Published : 20 Feb 2015 09:46 AM
Last Updated : 20 Feb 2015 09:46 AM
எம்.ரமேஷ், சென்னை-91.
பாண்ட் (Bond) என்பதற்கு தமிழில் பத்திரம் என்று எப்படி பெயர் வந்திருக் கும் சார்?
சவுல்ட்ரி (Choultry) என்பதற்கு தமிழில் சத்திரம் என்று எப்படி பெயர் வந்ததோ, அதுபோல பாண்ட் என்பதற்கு பத்திரம் என்று பெயர் வந்திருக்கலாம். ‘ச’னா வுக்கு ‘ச’ போல ‘பா’னாவுக்கு ப. எனக்கு எட்டியது அவ்வளவுதான்.
கோமதி நமச்சிவாயம். திருநெல்வேலி.
கடவுளுக்கு தலை முடி நரைத்தால் என்ன செய்வார்?
கடவுளுக்கு எதுக்கய்யா ‘GOD’ரெஜ்!
தேமொழி, கலிஃபோர்னியா.
ராமாயணத்தை சுருக்கமாகச் சொன் னது மாதிரி மகாபாரதத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்?
‘பூலோகம் கொண்ட பெரும் பாரம்
நூலாகக் கண்ணன் அவ தாரம்
பாஞ்சாலி சபதமும்
பார்த்தனுக்கு கீதையும்
பெருமாளின் வ்யாபார பேரம்’
எம்.அஷ்வின், சென்னை-14.
நீங்கள்… காப்பியா, டீயா?
‘டீ’ அடிச்சான் காப்பி!
கி.மகாலிங்கம், ஆவுடையார்கோயில்.
உங்களுக்கு ரொம்பவும் பிடித்த கண்ணதாசன் பாடல் எது? ஏன்?
கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள எழுத்து மதம் கொண்ட ஆனை!’ என்னைப் பொறுத்தவரையில் கம்பர்... முதற் சங்கம். பாரதியார்… இடைச் சங்கம், கண்ணதாசன்... கடைச் சங்கம்!
திரைப்படப் பாடல்களில் இவர் எவரெஸ்ட் என்றால் ‘அழகு சமுத்திரம் அம்பாள்’ (சவுந்தர்யலஹரி மொழி பெயர்ப்பு) , ‘பொன்மழைப் பாடல்கள்’ (கனகதாராஸ்தவம் மொழிபெயர்ப்பு), கிருஷ்ண கானம் போன்ற தனிப் பாடல்களில் மேரு மலை!
எனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ’கந்தன் கருணை’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்.
‘உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா
உன் குரலன்றோ…’ - என்கிற கவிஞரின் வரிகள் ஆன்மிகத் தின் தேசிய கீதம்.
அதேபோல கவியரசரின் தனிப் பாடல்களில்...
‘படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா’ - என்ற வரிகளை ராமனும் குகனும் கேட்டிருந்தால் ‘நின்னொடு அறுவரா னோம்’ என்று கவியரசைக் கட்டித் தழுவியிருப்பார்கள். சமஸ்கிருதத்தில் ‘வேதாந்த தேசிகரை’கவிதார்கிக கேசரி (கவிகளில் சிங்கம்) என்பார்கள். சுவைமிகு கண்ணதாசனோ ‘கவிதார்கிக ஸ்வீட் கேசரி!’
ஓவியர் ஜீவா வரைந்த கவியரசர் ஓவியத்தை நண்பர் இரா.முருகன் எனக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜீவாவுக்கு ஒரு வாழ்த்து வெண்பா:
'உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்'
அயில்வேலோன் வாக்கென்ற அந்த - மயிலிறகு
கண்ணனின் தாசனைக் கண்ணெதிரில் கொண்டுவந்த
வண்ணதாசன் ஜீவாக்கு வாழ்த்து.’
உமா சண்முகம், திருநெல்வேலி.
நாடக உலகில் உங்களின் அடுத்த வாரிசு என்று யாரை சொல்வீர்கள்?
