Published : 27 Jan 2015 10:20 AM
Last Updated : 27 Jan 2015 10:20 AM
முகம் தெரியாத நபர்களிடம் கடன் வேண்டுமா எனக்கேட்டு அன்புத் தொல்லை தரும் டெலிகாலர் வேலை செய்கிறார் அருந்ததி. மென் பொருள் நிறுவனத்தில் மனிதவளத் துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார் தமன். அவரிடம் எதிர்பாராத சூழ்நிலையில் அருந்ததி எடக்கு மடக்காகப் பேசப்போய், அவரது பேச்சு தமனைக் கவர்ந்துவிடுகிறது.
தொடர்ந்து பேசும் அவர் கள் பார்த்துக்கொள்ளாமல் தொலைபேசி வழியே நட்பை வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருமே அதைக் காதலாக உணர, அருந்ததியை நேரில் சந்திக்க விரும்புகிறார் தமன். அருந்ததியோ தமனைக் கலாய்க்கும் மனநிலையுடன் சந்திப்பைத் தள்ளிப்போடுகிறார்.
திடீரென்று அருந்ததி எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தான் காதலிக்கும் பெண்ணைத் தொலைபேசியில்கூடப் பிடிக்க முடியாத சூழல். காதலியைத் தேடிவரும் தமனிடம், அருந்ததி தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று சொல்கிறார். அருந்ததியைக் கொல்ல வருவது யார்? தமனால் தன் காதலியைக் காப்பாற்ற முடிந்ததா?
நாயகன் – நாயகி இடையிலான மென்மையான காதல், திட்டமிட்டு நிகழ்த்தப்படும் விபத்துகள் மூலம் பணத்துக்குக் கொலை செய்யும் கூலிப்படை, இரண்டாம் திருமணத்தால் சிக்கலாகும் குடும்பச் சூழல் ஆகிய வெவ்வேறு சரடுகளைச் சரியான விதத்தில் இணைத்துத் திரைக்கதையை அமைத்திருக்கிறார் புதிய இயக்குநர் கேபிள் சங்கர்.
காதல், குற்றம், குடும்பம் ஆகிய களங்களில் வித்தியாசம் காட்டித் திரைக்கதை அமைத்திருக்கும் அதே நேரம் காட்சியமைப்புகளிலும் கவனம் செலுத்தி அறிமுக இயக்குநராகத் தேறிவிடுகிறார்.
அமைச்சரின் கொலையில் ஆரம்பிக்கும் கதையில், கொலையாளிகள் அடுத்த கொலைக்குத் திட்டமிடும்போது அந்தப் பொறியில் கதாநாயகி எதிர்பாராமல் வந்து சிக்கிக்கொள்வது, அச்சத்துடன் புழங்கும் கதாநாயகியின் மனப் போராட்டம், காதலியின் உயிரைக் காப்பாற்றுவது காதலை விட முக்கியம் என நாயகன் உணரும் தருணம் ஆகிய அம்சங்கள் திரைக்கதையில் பார்வையாளர்களை ஒன்றவைக்கின்றன. தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் தொழிலில் இருக்கும் சங்கடங்கள் நன்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் பாதியில் காதலியை காப்பாற்ற தனது போலீஸ் நண்பருடன் இணைந்து களமிறங்கும் தமன், குழம்பிக் கொண்டிருக்காமல் சட்டென்று முடிவெடுப்பது கதையை வேகமாக நகர்த்திச் செல்கிறது. கொலைசெய்ய வருபவனைக் கண்டுபிடித்துத் துரத்தும் காட்சியில் ஹீரோயிசம் இல்லை என்பது ஆறுதல்.
அதே நேரத்தில் விறுவிறுப்பும் இல்லை என்பது ஏமாற்றம். விடுதி அறையில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு வரும்போது அதை நாயகன் எதிர்கொள்ளும் விதம் பக்குவமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
விபத்துக் காப்பீட்டுப் பணம் தொடர்பான நாயகியின் அப்பாவித்தனமான நம்பிக்கை அந்தப் பாத்திரத்துடன் பொருந்தவில்லை. பணத்துக்காக நாயகி எடுக்கும் மிகப் பெரிய ரிஸ்க் போதிய அளவு நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்படவில்லை. வழக்கமான சினிமா ‘சித்தி’யாகவே சித்தியைக் காட்டுவது திரைக்கதையைப் பலவீனப்படுத்துகிறது. அக்கா-தம்பி உறவில் இயல்பான அம்சம் இல்லை.
மென்மையான காதலன், பிறருக்கு ஆபத்து என்றால் துடிக்கும் மனிதாபிமானி என்னும் அக்மார்க் நல்ல இளைஞன் பாத்திரத்தில் தமன் பொருத்தமாக இருக்கிறார். காதலை உணர்வது, அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவது, காதலிக்காக ஓடுவது ஆகியவற்றைக் கையாண்ட விதத்தில் கவர்கிறார்.
அருந்ததி வசீகரமான புன்னகையாலும் முகபாவங்களாலும் கவர்கிறார். காதலில் விழும் தருணங்கள், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் நேரம், உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவால் சின்ன சத்தத்துக்குக்கூட நடுங்குவது என வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
சிரிப்பு மூட்ட முயற்சி செய்திருக்கும் ‘சுட்ட கதை’ பாலாஜியின் முயற்சிகள் பலிக்கவில்லை. “இந்தப் பொண்ணுங்க..” என்று தொடங்கிப் பெண்கள் பற்றிய தன் அரைவேக்காட்டுத்தனமான ‘கண்டுபிடிப்பு’களை முன்வைப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
அறிமுக இசையமைப்பாளர் பி.சி.சிவனின் இசையில் பாடல்கள் புதிதாக ஒலிக்கின்றன. பாடல்காட்சிகளை படமாக்கிய விதமும் பரவாயில்லை. ஆனால் எல்லாக் காட்சிகளிலும் வாசித்துத் தள்ளிவிட வேண்டும் என்று பின்னணி இசையை இரைச்சலாக்கிவிட்டிருக்கிறார்.
குற்றவியல் பின்னணி கொண்ட கதையை மென்மையான காதல் இழையோடச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர். காதல் காட்சிகளில் அலுப்புத் தட்டுவதைக் குறைத்திருந்தால் படத்தின் தாக்கம் கூடியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT