Published : 11 Apr 2014 09:35 AM
Last Updated : 11 Apr 2014 09:35 AM
தமிழ் சினிமாவில், 2010வரை கணிசமான வெற்றியைப் பெற்று வந்த மறுஆக்கப் படங்கள், கடந்த மூன்று வருடங்களில் குறைந்த அளவே வெற்றி கண்டுள்ளன.
தென்னிந்தியாவில் மறுஆக்கப் படங்களின் மன்னராகக் கருதப்படும் எடிட்டர் மோகன் அவர்களுடன் (அவரும், அவர் மகன் எம். ராஜாவும் 2003-ல் ஜெயம் படம் தொடங்கி 2010-ல் தில்லாலங்கடி வரை தொடர்ந்து தமிழில் ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள்) கலந்துரையாடியபோது, மறுஆக்கப் படங்களுக்குத் தேவைப்படும் சில முக்கிய விஷயங்களை பற்றிச் சொன்னார். அவருடன் நிகழ்ந்த உரையாடலின் முக்கிய அம்சங்கள் இவை:
* முதலில் அந்த ஒரிஜினல் படம் சொல்ல வந்த கருத்து நம் மொழி மக்களுக்கு ஒத்துவருமா, அப்படியே ஒத்துவந்தாலும், அதை அழுத்தமாக இங்கே சொல்ல முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
* அடுத்தது, ஒரிஜினல் படத்தில் சொல்லப்பட்ட கருத்தும், சொல்லப்பட்ட விதமும் நம் கலாச்சாரத்துக்கு உகந்ததா என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழில் பெருவெற்றி பெற்ற பல மறுஆக்கப் படங்கள் பொதுப்படையான, அனைத்து மக்களுக்கும் எளிதில் பொருந்தக்கூடிய மையக் கருத்தை அடிப்படையாக கொண்டவை. அப்படங்கள் பல்வேறு மொழி மக்களுக்கும் பொருந்தக்கூடியவை. அதனால் தான், வசூல் ராஜா MBBS, கில்லி, சிறுத்தை, ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வேற்று மொழி மறுஆக்கப் படங்கள் வேறு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிகண்டன. அதே காரணத்தினால்தான் தமிழில் வெற்றிகண்ட சிங்கம், சமுத்திரக்கனியின் நாடோடிகள், ராகவா லாரன்ஸின் காஞ்சனா போன்ற படங்கள் பல மொழிகளில் எடுக்கப்பட்டு வெற்றி கண்டன.
* ஒரிஜினல் படத்தின் வெற்றிக்கு, அப்படத்தின் புதுமையான திரைக்கதையுடன், நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் காரணமாக இருக்கலாம். எனவே, அதே மேஜிக் மீண்டும் நிகழ சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு முக்கியம். அற்புதமான திரைக்கதையை வேற்று மொழியில் இருந்து எடுத்துக்கொண்டு, மீதம் உள்ள முக்கிய விஷயங்களில் கோட்டை விடும்போது, வெற்றி விலகிவிடுகிறது.
* ’ஒரிஜினல் படம் எதனால் பார்வையாளர்களைப் பாதித்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படத்தின் வணிக வெற்றியை மட்டும் பார்க்காமல், அதன் வெற்றிக்குப் பின்னணி என்ன என்பதை உணர்ந்து, அதை மறுஆக்கத்தில் கொண்டுவர முடியுமா என்பதைத் தீர ஆய்வு செய்ய வேண்டும்.
* ஒரிஜினல் படத்தில் சொல்லப்பட்ட விதத்திலிருந்து படத்தின் மையக் கருத்தும், தாக்கமும் மாறாமல் எவ்வாறு நம் மொழிக்கு மாற்றப்பட வேண்டும் என முடிவு செய்வதற்குத் திரைத்துறையில் அனுபவமும் சிந்தனையும் வேண்டும்.
* மறுஆக்கம் என்பது காட்சிக்குக் காட்சி நகலெடுப்பது அல்ல. ஒரிஜினல் படம் ஏற்படுத்திய பாதிப்பு ஒவ்வொரு காட்சியிலும் மறுஆக்கத்தின் உருவாக்கத்தின்போதும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், மறுஆக்கத்திலும் அந்த மேஜிக் உண்டாகும். ஷங்கர்-விஜய் கூட்டணியின் நண்பன் படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
* இவை எல்லாவற்றையும் விட, ஒரிஜினல் படத்தின் இயக்குநரின் ஊடக ஆளுமை, படத்தின் கருத்தை மனத்தில் பதியச் செய்யும் திறமை, மறுஆக்கம் செய்யும் இயக்குநருக்கும் இருக்க வேண்டும். அது இவருக்கும் இருந்துவிட்டால் வெற்றி சாத்தியமாகிறது .
* தமிழில் வெற்றிகண்ட மறுஆக்கப் படங்களில் பெரும்பாலானவை மனித உணர்வுகளை அருமையாக இணைத்த திரைக்கதை கொண்ட
வெகுஜனப் படங்களே. யதார்த்த மற்றும் அழகியல் படங்கள் ஒரு சில மட்டுமே மறுஆக்கத்தில் வெற்றி கண்டுள்ளன. வெகுஜன ரசனை ஒரு மொழி மக்களுக்கும் மற்றொரு மொழி மக்களுக்கும் அதிகம் மாறாது. அதனால், ஒரு வெகுஜனப் படத்தை மறுஆக்கம் செய்ய முடிவு எடுப்பது, பெரிய சிக்கலில் தள்ளிவிடாது.
* ஆனால், ஒரு வேற்று மொழி யதார்த்த /இணை / அழகியல் படம், ரத்தமும் சதையுமான அம்மொழி மக்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. அதே போன்ற வாழ்க்கையை நம் மொழி மக்களும் வாழ்கிறார்களா என்பதை உறுதியாக கூற முடியாது. முடிந்தவரை, அத்தகைய சிறப்பான படங்களை, அசல் மொழியில் பார்த்து, ரசித்து, விட்டுவிட வேண்டும். தன் சூலழுக்கு ஏற்ப மறுஆக்கம் செய்வதில் நிபுணத்துவமோ அல்லது சிறப்பான ஊடக ஆளுமையோ கொண்ட ஒரு இயக்குனர் இல்லாத பட்சத்தில் அத்தகைய சிறந்த யதார்த்த / இணை / அழகியல் படங்களை மறுஆக்கம் செய்யும் முயற்சிகள் பலமுறை ஏமாற்றத்தில்தான் முடிந்திருக்கிறது.
* வேற்று மொழியில் வெற்றி கண்ட படத்தை மறுஆக்கம் செய்தால் மட்டும் வெற்றி கிட்டும் என்பது உண்மையல்ல. வேற்று மொழியில் தோல்வி கண்டிருந்தாலும், அதன் மையக் கருத்து நன்றாக இருக்கும் பட்சத்தில், அதன் குறைகளை நீக்கித் திறமையாக மறுஆக்கம் செய்தால் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. 1966-ல் வெளிவந்து வெற்றிகண்ட ஜெமினி கணேசனின் ‘ராமு’ ஒரு முதல் உதாரணம். இந்தியில் அதன் ஒரிஜினல் படம் தோல்வி. அதே போன்று தான் வருஷம் 16, காவலன் போன்ற தமிழில் வெற்றிகண்ட படங்கள். அவை களின் மலையாள ஒரிஜினல் படங்கள் அங்கே வசூலில் தோல்வி கண்டவையே.
மூன்று மறுஆக்கப் படங் களைத் தமிழில் எடுத்து, அவற்றில் ஒன்றில் மட்டும் வெற்றி கண்டவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்... மறுஆக்கப் படத்தில்தான் இப்போது ஆபத்து அதிகம். ஏனெனில், அனேகப் பார்வையாளர்களும், விமர்சகர்களும் ஒரிஜினல் படத்தை முழுவதும் தெரிந்துகொண்டு வந்து ஒப்பிட ஆரம்பித்துக் குறை கண்டு பிடிக்கத் தயாராகிறார்கள். ஒரு நேரடித் திரைப்படத்தைச் செய்யும்போது அந்த ஆபத்து இல்லை.
எண்ணற்ற புது இயக்குனர் களும், அனுபவம் வாய்ந்த வர்களும், புதுமையான நல்ல கதைகளோடு வாய்ப்புக்காகத் தயாராக இருக்கும் சூழ்நிலையில், வேற்று மொழிப்படம் நம் மொழியிலும் பெரிய வசூல் தாக்கத்தை ஏற்படுத்தப் பெரிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே, மறுஆக்கத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என திடமாக நம்புகிறேன்.
கோ. தனஞ்ஜெயன் (dhananjayang@gmail.com)
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT