Last Updated : 12 Dec, 2014 06:11 PM

 

Published : 12 Dec 2014 06:11 PM
Last Updated : 12 Dec 2014 06:11 PM

கிரவுட் ஃபண்டிங் குட்டிக்கரணம்!

காவிரி நீர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க முன்வந்தார் சேரனின் உதவியாளரான சரச் சூர்யா. ‘பச்சை மனிதன்’என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற படக் குழு விரும்பியது.

ஆகவே படத்தின் நுழைவுச்சீட்டையும் திரைக்கதைப் புத்தகங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரிடம் விற்றுத் திரட்டப்படும் பணத்தில் படத்தைத் தயாரிக்கப் போகிறோம் என அறிவித்தது படக்குழு. ஆனால் 13 லட்சத்துக்குமேல் பணம் வசூலாகவில்லை. இதனால் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதோடு அந்தப் படத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் கிராமத்து விவசாயியை கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைத்துக் கொண்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது என்ற கதை யமைப்புடன் ‘குறையொன்றும் இல்லை’என்னும் திரைப்படம் சுமார் 60 பேர் கிரவுட் ஃபண்டிங் செய்ததன் மூலம் உருவானது. ஆனால் போதிய நிதி கிடைக்காததால் 2011-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட படம் 2014 ஆகஸ்டில்தான் வெளியானது. படத்தை வெளியிடவும் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்ட வேண்டிய நிலையே ஏற்பட்டது. ஒருவழியாகப் படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. கிரவுட் ஃபண்டிங் முறையில் உடனடியாகத் தேவையான நிதி சேர்வதில்லை. அப்படியே கிடைத்தாலும் தெரிந்த முகங்கள் அதில் இருப்பதில்லை.

தெரிந்த முகங்கள் இல்லாவிட்டாலும் லூசியா படம் போலத் தமிழ் சினிமாவில் கிரவுட் ஃபண்டிங் சினிமா ஏன் வெற்றிபெற முடியவில்லை? இங்கே புற்றீசல்போலக் குவியும் படங்களின் எண்ணிக்கையும், பெரிய நடிகர்கள் நடிக்கும் மசாலா படங்களின் ஆதிக்கமும் காரணங்கள். இவற்றுக்கான வியாபாரமும், வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் கிடைக்கும் ஆதரவும் சின்னப் படங்களுக்குக் குதிரைக்கொம்பாக இருக்கிறது. போதாக்குறைக்குச் சின்னப் படங்களுக்குத்

தொலைக்காட்சி உரிமை இல்லாமல் போய் விட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான், டிஜிட்டல் தயாரிப்பில் சுமார் நாறு படங்கள் கோடம்பாக்கத்தில் தயாராகி வருகின்றன. அத்தனையும் சுமார் ஒரு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை மதிப்புள்ள புராஜெக்டுகள். இதில் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கும் படங்கள் சுமார் 50 மட்டுமே. மற்றவை ஒவ்வொரு நிலையில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அல்லது படத்தை முடிக்கப் பணமில்லாமல் நின்றுகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் சந்தையைக் கொண்ட இந்தி சினிமா ஆண்டுக்கு வெறும் 130 சொச்சப் படங்களையும், திரையரங்கில் படம் பார்க்கும் கலாச்சாரத்தையும், சரியான டிக்கெட் விலையும் கொண்டு திரைச் சந்தைக்கான ஒரு ஸ்திரத் தன்மையை உருவாக்கிவிட்டது. அதேபோல 2200க்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்ட உள்ள தெலுங்கு சினிமாவில் மொழிமாற்றுப் படங்களையும் சேர்த்து ஆண்டுக்கு 140 படங்களுக்குமேல் தயாராவதில்லை. ஆனால் வெறும் 950 அரங்குகளில் ஓரளவுக்கு நேரடி வெளியீட்டுக்கு உகந்ததாய் உள்ள திரையரங்குகள்

600-ஐத் தாண்டாத தமிழ்நாட்டில் இந்த டிசம்பர் இரண்டாவது வாரம்வரை 200 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் வெற்றிப் படங்கள் என்று கணக்கிட்டால் இருபதைத் தாண்டாது என்ற நிலையில், ஒரு சிறுமுதலீட்டுப் பணத்துக்கு மொத்த முதலீட்டையும் போடும் தயாரிப்பாளர்களுக்கு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையே தமிழ்சினிமாவில் நீடிக்கிறது.

தனிப்பட்ட சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் நிலையே இப்படி இருக்க ‘கிரவுட் ஃபண்டிங் ’ மூலம் பலரிடமிருந்து திரட்டப்படும் பணத்தில் உருவாகும் படங்களுக்குக் கட்டுப்பாட்டை இழந்து தயாரிப்பு செலவு அதிகரித்தால் அதைச் சமாளிக்க மீண்டும் இதேமுறையில் நிதிதிரட்ட காத்திருக்க வேண்டிய முட்டுக்கட்டை இருக்கிறது.

மேலும் லூசியா போலவே எல்லா கிரவுட் ஃபண்டிங் சினிமாக்களும் உருவாகுமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படியே உருவானாலும் அவற்றைப் பிரபலப்படுத்த தலைகீழாக நின்று குட்டிக்கரணம் அடித்தாக வேண்டும். அப்படியிருந்தும் கிரவுட் ஃபண்டிங் சினிமாக்கள் சிறகடிக்க வேறு என்னதான் காரணங்களாக இருக்க முடியும்? அடுத்தவாரமும் அலசுவோம்.

தொடர்புக்கு: sankara4@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x