Published : 30 Jan 2015 01:42 PM
Last Updated : 30 Jan 2015 01:42 PM

அஜித் மாறிய கதை: என்னை அறிந்தால் முன்னோட்டம்

அஜித்தின் நட்சத்திர பிம்பத்தை மனதில் வைத்து அவருக்காகவே எழுதிய கதைதான் ‘என்னை அறிந்தால்’ என்று கூறியிருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். “எனது ரசிகர்களை மனதில் வைத்து கதை எழுத வேண்டாம்.

இந்தக் கதையை நீங்கள் எப்படிக் கையாள்வீர்களோ அப்படியே திரைக்கதையும் காட்சிகளும் அமையட்டும்” என்று அஜித் கதையைக் கேட்டபிறகு இயக்குநரிடம் கூற, வழக்கமான அஜித் படமாக இல்லாமல், அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.

இந்தப் படத்தில் இரண்டு அழகான காதல்கள், குடும்ப செண்டிமெண்ட், ஆகியவற்றுடன் நிழலுலகம் சார்ந்த பொழுதுபோக்குக் கதையாக ‘என்னை அறிந்தால்’ உருவாகியிருப்பதால் இதை ‘எமோஷனல் ஆக்‌ஷன் த்ரில்லர்’ என்று கூறலாம் என்றாலும் படத்தில் வன்முறைக் காட்சிகளைக் கவனமாகக் கையாண்டிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.

“அஜித் ஏற்றிருக்கும் சத்திய தேவ் கதாபாத்திரம் 25 வயதில் தொடங்கி 40 வயது வரை பயணிப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் இளம்பருவக் கதை ப்ளாஷ்பேக் உத்தி மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் மகன் என்னவாக வேண்டும் என்ற விரும்பம் இருக்கும். அதைக் கனவு காண ஆரம்பித்துவிடுவார்கள். அஜித்தை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள் அவரது பெற்றோர். ஆனால் அஜித் வேறு என்னவாக மாறினார் என்பதுதான் கதை” என்கிறார் கௌதம் மேனன்.

அருண் விஜய், விக்டர் என்ற பாத்திரத்தில் அஜித்துடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். அவரது ஸ்டைல் படத்தில் பேசப்படுமாம். அனுஷ்கா தேன்மொழி என்ற பாத்திரத்திலும் த்ரிஷா ஹேமானிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இருவரில் ஒருவர் நடனக் கலைஞர். மற்றொருவர் மென்பொருள் பொறியாளர். விவேக்கோ ரிவால்வர் ரிச்சர்டு என்ற வேடத்தில் முதல் பாதி முழுவதும் சிரிப்பு மூட்டுவாராம். தமிழ்நாடு தவிர ஜெய்ப்பூர், சிக்கிம், சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

சிறு இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஆறு பாடல்களைத் தாமரையும், ஒரு பாடலைப் ‘போடா போடி’ பட இயக்குநர் விக்னேஷ் சிவனும் எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டு வியந்த ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா, இந்திப்பட உலகின் கதாசிரியர், இயக்குநர் ஸ்ரீதர் ஆகிய இருவரும் திரைக்கதையில் சில நகாசுகளைச் செய்ய கௌதமுக்கு உதவி இருக்கிறார்கள்.

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ‘என்னை அறிந்தால்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x