Published : 30 Jan 2015 10:16 AM
Last Updated : 30 Jan 2015 10:16 AM
எம்.ரமேஷ், சேலம்.
காதலித்த அனுபவம் உண்டா கிரேசியாரே..?
மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காதான் எனது காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் என் கூட்டாளிகள் விச்சு, நடராஜனுடன் பூங்காவுக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவேன். அந்நாளில் மயிலாப்பூர் லவ் ரொம்ப ஆச்சாரத்தோடு இருந் தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளியை விட்டு காதலர்கள் அமர்ந்திருப்பார்கள்.
அவர்களில் பாதி பேர் வேட்டி, காலரில் அழுக்கு ஏறாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த பனியனுடன் இருப் பார்கள். காதல் நிறைவேற நெற்றியில் கபாலீஸ்வரர் விபூதி, கற்பகாம்பாள் குங்குமம் இருக்கும்.
காதலர் இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே பூங்காவின் புல்லைப் பிடுங்கிப் பிடுங்கி, வாயில் வைத்து கடிப்பார்கள். காதலர்கள் வருவதற்கு முன்பு ஹவுஸ் ‘புல்’ ஆக இருந்த பூங்கா, அவர்கள் எழுந்து போகும்போது புல்லே இல்லா மல் கார் பார்க் செய்யும் அளவுக்கு வெட்டவெளியாகிவிடும்.
காதல் தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். காதலில் வெற்றி அடைந்து கல்யாணமாகி, அது தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இதை எல்லாவற்றையும்விட வேடிக்கை என்னவென்றால்..
அன்று நாங்கள் பார்த்த காதல் ஜோடிகளில் ஓரிரு ஜோடிகள் இன்றும் கூட அதே நாகேஸ்வரராவ் பூங்காவில் இளம் நரை, கொட்டாவி, ஏப்பம், இருமலோடு புல்லைப் பிடுங்கிக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காதலர்களை வேவு பார்ப்பதிலேயே ஜென்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்த எங்கள் மூவரில், அசமஞ்சமாக பேசும் நடராஜன் பூங்கா பெஞ்சில் அமர்ந்து கெமிஸ்ட்ரி படித்த கவுசல்யா வைக் கண்டதும் காதலாகி, கசிந்துருகி கண்ணீர் மல்க ஆரம்பித்தான். அந்நாளில் சைக்கிள் வித்தைகள் தெரிந்த நடராஜனை ’ஹெர்குலிஸ்’ஸாகவே பெண்கள் மதிப்பார்கள்.
நடராஜன்… சைக்கிளில் சரளி வரிசை, ஜண்ட வரிசை, கீர்த்தனம் எல்லாம் வாசிக்கும் மகாவித்வான். கவுசல்யாவின் கவ னத்தை ஈர்க்க நடராஜன் சைக்கிளில் அசுர சாகசங்களை செய்வான். கவுசல்யா ‘நீயல்லவோ சைக்கிள் வீரன்’ என்று கண்களால் தெரிவித்துவிட்டு, சும்மா போய்விட்டாள்.
நடராஜன் கேட்டுக்கொண்டதன் பேரில் ஓரளவு ஆகுபெயர், வினைத் தொகைத் தெரிந்த விச்சு…
‘கவுசல்யா… நீ வானம்னா நான் பூமி
நீ பூமின்னா… நான் வயல்
நான் வயல்னா… நீ நாத்து
நீ நாத்துன்னா… நான் வாத்து’
என்கிறரீதியில் ஒரு காதல் கடிதம் எழுதித் தர...
நடராஜன் அதை நேரிடையாக அவளிடம் தந்தான். அதைப் படித்து விட்டு சிறிது நேரம் விசும்பி விசும்பி அழுத கவுசல்யா, நடராஜனின் வலது கையைப் பிடித்து,
‘கவிதை எழுதிய கைக்கு என் பரிசு’ என்று கையில் முத்தமிட்டுவிட்டு நடராஜனை பேசவிடாமல் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். அவர்கள் இருவருடைய வீட்டிலும் காதலுக்கு மரியாதை இல்லை. நடராஜனும் கவுசல்யாவும் பம்பாய்க்கு ஓடிப் போகும் திட்டத்தை நான் முன்மொழிய, விச்சு பின்வழிந்தான்.
மறுநாள் இரவு 8 மணிக்கு நாங்கள் நாகேஸ்வரராவ் பூங்காவில் நுழைந்தபோது திட்டமிட்டபடி ஆல மரத்தடியில் நீலப் புடவையுடன் கவுசல்யா அமர்ந்திருந்தாள். நடராஜன் அருகில் சென்று ‘கவுசி… ரெடியா..?’ என்று தோளைத் தொட்டுத் திருப்ப, கவுசல்யாவின் அப்பா நீலப் புடவையைக் களைந்து, ‘ம்... ரெடி… ஸ்டெடி… ஜூட்’ என்று சொல்லி நடராஜனைத் துரத்தித் துரத்தி அடித்தார்.
சமீபத்தில் கவுசல்யாவை அம்பிகா அப்பளம் வாசலில் பார்த்தேன். ‘என்ன மோகன் சவுக்கியமா..?’ என்று கேட்டுக்கொண்டே கடைக்குள் பார்த்து, ‘ஏங்க... யார் பாருங்க இங்கே...’ என்று அழைக்க, விச்சு நான்கு குழந்தைகளுடன் வந்தான்.
கவுசல்யாவின் அப்பாவிடம் போட் டுக் கொடுத்து, நடராஜனை ஒதுக்கி விட்டு… இடைச் செருகலாக உள்ளே நுழைந்து கவுசல்யாவைக் கைப்பற்றிய விச்சுவை வில்லன் என்று சொல்ல முடியாது. தற்போது ஒரு பெரிய விளம்பரக் கம்பெனி முதலாளியாக இருக்கும் விச்சு, கவுசல்யாவை சவுகரியமாக காப்பாற்றி வருகிறான்.
நடராஜன் மயிலையில் சைக்கிள் கடை வைத்து இப்போதும் சைக்கிள்களுக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான்!
(ஊரைச்சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாதும் பாங்க. அதனால பேர்களை மாத்தியிருக்கேன்.)
கே.சம்பத், துபாய்.
கடவுள் உண்டா... இல்லையா சார்?
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அடிக்கடி சொல்வார்: ‘நாளைய கடவுள்’ (God of Tomorrow) என்று. அதாவது, இன்று நாம் நல்லது செய்தால் ‘நாளைய கடவுள்’ நாளை பலனளித்துவிட்டு ‘மறு நாளைய கடவுள்’ ஆகிவிடுவார்.
ஆக, நாமும் நாளை நல்லன செய்ய வேண்டிய கட்டாயம். ‘கடவுள் எப்போதும் நமக்கு ஒருநாள் முந்தி இருப்பார்’ என்பது அவர் வாக்கு. If Our Prayer is Sound, then God will travel faster than Light to answer . இதுதான் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி. பந்திக்கு நாம் முந்தினால் நமக்குப் பரிமாற இறைவன் முந்துவார்!
எம்.பி.சாமிநாதன், சங்கரன்பந்தல்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களில் உங்களைக் கவர்ந்த வரிகள்?
எதை எடுத்துச் சொல்வது? சமுத்திரத்தை சீஸாவில் அடக்கச் சொல்கிறீர்களே சாமி!
‘இந்தியன்’ படத்தில் ’பச்சைக் கிளிகள்’ பாடலின் சரணத்தில் வரும் ‘என் காதுவரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்’. என்கிற வரியின் வலிமை மூப்பில் விழுந்தவர்களுக்குத்தான் நன்கு புரியும். அந்தப் பாடலை ‘உன் விழியால் பிறருக்கு அழுதால்… கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தமே!’ என்று நிறைவு செய்திருப்பார்.
‘ராஜபார்வை’ படத்தில் ‘தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது’ என்று உருகுவார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். கவிப்பேரரசின் பல வரிகள்… அணிலின் முதுகில் ராமர் போட்ட வரிகளுக்கு சமமானவை. திருக்குறளின் அறத்துப் பாலிலும், பொருள் பாலிலும் அறிஞனாகக் காட்சியளிக்கும் வள்ளுவர், காமத்துப் பாலில் கவிஞனாகக் கொஞ்சுவார். காமத்துப் பால் வள்ளுவருக்கு இணையான ‘கிராமத்துப் பால் வல்லவர்’ நமது வைரமுத்து!
சி.மணி, விருத்தாசலம்.
ராமாயணத்தை சுருக்கமாகச் சொல்ல முடியுமா?’
‘மூக்கறுந்த சூர்ப்பனகை ரோஷம்
நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
மானானான் மாரீசன்
மண்ணானான் லங்கேசன்
காகுத்தன் (ராமர்) கதை இதிகாசம்!’
- இன்னும் கேட்கலாம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT