Last Updated : 11 Apr, 2014 09:54 AM

 

Published : 11 Apr 2014 09:54 AM
Last Updated : 11 Apr 2014 09:54 AM

அந்தநாள் ஞாபகம்: அந்த ஒரு கேள்வி

அப்பா பொம்மராஜு வெங்கட சுப்பையாவிடம் கர்நாடக சங்கீதமும் வேறொரு குருவிடம் இந்துஸ்தானியையும் கற்றார் பானுமதி. அப்பா வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளில் உள்ள பாடல்களை ஒருமுறை கேட்டு, அப்படியே பாடும் திறமை அவருக்கு இருந்தது. மகளை சினிமா பாடகியாக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் அவரது கனவு மகளின் திருமணமாக மாறியது.

வரன் பார்த்தார்கள். முதலில் வந்தவருக்கு உடல் குறைபாடு. அடுத்ததாக வந்தவர் மூன்றாம் தாரம். பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று கலங்கினார் அப்பா. அந்த நேரத்தில் வந்துசேர்ந்தார் டைரக்டர் சி. புல்லையா. ‘வரவிக்ரயம்’ தெலுங்குப் படத்தில் பானுமதியை இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்பினார்.

‘பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கும் நேரத்தில் சினிமாவில் நடித்தால் சொந்தபந்தம் என்ன சொல்லும்? வந்துபோகிற மூன்றாந்தார வரன்கள்கூட வரமாட்டார்களே’ என்று பயந்த வெங்கடசுப்பையா மறுத்தார். புல்லையா பிடிவாதம் பிடித்தார். குடும்ப ஜோதிடரிடம் பானுமதியின் ஜாதகத்தைக் காட்டினார்கள். ‘இந்தப் பெண் கலைத்துறையில் உச்ச நிலையை அடைவாள்’ என்று கணித்துச்சொன்னார் அவர்.

பானுமதி நடித்த முதல் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. படத்தில் அவரது நடிப்பையும், ‘பலுக வேமிநா தெய்வமா…’ என்று பாடிய பாடலையும் பத்திரிகைகள் பாராட்டின. பானுமதிக்கு அடுத்தடுத்து கதாநாயகி புரமோஷனுடன் வாய்ப்பு வந்தது. ‘மாலதி மாதவம்’, ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கிருஷ்ண பிரேமா’ படங்களில் ‘கதாநாயகன் என் மகளின் கையைப் பிடிக்கக் கூடாது, அவளது தோளில் சாயக் கூடாது’ என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு நடிக்கவைத்தார் அப்பா.

அவரது பாதுகாப்பு வளையத்தை மீறிய பானுமதி, ‘கிருஷ்ண பிரேமா’ படத்தின் துணை இயக்குனர் ராமகிருஷ்ணாவைக் காதலித்தார். விவரம் வீட்டுக்குத் தெரிந்தது. “அவரையே கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். நீங்கள் மறுத்தால் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அப்பாவிடம் தைரியமாகக் கூறினார் பானுமதி.

மகள் ஒரு சினிமாக்காரரை மணப்பதில் அப்பாவுக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், மகளின் பிடிவாதத்தால் குடும்ப கெளரவத்துக்கு அவமானம் நேர்ந்துவிடுமோ என்று பயந்து, ஒப்புக்கொண்டார்.

‘நடிக்கக் கூடாது, கச்சேரிகளில் பாடக் கூடாது’ என்று திருமணம் ஆவதற்கு முன்பே பானுமதிக்குக் கட்டளை போட்டார் ராமகிருஷ்ணா. காதலின் மீதுள்ள காதலால், கலைத்துறையின் மீதுள்ள காதலைக் கழற்றிவைத்தார் பானுமதி. ‘பாட்டுன்னா எம்பொண்ணுக்கு உயிர். அவளை கச்சேரி பண்றதுக்காவது அனுமதிக்கணும்’ என்று அப்பா கேட்டுக்கொண்டதை ராமகிருஷ்ணா கேட்டுக்கொள்ளவில்லை.

திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்பை ஏற்றார் பானுமதி. நாட்களும் வாரங்களும் மாதங்களும் யார் பேச்சையும் கேட்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தின் ஒரு நாளில் பானுமதியைத் தேடி வந்தார் பிரபல இயக்குனர் பி.என்.ரெட்டி. ‘ஸ்வர்க்க சீமா’ படத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார். பக்கவாட்டில் பலமாகத் தலையாட்டிவிட்டார் ராமகிருஷ்ணா. இயக்குநரும் மாதக்கணக்கில் விரட்டிப் பார்த்து நொந்துபோய், ‘அவ பிரபல்யம் அடைஞ்சா அத தாங்கிக்க முடியாதுன்னுதானே நீ மறுக்கிறே?’ என்று கேட்ட கேள்வி ராமகிருஷ்ணாவை உறுத்தியது. இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கட்டும் என ஒப்புக்கொண்டார்.

‘ஸ்வர்க்க சீமா’ படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அடுத்தடுத்து வாய்ப்பு வந்தது. ராமகிருஷ்ணாவால் மறுக்க முடியவில்லை. பி.என். ரெட்டி மட்டும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்காவிட்டால், எம்.ஜி.ஆருடன் ‘நாடோடி மன்னன்’, ‘மதுரை வீரன்’, ‘மலைக்கள்ளன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’; சிவாஜியுடன் ‘தெனாலிராமன்’, ‘அம்பிகாபதி’, ‘கள்வனின் காதலி’, ‘அறிவாளி’, ‘ரங்கோன் ராதா’ படங்களில் நாம் பானுமதியைப் பார்த்திருக்க முடியாது.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x