Published : 18 Apr 2014 12:29 PM
Last Updated : 18 Apr 2014 12:29 PM
சாப்பிளின் எனும் மகா கலைஞனின் எந்தப் படைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. என்றாலும் சாப்ளின் என்றதும் ஒவ்வொருவருக்கும் சில படங்கள் பொதுவாக நினைவுகளில் அலைமோதும். அவற்றில் மார்டன் டைம்ஸ், சிட்டிலைட்ஸ், க்ரேட் டிக்டேட்டர் ஆகிய படங்களுக்குத் தனியிடம் உண்டு.
மௌனப் படங்களின் காலம் முடிந்து, பேசும்படங்களின் யுகம் தொடங்கிய பிறகு பிடிவாதத்துடன் வெளிவந்த திரைப்படம் சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ். சினிமாவில் எத்தனையோ நவீனங்களைப் பார்த்துப் பழகிவிட்ட பார்வை யாளர்களுக்கு இன்னும் அலுக்காத நகைச்சுவைக் காவியமாக மாடர்ன் டைம்ஸ் திகழ்கிறது.
மாடர்ன் டைம்ஸ் தன் பெயருக்கு ஏற்ப, சமகாலத்தன்மை யுடையதாகவே இருக்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே மந்தை மந்தையாக ஆடுகள் செல்வது காண்பிக்கப்படும். அந்தக் காட்சி மெதுவாக மறைந்து புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து கூட்டம் கூட்டமாகத் தொழிலாளர்கள் போவது காண்பிக்கப்படும். முதலாளித்துவ உலகில் வேலை என்பது மந்தைத்தனமாக மாறுவதை விமர்சிக்கும் அக்காட்சி இன்றைய காலத்திற்கும் பொருத்தமானதே.
எந்திர யுகத்தைக் கவலையுடன் எதிர்நோக்கும் படைப்பாக மாடர்ன் டைம்ஸ் திகழ்கிறது. உலகளாவிய அளவில், நவீன மாற்றங்கள் மனிதத்தன்மையை இல்லாமலாக்குவதை சாப்ளின் எந்திரத்தில் சிக்கிக்கொள்ளும் காட்சி அழகாகச் சித்தரித்திருக்கும்.
நல்ல பண்புள்ள, ஆனால் சமூகத்தோடு முழுமையாக ஒன்ற இயலாத, சிறிய சாகசங்கள் செய்து தோல்வி அடையக்கூடிய லிட்டில் ட்ராம்ப் கதாபாத்திரம் வசனம் பேசினால் படத்தின் மர்மமும், கனவுத்தன்மையும் குலைந்துவிடும் என்று சாப்ளின் நினைத்தார். ஆங்கிலம் பேசாத இடங்களில் அவரது ரசிகர்களைக் கவர முடியாது என்றும் கருதினார்.
திரைப்படம் என்பதைத் தாண்டியும் நவீன காலம் குறித்த மிகப் பெரிய அங்கதப் படைப்பாக மாடர்ன் டைம்ஸ் காலம்கடந்து நிற்கிறது.
சார்லி சாப்ளின் படங்களில் நகைச்சுவை, சோகம், பொழுது போக்கு என அனைத்து அம்சங்களையும் கொண்ட படம் சிட்டி லைட்ஸ். இந்தப் படத்தில் நாயகன் சாப்ளினைப் பொருட்படுத்தாத, மதிக்காத நபர்களே அவருக்கு நண்பர்களாக இருப்பார்கள். இரவுக் குடியின்போது மட்டும் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டு, காலையில் துரத்திவிடும் கோடீஸ்வர நண்பர் கதாபாத்திரம் சினிமா உள்ள காலம் வரை மறக்க முடியாத கதாபாத்திரம்.
நாயகன் காதலிக்கும் பூ விற்கும் பெண்ணோ பார்வை இழந்தவள். அவளுக்குப் பார்வை தெரியும் போது, அவனை அங்கீகரிக்க இயலவில்லை. சமூகத்தோடு தொடர்ந்து இயைந்து செல்ல விரும்பினாலும் தொடர்ந்து அந்நியனாகத் துரத்தப்படும் லிட்டில் டிராம்ப் கதாபாத்திரம்தான் இதிலும்.
சாப்ளினின் சிட்டி லைட்ஸ் படத்தின் மூலக்கதை தமிழில் வெவ்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஏழை படும் பாடு தொடங்கி மூன்றாம் பிறை வரை பல படங்களைச் சொல்லமுடியும். ஏழை படும் பாடு படத்தின் நாயகியும் பூ விற்பவள்தான். மல்லிகைப் பூ ஜாதி ரோஜா, முல்லைப் பூ வேண்டுமா என்ற பாடலை யூட்யூப்பில் கேட்டுப்பார்க்கலாம். சிட்டி லைட்சின் வெளிச்சம் தெரியும்.
ஹிட்லரின் சர்வாதிகாரத்தையும், இனவாதத்தையும் நகைச்சுவையாகவும் அதே வேளையில் ஆழமாகவும் விமர்சித்த திரைப்படம் கிரேட் டிக்டேட்டர்
சார்லி சாப்ளினின் முதல் பேசும் படம் இது. கலையம்சம், பிரச்சாரம், சக்தி வாய்ந்த திரை வெளிப்பாடு, நகைச்சுவை அனைத்தும் இணைந்த இந்தப் படைப்பு, உலகையே தன் அதிகாரத்தால் உலுக்கிக்கொண்டிருந்த ஹிட்லரின் ஆளுமை உலகையே அதிரவைத்த காலத்தில் நாசிசத்தைக் கடுமையாக விமர்சித்தது. கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக் காட்சியில் சர்வாதிகாரியின் வேடத்தில் இருக்கும் முடிதிருத்தும் கலைஞனான சாப்ளின் ஆற்றும் உரை, பெரிய இலக்கியமாக இன்றளவும் உலக மக்களால் வாசிக்கப்படுகிறது. மனித குலத்தின் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை வேண்டும் உரை அது. தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் யூத இனத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் கலைஞராகவும், சர்வாதிகாரி அடினாய்ட் ஹெய்ங்கெல்லாகவும் இரண்டு வேடம் சாப்ளினுக்கு. நற்பண்பும், நேரெதிரான தீமையும் வெளிப்படும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் சாப்ளின்.
ஹிட்லருக்கும் சாப்ளினுக்கும் ஒற்றுமைகள் அதிகம். இரண்டு பேருமே 1889, ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள். இரண்டு பேரின் குழந்தைப் பருவமும் வறுமைமிக்கது. இருவருமே பெரியவர்களான பிறகு மிகப் பெரிய புகழைச் சம்பாதித்தவர்கள். ஒருவர் உலக மக்களைச் சிரிக்கவைத்தார். இன்னொருவர் வெறுக்கக் கற்றுத்தந்தார். சாப்ளினின் முதல் பேசும்படம் தி கிரேட் டிக்டேட்டர்தான் என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஹிட்லரின் கொடுங்கோன்மையை எதிர்க்க அவர் ‘பேச’ வேண்டியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT