Last Updated : 22 Feb, 2015 03:02 PM

 

Published : 22 Feb 2015 03:02 PM
Last Updated : 22 Feb 2015 03:02 PM

தமிழில் தடையின்றி பேசவேண்டும் - ஆஷ்னா ஸவேரியின் ஆசை

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை அடுத்து மீண்டும் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார், ஆஷ்னா ஸவேரி. மும்பையிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் இந்த அழகு மயிலை சந்தித்துப் பேசினோம்.

அது என்ன ஆஷ்னா ஸவேரி?

ஆஷ்னா ஸவேரின்னா தூய்மையான நட்புன்னு அர்த்தம். இதற்கு மேல் விவரம் வேணும்னா அப்பா, அம்மாகிட்டத்தான் கேட்கணும்.

சந்தானத்தோடு மட்டும்தான் ஜோடி சேர்வீங்களா?

அப்படியெல்லாம் இல்லை. இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்ததால் நடிக்கிறேன். மேலும் நல்ல கதை இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் ஜோடி சேர்ந்து நடிப்பேன்.

இந்தப் படத்தில் நான் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மாணவியாக நடிக்கிறேன். இதில் எனக்கு ஜாலியான கதாபாத்திரம். என் நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.

காமெடி நடிகர் சந்தானம் - ஹீரோ சந்தானம். இதில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

ஹீரோவாக நடித்தாலும் அவர் காமெடிதான் செய்வார். சண்டை காட்சியில்கூட எப்படி காமெடித்தனத்தை பிரதிபலிக்க முடியும் என்று திட்டமிடுகிறார். அவருடைய இயல்பான ஸ்டைல் காமெடி என்பதால் இந்தப் படத்திலும் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்களாமே?

சினிமாவுக்கு வருவதற்கு முன் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துக்கு முன்புகூட ஷாரூக் கானுடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தேன். ஆனால் கோபம், சந்தோஷம், காமெடி இப்படி பல விஷயங்களை சினிமாவில்தான் வெளிப்படுத்த முடியும் என்பதால் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன்.

மும்பையிலிருந்து தமிழ் சினிமா உலகுக்கு எப்படி வந்தீர்கள்?

மும்பையில் வங்கி சார்ந்த பொருளாதாரத் துறையில் பட்டப்படிப்பு முடித்தேன். என் விருப்பம் வேறு துறையில் இருந்ததால் படித்த துறைக்குள் பயணிக்க ஈடுபாடு இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை நேசிப்பதால்தான் இங்கே வந்தேன். தென்னிந்தியாவின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புக்காக மாமல்லபுரம், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் சுற்றியிருக்கிறேன். மனதை பறிக்கும் இடங்கள் அவை. அதேபோல, சமீபத்தில் திருவண்ணாமலை, திருப்பதி ஆகிய இரண்டு இடங்களுக்கும் சென்று வந்தேன். புதிய ஆற்றல் கிடைத்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. நம் பண்பாடு, ஆன்மிக பணிகள் எல்லாம் வியக்க வைக்கின்றன.

தமிழில் பிடித்த நடிகர்கள், இயக்குநர்கள் யார்?

படப்பிடிப்பில் இருந்த போது ஷங்கரின் ‘ஐ’படத்தைப் பார்த்தேன். ரொம்பவே பிடித்திருந்தது. விக்ரம் தன் கதாபாத்திரத்துக்காக இந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது பிரமிப்பாக இருந்தது. நடிப்பை எந்த அளவுக்கு அவர் விரும்பி செய்கிறார் என்பதை இதன்மூலம் யூகிக்க முடிந்தது. இதேபோல இன்னொரு படம் வந்தால் அதையும் ரசிப்பேன். மற்றபடி எனக்குப் பிடித்த இயக் குநர்களையும், நடிகர்களையும் வரிசைப்படுத்த விரும்பவில்லை.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?

இப்போது நடித்து வரும் படத்தைப் போல் வித்தியாசமான கதாபாத்திரம் அமைவதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு தமிழில்தான் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். மற்ற மொழிகளில் கவனம் செலுத்தாமல் முழுமையாக தமிழிலேயே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். அதற்காகவே தமிழை தெளிவாகப் பேச விரும்புகிறேன். நண்பர்கள் தொடங்கி கார் ஓட்டுநர் வரைக்கும் என்னைச் சுற்றி தமிழ் பேசுபவர்கள் அதிகம் இருப்பது போன்ற ஒரு சூழலை அமைத்துக் கொண்டுள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x