவமைத்தல் என்பது நம் படைப்பாற்றல் சார்ந்தது. மென்பொருட்களில் பரிச்சயம் இருந்தால் மட்டும் போதாது.

நீங்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தபோதும், இப்போதும் உங்களது வீட்டில் என்ன சொல்கிறார்கள்?

ஏதோ சொல்ற பண்ணிப் பாரு என்று அனுப்பினார்கள். நான் கண்டிப்பாக இதில் ஜெயிப்பேன் என்று உறுதியாகக் கூறியவுடன், இவ்வளவு உறுதியாக இருக்கிறபோது கண்டிப்பாகப் பண்ணு என்று ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்கள். தொடக்கத்தில் பணக்கஷ்டம் வரும்போதெல்லாம் நிறைய உதவி பண்ணினார்கள்.

தனியாக நிறுவனம் என்று ஆரம்பிக்கும்போது கூட, “யோசித்துப் பண்ணு, மாதச் செலவுகள் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றார்கள். உறுதியாக இருக்கிறேன், என்னால் முடியும் என்றேன். இப்போது என்னுடைய வளர்ச்சி அப்பா, அம்மா, தங்கை நண்பர்கள் என எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனால் அவர்களுக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. நான் வீட்டுக்குப் போய் நான்கு மாதம் ஆகிறது. எப்படியாவது போக வேண்டும் என்று முயற்சி பண்ணும்போது பணிகள் வந்து குவிந்துவிடும். அவர்களது இந்த வருத்தத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும்.

இயக்குநராகும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

இப்போது நிச்சயமாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் நல்ல ஒரு சினிமாவுக்கான கதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x