சொத்தைத் தவிர வேறு எதையும் வாரிசுக்கு வழங்கும் உரிமை நமக் கில்லை. ஜெயகாந்தன்தான் கூறுவார்: ‘விஸ்வரூபம் காட்டப்படுவது அன்று. காணப்படுவது’ என்று. அதேபோல ‘வாரிசுகள் உருவாக்கப்படுவது இல்லை. உருவாவது’.
என் தம்பி மாது பாலாஜி பல இளைஞர்களை எங்கள் நாடகக் குழுவில் சேர்த்திருக்கிறான். இவர்களில் வாரிசு யார் என்பது வாரிசத்தில் (தாமரை) அமர்ந்த வாணியின் சிபாரிசைப் பொறுத்தது!
ரங்கராஜன், ஸ்ரீரங்கம்
வீட்டில் ஏதாவது வாங்கி வர பணம் கொடுத்து, அதில் நீங்கள் உள்கமிஷன் அடித்து... மாட்டிக்கொண்ட அனுபவத்தை சிரிக்க சிரிக்க எழுதுங்களேன்?
சிறு வயதில் ‘ஸ்டாம்ப்’ (ஸ்டாம்ப் கலெக்ட்டிங்) சேர்க்கும் பழக்கம் இருந்தது. மயிலை விஜயா ஸ்டோர்ஸில் கோவா, டையூ, டாமன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா ஸ்டாம்ப்கள் கடை முகப்பில் கவர்ச்சிக் கன்னியாய் என்னை ஈர்த்தன. என் கையிலோ தொண்டி கால ணாக் கூட இல்லை. கோனார் நோட்ஸ் வாங்குவதாக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கி, அந்தப் பணத்தில் விஜயா ஸ்டோர்ஸில் ஆசை தீர ஸ்டாம்ப்கள் வாங்கினேன்.
அம்மாவுக்கு எப்படியோ எனது தில்லுமுல்லு தெரிந்து கச்சமுச்சா என்று திட்டிவிட்டாள். ஆறுவது சினம் அறியாத மோகன் நான் ‘வீட்டை விட்டு ஓடிப் போறேன்’என்று ஊரறியக் கத்தி விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடினேன்… ஓடினேன்… தெருக்கோடி வரை ஓடினேன். பின்னால் துரத்திய தெரு நாய் போரடித்து ஜகா வாங்க, தெருக்கோடி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நாதஸ்வரக்காரர்களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
யாராவது வந்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார் களா… என்று காத்திருந்தேன். எனது பாட்டி என்னைத் தேடி வந்து… ‘‘டேய் மோகன்... ஓடறதுதான் ஓடறே சாப்பிட் டுட்டு ஒடுறா, சமச்சது வீணாப் போய்டும்’ என்றாள். விட்டை விட்டு ஓடியவன் திரும்பி வந்ததைக் கொண் டாட, என் பாட்டி எனக்கு அப்பளம் பொரித்துப் போட்டாள்.
பிறகு, உடனே விஜயா ஸ்டோர்ஸுக்குச் சென்று ‘தோ… பாருங்கோ. நீங்க என் பேரனுக்குத் தந்த ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப முத்தலா இருக்கு’ என்று சொல்லி திருப்பித் தர, எனது ‘பாட்டி சொல்லைத் தட்டாத’அந்த ஓனரும், அப்பள எண்ணெயில் பிசுபிசுப்பான ஸ்டாம்ப்களை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
பி.டி.உஷாவுக்கு போட்டி உஷாவாக ஓடிய ரேஸி மோகன், அன்று முதல் ஸ்டாம்ப் சேர்ப்பதையே விட்டுவிட்டேன். இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை… என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பத்மா மணாளன், திருநின்றவூர்.
‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘இரும்புக் குதிரை’ போன்ற இவரது கதைகளுக்கு நான் காதலன். பழகுவதற்கு இவர் ஒரு ஜெண்டில்மேன். ஸ்ரீராம்சூரத்குமார் என்ற தாயகத்தை அறிமுகப்படுத்திய பூஜா நாயகன்.
தி.ஜானகிராமனைப் படித்திருக்கிறேன். அவரோடு பழகிய தில்லை. நான் படித்துப் பழகிய தி.ஜானகிராமன்… பாலகுமாரன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT