Published : 06 Feb 2015 12:34 PM
Last Updated : 06 Feb 2015 12:34 PM
ஒரு நடிகரின் உடலில் அசைவூட்டம் மிக்க குறிப்பிட்ட சில இடங்களில் சென்சார்களைப் பொருத்துவது மோஷன் கேப்சரிங் படப்பிடிப்புக்கு முதல் அடிப்படை. மெய்நிகர் கேமரா வழியாக அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாகப் பதிவுசெய்து, அந்த அசைவுகளை கம்ப்யூட்டர் மாடலிங் மூலம் உருவாக்கப்பட்ட உருவத்துக்கு உயிர் கொடுத்து செயல்பட வைப்பதுதான் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம்.
ஆனால் இந்தமுறையில் பெறப்பட்ட வெர்ச்சுவல் நடிகர்களின் நடிப்பு உழைப்பை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் தத்ரூபமாக எடுத்துக்கொள்ளவில்லை. அசைவுகள் செயற்கையாக இருந்தன. எனவே இம்முறையில் பெறப்பட்ட அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்தி மெருகூட்ட வேண்டிய கட்டாயத்தை மோஷன் கேப்சரிங் ஏற்படுத்தியது. இம்முறை ஏற்படுத்திய வேலைப்பளு மற்றும் கால தாமதம் காரணமாகப் பிறந்ததுதான் ‘பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்’.
இந்தியாவில் இந்த முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே கோச்சடையான் திரைப்படம் முதன்முறையாக உருவானது. கோச்சடையானின் அனிமேஷன் தரம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங் முறையை முழு வீச்சில் பயன்படுத்துவதில் தமிழ் சினிமா அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பின் தங்கிப்போய்விடவில்லை என்பதை உலகுக்குக் காட்டியது.
பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங் முறை அதிவேகத்தில் பிரபலமடைந்தாலும் அதிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்தன. மோஷன் கேப்சரிங் முறையைவிட மேம்பட்ட சென்சார்கள் கூடுதலான எண்ணிக்கையில் வெர்ச்சுவல் நடிகரின் உடலில் பொருத்தப்பட்டன.
இதற்காக சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு உடை தயார்செய்யப்பட்டது. அதை அணிந்துகொண்டு வெர்ச்சுவல் நடிகர்கள் நடிக்க ஆரம்பித்தார்கள். இம்முறையில் நடிகர்களின் நடிப்பு கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட கதாபாத்திர உருவத்துக்குச் சிறப்பாகப் பொருந்தி வரக் காரணமாக பெர்ஃபாமென்ஸ் கேப்சர் செய்யப் பயன்படும் இந்த ‘லைக்ரா’எனப்படும் உடை முக்கியக் காரணமாக அமைந்தது.
பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் முதன் முதலாக வந்த படம் என்று ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’படம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பே வெளியான ‘மேட்ரிக்ஸ்’, ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ ஆகிய படங்களில் இம்முறையின் மேம்படுத்தப்படாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவதார் திரைப்படம் வழியே பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் தொழில்நுட்பம் அனிமேஷன் உலகின் அவதாரமாக மலர்ந்தது.
பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் தொழிநுட்பம் வழியே கம்யூட்டர் மூலம் 3டி முறையில் வரையப்பட்ட கதாபாத்திர உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு அனிமேஷன் உருவத்துக்கோ (கோச்சடையான்) உயிர்கொடுக்க முடியும். இப்படிப் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகருக்காக பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் நடிக்க ஒரு வெர்ச்சுவல் நடிகரை அமர்த்தலாம்.
அல்லது பிரபலமான அந்த நட்சத்திரமே தனது கதாபாத்திரத்துக்காக பெர்ஃபாமென்ஸ் முறையில் நடிக்கலாம். கோச்சடையனுக்காகத் தனது கதாபாத்திரத்தை ரஜினியே நடித்தார். அவருக்காகப் பல காட்சிகளில் சில் இளம் நடிகர்களும் அவரது உடல்மொழியை வெளிப்படுத்தி நடித்தார்கள்.
இப்படி உருவாகும் படத்தில் காட்சியில் இருக்கும் பின்னணிச் சூழலை கம்ப்யூட்டரில் வரைந்து பிரமாண்டமாக அமைக்கலாம் என்பதை ஏற்கனவே பார்த்தோம் அல்லவா? அதைத்தான் ‘வெர்ச்சுவல் வேல்ட்’ என்று அழைக்கிறார்கள். இங்கே கற்பனைக்கு எல்லையே இல்லை. வெர்ச்சுவல் உலகம் காரணமாக வெளிப்புற படப்பிடிப்பு என்பதே அனிமேஷன் படங்களுக்கு தேவைப்படாமல் போய்விட்டது.
நடிகர்கள் எங்கேயும் அலையாமலேயே மொத்தப் படத்தையும் ஸ்டுடியோவுக்குள்ளேயே உருவாக்கிவிட முடியும். இன்று பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் ஏற்பட்டிருக்கும் அசுர வளர்ச்சியை அடுத்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT