Last Updated : 03 Feb, 2015 11:22 AM

 

Published : 03 Feb 2015 11:22 AM
Last Updated : 03 Feb 2015 11:22 AM

வெட்டிவேரு வாசம் 21: தவறவிட்ட புதையல்!

பள்ளிப் படிப்பின்போது ‘சாரணர்’ இயக்கத்தில் ஆசையுடன் சேர்ந்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை களில் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை வகுப்புகள். முதலில் வியர்வை பொங்கும் உடற்பயிற்சிகள். ஒழுங்கு, சுத்தம், கட்டுப்பாடு போன்றவை அங்கே தாரக மந்திரங்கள்.

‘ராணுவ முடிச்சுகள்' போடச் சொல்லித் தருவார்கள். புத்தகக் கட்டமைப்பு போன்ற சிறு தொழில்களைக் கற்றுத் தருவார்கள்.

ஒருமுறை ஆவடிக்கு அருகில் ஓர் இடத்தில் முகாமிட்டுத் தங்கினோம். வெவ்வேறு பள்ளிகளில் இருந்து ‘சாரணர்’ மாணவர்கள் வந்திருந்தனர். கூடாரத்துக்கு மூன்று பேர் என 15 கூடாரங்கள். இரவுகளில் தீ வளர்த்து, ஆட்டம், பாட்டம், நாடகம் என மறக்க முடியாத தினங்கள்.

ஒருநாள் காலை ஆசிரியர் எங்களை அழைத்து வரிசையாக நிற்கச் சொன்னார். ஐந்து, ஐந்து பேர் கொண்ட குழுக்களாக எங்களைப் பிரித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விலங்கின் பெயரைச் சூட்டினார். நாங்கள் ‘யானைகள்'!

“இப்போது, புதையல் வேட்டையாடப் போகிறோம்” என்றார். விதிமுறைகளை விளக்கினார்.

புதையல் வேட்டை என்பது இரண்டு மணி நேர சுவாரசியம். ஒரு பரிசுப் பொருள் எங்கோ ஒளிந்திருக்கும். சில புதிர்க் குறிப்புகள் நம்மை அதை நோக்கி அழைத்துச் செல்லும். சில குறிப்புகள் திசை திருப்பியும்விடும். எந்தக் குழு முதலில் இலக்கை எட்டுகிறதோ அது புதையலைப் பரிசாக அடையும்.

வேட்டையைத் தொடங்கினோம். நான் இருந்த குழுவில் என்னுடன் அக்பர், ரமணி, மகேந்திரன் மற்றும் சுப்பிரமணியன்.

ஒரு புளிய மரத்தில் தொங்கிய அட்டை, ‘நூறடியில் தாகம் தீர்' என்ற குறிப்புடன், அம்புக் குறி வரையப்பட்டு காற்றில் ஊசலாடியது. அம்புக் குறி ஆகாயத்தைச் சுட்டியது. போட்டிக் குழு சாரணன் ஒருவன் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது ஏறினான். இன்னொரு குழு மரத்தின் பின்னால் இருந்த ஒற்றையடிப் பாதையில் விரைந்தது.

யோசித்தோம். வரைபடங்களில் மேல் நோக்கி வரையப்பட்டிருக்கும் அம்புக் குறி வடக்கு திசையைத்தானே குறிக்கும்? வடக்கில் சென்றோம்.

நூறாவது அடியில் ஒரு அடி பம்பு. அருகிலேயே இன்னொரு புதிர்க் குறிப்பு. இப்படி அடுத்தடுத்து குறிப்புகள் கொண்டு நான்காவது கட்டத்துக்கு வந்தோம். அங்கே, அடுத்த குறிப்பு: ‘விநாயகர் விரும்பும் வெள்ளெருக்குப் பூ’.

பார்த்தால் 50 அடியில் மரத்தடி விநாயகர்! ஓடினோம். விநாயகருக்குச் சற்றுத் தள்ளி வெள்ளெருக்கஞ்செடியில் பூக்கள் முகிழ்த்திருந்தன. அதற்கப்புறம் இரண்டே குறிப்புகள்தான். புதையலை அடையலாம்.

‘ஆஹா' என்ற பரவசக் குரலுடன் செடியை நோக்கி ஓடியபோது, ரமணி கீழே விழுந்தான். ‘ஹெ ஹெ…’ என்று அவனுக்கு மூச்சிரைத்தது.

“ரமணி... ரமணி…”

அவனால் பேச முடியவில்லை. ஆஸ்துமா உள்ளவர்களின் முதுகில் காது வைத்துக் கவனித்தால் இரைப்புச் சத்தம் கேட்கும். ரமணியை மடியில் சாய்த்து முதுகில் காது வைத்தேன். உள்ளே ‘கிர்ரங்க்… கிர்ரங்க்…’ என்று இழுப்பு ஒலி. உடனே முதலுதவி அளித்தாக வேண்டும். முகாம் இருந்த பகுதிக்கு எடுத்துச் செல்ல நேரமாகும். வேறென்ன முதலுதவி செய்வது?

புதையல் வேட்டையாடிய மற்ற குழுவினர் விநாயகரைக் கடந்து வெள்ளெருக்கஞ்செடியை நோக்கி உற்சாகத்துடன் வந்தார்கள். அவர்களை நிறுத்தி உதவி கேட்க முயன்றோம். புதையலைக் கண்டுபிடிக்கும் ஆர்வத் தில் யாரும் நிற்கவில்லை.

அந்த வழியாக கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளை ஓட்டி வந்தார். ஓடிப் போய் மறித்தோம். விவரத்தைச் சொன்னோம்.

“பக்கத்துல மெயின் ரோட்ல ஆஸ்பத்திரி. வாங்க போலாம்…” என்றார்.

ரமணியைக் கேரியரில் உட்கார வைத்து, கூடவே ஓடினோம். 10 நிமிடங்களில் ஆஸ்பத்திரி வந்துவிட்டது.

ரமணிக்கு முதலுதவி அளித்துக்கொண்டிருந்த போது, செய்தியறிந்து, சாரணர் ஆசிரியர் வந்து சேர்ந்தார். கிராமத்து மனிதருக்கு நன்றி சொன்னார். எங்கள் எல்லோரையும் சேர்த்து அப்படியே அணைத்துக்கொண்டார்.

அரை மணி நேரத் திலேயே ரமணிக்கு மூச்சு சீரானது. புதையலைத் தவற விட்டுவிட்டோமே என்று ரமணிக்கு லேசான வருத்தம்.

முகாமுக்குத் திரும்பிய தும், ஆசிரியர் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினார்.

“பாய்ஸ், நம்மகிட்ட எது இருக்கோ இல்லையோ. மனிதநேயம்கறது கண்டிப்பா வேணும். அதைப் புரியவைக்கிற மாதிரி இன்னைக்குப் புதையல் வேட்டை நடந்திருக்கு. புதையலைவிட முக்கியம் நண்பனோட ஆரோக்கியம்தான்னு அவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போன ‘யானை குழு’தான் உண்மையில் வெற்றி பெற்றவங்க. அந்தப் பசங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்புப் பரிசு தரப் போறேன்...”

‘ஹிப் ஹிப் ஹிப் ஹூர்ரே’ என்று சாரணர் பாணியில் எல்லோரும் குரல் எழுப்பினர். புதையலைவிட பெரிய பரிசு கிடைத்ததுபோல் அன்றைக்குப் பெருமையாக இருந்தது. பரிசாகக் கிடைத்த அழகான ஒரு பைலட் பேனா வெகுகாலம் என்னிடம் இருந்தது.

‘180’ திரைப்படத்தில் கதாநாயகி ரேணுகாவுக்குப் பிறந்த நாள். அவளை (ப்ரியா ஆனந்த்) ஏங்கவிட்டு, கணவன் அஜய் (சித்தார்த்) அவள் எதிர்பாராத தருணத்தில் ஒவ்வொரு பரிசுப் பொருளாகத் தந்து, அவளை அசத்துவான் என்று பாடலுடன் கூடிய ஒரு காட்சி அமைப்பு.

சாரணர்களின் புதையல் வேட்டை போல் இதை அமைக்கலாம் என்று சொன்னதும், இயக்குநர் ஜெயேந்திரா சம்மதித்தார். புதிர்கள் நிறைந்த பாடல் காட்சியில், ஒவ்வொரு விடையை கண்டுபிடிக்கும்போதும், நாயகிக்கு ஒரு பரிசு கிடைக்கும்.

‘தீயே இன்றியே நீ என்னை வாட்டினாய்’ என்ற குறிப்பு அவளை மைக்ரோ அவனுக்கு இழுத்துப் போகும். அங்கே ஒரு பரிசு. ‘ஓடும்... ஓடும். அசையாதோடும் அழகியே’ என்ற இன்னொரு குறிப்பு மூலம் கடிகாரத்தில், இன்னுமொரு பரிசு கிடைக்கும்.

இப்படியே போய், இறுதியில் மிக அழகான கார் ஒன்றில் அவள் கணவனே பரிசாகக் காத்திருப்பான். பார்த்தவர்கள் ரசித்த ‘நீ கோரினால் வானம் மாறாதா?’ பாடல் காட்சிக்கான பின்னணி இதுதான்.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x