Last Updated : 09 Jan, 2015 12:34 PM

 

Published : 09 Jan 2015 12:34 PM
Last Updated : 09 Jan 2015 12:34 PM

இனி இயக்கப் போவதில்லை - பி.சி.ஸ்ரீ ராம் பேட்டி

நின்று நிதானமாக இமைகளை உயர்த்திப் பேசத் தொடங்குகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம், ‘‘ஏப்ரல் மாதம் வரைக்கும் கேமராவைத் தொடவே போவதில்லை.

முதலில் ‘ஐ’, பிப்ரவரியில் ‘ஷமிதாப்’ அடுத்து ‘ஓகே கண்மணி’ ஆகிய மூன்று படங்களும் வெளிவரட்டும். ரசிகனோடு ரசிகனாக அமர்ந்து இந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்கினால் என்ன தப்பு?’’.

இந்திய சினிமாவில் தனது தனித்த ஒளிப்பதிவின் வழியே முத்திரை பதித்தவர் - ‘தி இந்து’ தமிழுக்காகப் பிரத்யேகமாகப் பேசியதிலிருந்து…



பி.சி.ஸ்ரீ ராம் - ஷங்கர் கூட்டணியில் எப்படி வந்திருக்கிறது ‘ஐ’ ?

கதைக்கு என்ன தேவையோ அதை, இயக்குநருடைய பார்வையாக உள்வாங்கி ஒளிப்பதிவாளன் தனது பார்வையில் வெளிப்படுத்திக்காட்ட வேண்டும். பிரம்மாண்டத்துக்குப் பெயர் போனவர் ஷங்கர். பெரும் முதலீட்டுப் படங்களுக்குத் தகுதியானவர். அதை அவர் பொறுப்பெடுத்துக்கொண்டு ஈடுபடும் ஒவ்வொரு அணுவிலும் புரிந்துகொண்டவன் நான்.

‘ஐ’ வணிகப் பொழுதுபோக்குப் படமாக இருந்தாலும் கதையில் போதுமான தனித்துவம் இருக்கும். ஆங்கிலப் படங்களுக்கு இணையான படம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த அளவுகோல் முன்மாதிரி அல்ல. வணிகப் படங்கள் செய்யும்போது தொடமுடியாத உயரங்கள் என்பதை ஷங்கர் தொடும்போது அவற்றுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு பணியாற்றியிருக்கிறேன். பிரம்மாண்டத்தில் ஒரு யதார்த்தம் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த யதார்த்தம்

இந்தப் படத்திலும் இழையோடும். விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்‌ஸன் இப்படி ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருப்பதுபோல ஓர் ஒளிப்பதிவாளனாக எனது ஆகச் சிறந்த பங்களிப்பு என்னவோ அதைக் கொடுத்திருக்கிறேன்.



‘ஐ’ படத்துக்காகச் சீனாவில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் பற்றித் தொடக்கம் முதலே பேச்சாக இருந்ததே?

அதை ஒரு புத்தகமாகவே எழுதலாம். சீனர்களே இப்படியொரு படமாக்கலைப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த நாட்டுக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விமானம், அதன்பிறகு 2 நாட்கள் ரயில் பயணம், அங்கிருந்து 5 மணி நேரத்துக்கும் மேல் காரில் பயணித்தும் ‘லூசன்ஜெ’ உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கினோம்.

தட்பவெப்பநிலை மாறும், தங்கும் விடுதி இல்லை. அதையெல்லாம் மீறி கேமரா முதன்முதலாகப் பதிவுசெய்த இடங்கள் இவை. இதுமாதிரி எல்லாம்கூட இயற்கை இருக்குமா என யோசித்தேன். அபரிமிதமான இயற்கையைக் காணும்போது அது செயற்கை என்று நினைக்கத் தோன்றும். அப்படித்தான் நினைத்தேன். கதையின் 20 சதவீதப் படப்பிடிப்பை அங்கேதான் எடுத்திருக்கிறோம்.



மணிரத்னத்தோடு இணைந்து ‘ஓகே கண்மணி’ படத்தையே முடித்துவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டோம். ஆனால் அதுபற்றி இதுவரை நீங்கள் வாய்திறக்கவே இல்லையே?

மணிரத்னத்தின் ஆற்றல் அபாரமானது. இப்போதும் அதற்கு இணை இல்லை. படப்பிடிப்பில் அவர் வெளிப்படுத்தக்கூடிய ஆளுமை பிரமிப்பானது. ‘அலைபாயுதே’ மாதிரி எளிமையான, அழகான காதல் கதைதான் ‘ஓகே கண்மணி’ படமும்.

படப்பிடிப்பு முடிந்து டிஜிட்டல் வண்ணக் கலவை வேலைகள் தொடங்கியுள்ளோம். ஏப்ரல், மே மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது.



புதிய தலைமுறையினர் டிஜிட்டல் ஒளிப்பதிவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் ‘ஐ’ படத்தைப் பிலிம் சுருள் கொண்டு படமாக்கியிருக்கிறீர்களே?

‘ஷமிதாப்’, ‘ஓகே கண்மணி’ ஆகிய இரண்டு படங்களையும் டிஜிட்டல் முறையில்தான் படமாக்கியிருக்கிறேன். ‘கொடாக்’ பிலிம் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் மூடப்பட்ட நிலையில் ‘பிலிம் சுருள் கொண்டு ஐ’யைப் படமாக்கியது திரையுலகுக்கே வியப்பானதுதான். பிலிம் சுருள் தொழில் நுட்பம் 100 ஆண்டுகள் பழமையானது.

டிஜிட்டல் வந்து 10 ஆண்டுகளே ஆகின்றன. இது நம் கைக்குக் கிடைத்திருக்கும் புதிய குழந்தை. இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். மீண்டும் ‘பிலிம்’ சுருள் படமாக்கல் நிச்சயம் தன் இடத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் முந்தைய அளவுக்கு இருக்குமா என்றால் இருக்காது. மற்றபடி பிலிம், டிஜிட்டல் இரண்டையும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.

‘ஷமிதாப்’ படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷராவின் பங்களிப்பு என்ன?

படத்தில் ஆடல், பாடல் இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் கதாநாயகி என்ற பங்களிப்பே இல்லை. அமிதாப், தனுஷ், அக்‌ஷரா மூவரும் மூன்று கதாபாத்திரங்கள் மட்டும்தான். மூன்று பேரின் நடிப்புக்கும் படத்தில் வேலை இருக்கிறது. இயக்குநர் பால்கி கதாபாத்திரங்களைக் கையாள்வதில் இந்தப் படத்திலும் தனித்து வெற்றி அடைந்திருக்கிறார்.

எங்கள் நட்பு விளம்பரப் படங்களில் பணியாற்றியதன் வழியே உருவானது. பால்கியின் எழுத்து எனக்குப் பிடிக்கும். எனது வேலை அவருக்குப் பிடிக்கும். எங்கள் கூட்டணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.

தமிழ் சினிமாவில் புதியவர்களின் வரவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் திரைக்கதை புதிதாக இருந்தது. அந்தக் கதையை வேற எப்படியும் சொல்ல முடியும். சூது கவ்வும், ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’ ‘பிசாசு’படங்கள் பார்த்தேன்.

நாம எங்கேயோ போகிறோம். சில பதிவுகளை இந்த மண்ணுக்கு, மக்களுக்கு என்று மட்டும்தான் யோசிக்க முடியும். மண்ணுக்கு மண் கதைகள் உருவாகும் சூழல் மாறுகிறது. இந்தக் கதைகளை வேறு எந்தமொழி சினிமாவிலும் எடுக்க முடியாது.



பால்கி, மணிரத்னம் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களில் நீங்களும் ஒருவர். மணிரத்னம், இளையராஜா இருவரையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

இயக்குநர்களின் உள்ளிருந்து பார்க்கும் ஒரு உணர்வுதான் சினிமா. ஒரு இயக்குநருக்கு நான் இல்லை என்றால் இன்னொருவர். உதாரணத்துக்குப் பால்கி கதைக்கு நான் தேவைப்பட்டதால் இணைந்திருக்கிறோம்.

அதுபோலதான் ஷங்கரின் கதைக்கு ஏ.ஆர். ரஹ்மான் தேவைப்பட்டதால் அவர் இணைந்திருக்கிறார். எல்லோருக்கும் அப்படித்தான். மணிரத்னத்துக்கும் அப்படியாகத்தான் இருக்கும். இதில் நான் யார் மூக்கை நுழைக்க?



மீண்டும் இயக்குநர் பிசி ஸ்ரீராமை எப்போது பார்க்கலாம்?

நான் இனி இயக்கப் போவதில்லை. அந்த இடத்தைப் பற்றி யோசிக்கப் போவதுமில்லை. ஏன், என்பது எனக்கே எனக்கான தனிப்பட்ட விஷயமாக இருக்கட்டும். ப்ளீஸ் வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x