Last Updated : 05 Dec, 2014 11:52 AM

 

Published : 05 Dec 2014 11:52 AM
Last Updated : 05 Dec 2014 11:52 AM

குறுக்கு விசாரணை: காவியத்தலைவன்- பாவனைகள் மட்டும் போதுமா?

சென்ற நூற்றாண்டில் திரைப்படத்தின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு முன்புவரை நாடகமே தமிழர்களின் பிரதானப் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்துவந்தது. நாடக ஆசிரியர்கள், நாடகக் குழுக்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பலரும் மேடை நாடகங்களையே வாழ்ந்துவந்தார்கள். நாடகம் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தையும் சூழலையும் பின்புலமாகக் கொண்ட படம் என்னும் கட்டியத்துடன் வெளியான காவியத்தலைவன் நாடக நினைவுகளைப் புதுப்பிக்கும் எனக் கருதப்பட்டது. இன்றுள்ள தலைமுறையினருக்கு அன்றைய நாடகச் சூழலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிவதாச சுவாமிகளின் நாடகக் குழுவின் பயிற்சிகளைக் காட்சிப்படுத்தும் தொடக்கம் இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. நாடக மேடை, நடிப்பு ஆகியவை குறித்த வசனங்களும் பாத்திரச் சித்தரிப்புகளும் படத்துக்கு வலுவான அஸ்திவாரத்தை வழங்குகின்றன. நேரம் செல்லச்செல்லப் படம் இந்த அஸ்திவாரத்தை விட்டு நகர்கிறது. நாடகம் என்னும் பின்புலம் நாடக மேடையின் பின் திரைபோல மாறிவிடுகிறது. மேடையின் உயிர்ப்போ, அதில் சங்கமமாகும் கலைகளின் கோலாகலமோ, அந்தக் கால ஒப்பனைகளின் அழகியலோ, இசைக் கோலங்களோ, மேடைக்குப் பின் இயங்கும் வாழ்வின் இயக்கங்களோ இல்லாமல் தட்டையான கதையாக மாறிவிடுகிறது.

பிரதானப் பாத்திரங்கள் அனைவரும் நாடக மேடையுடன் தொடர்புகொண்டவர்கள். நாடக மேடையில் சிறந்து விளங்கும் கனவுடன் வாழ்ந்துவருபவர்கள். நாடகம் சார்ந்த சிக்கல்களையும் சவால்களையும் கொண்டவர்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளும் அவர்களது நாடக வாழ்வையே பாதிக்கின்றன. இவ்வளவு இருந்தும் நாடகத்தைக் காணவில்லை. நாடகத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. நாடகம் இல்லை. நடிப்பின் நுட்பங்கள் பற்றிய வசனங்கள் உள்ளன. நடிப்பைக் காணவில்லை.

நாடகம் என்னும் பின்புலம் கதைக்குப் பின் திரையாகத் தொங்கு கிறது.

சிவதாச ஸ்வாமிகள் தரும் பயிற்சியும் வைக்கும் சோதனைகளும் அவரது குழுவினர் நிகழ்த்தக்கூடிய நாடகம் குறித்துப் பெரிய கற்பனைகளை உருவாக்குகின்றன. நடிப்பு பற்றியும் கலையுணர்வு பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ள வசனங்களும் அந்தக் கற்பனைக்கு உரமூட்டுகின்றன. ஆனால் குழு மேடையேறியதுமே இந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் விரல் பட்ட நீர்க்குமிழிகள்போல உடைந்துபோகின்றன. நடிப்பு பற்றி தரப்படும் விவரணைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் நடிப்பு உள்ளது. சித்தரிக்கப்படும் மேடை நாடகங்கள் பள்ளி நாடகங்களை ஒத்திருக்கின்றன. பகத்சிங் நாடகத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம் கூடக் கேட்கவில்லை. ஒப்பனைகளிலும் நடன அமைப்புகளிலும் அந்தக் கால வாசனை இல்லை. மரபு சார்ந்த நடிப்பு பணிக்கும் நவீன பாணிக்கும் இடையேயான முரணியக்கமாகக் கதை வளர்ந்திருக்கக்கூடிய சாத்தியத்தையும் இயக்குநர் வீணடிக்கிறார்.

நாடகக் கலைஞர்களின் வாழ்வு, அவர்களது போராட்டம், நாடக வாழ்வின் பரவசமும் வலியும் நிரம்பிய தருணங்கள், அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், ஒப்பனை முறைகள், பயன்படுத்திய வண்ணங்கள், நடன வகைகள், எடுத்தாண்ட பாடல்கள், கதைகள் ஆகியவற்றைப் படத்தில் எந்த இடத்திலும் உணர முடியவில்லை. மேடையில் ஹார்மோனியம்கூட இல்லை.

மேடைக்கு வெளியிலும் பல உறுத்தல்கள். ஜமீன்தார் பெண் காளியிடம் காதலை வெளிப்படுத்திய கணத்தில் காளியாக நடிக்கும் சித்தார்த் ‘பாய்ஸ்’ படப் பாணியில் எகிறிக் குதிக்கிறார். காதல் வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை. காளியின் மறுவருகை செயற்கையின் உச்சம். அவனுடைய வீழ்ச்சியும் கோமதியின் வளர்ச்சியும் நம்பகத்தன்மையுடன் உருப்பெறவில்லை. காளி திடீரென்று தேசபக்த அவதாரம் எடுப்பதும் இயல்பாக இல்லை. இரு நண்பர்களில் ஒருவன் பொறாமை, வன்மம் ஆகியவற்றின் உருவகமாக இருக்க, இன்னொருவன் மகாத்மாவாக இருக்கிறான். தான் பழகும் பெண்களின் வயிற்றில் குழந்தையைக் கொடுக்கும் தன்மையில் மட்டும் ‘மனித’னாக இருக்கிறான். சக நடிகையின் நடிப்பைக் குறைகூறும் காளி ஒரு இடத்திலாவது நன்றாக நடித்துக் காட்ட வேண்டாமா?

படத்தில் சிறப்பான அம்சங்கள் பிருத்விராஜின் நடிப்பும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஜெயமோகனின் சில வசனங்களும். பிருத்விராஜ் மேடையில் சோபிக்கவில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் கோமதி நாயகம் பிள்ளையின் உணர்வுக் குமுறல்களை வெளிப்படுத்தும் இடங்களில் பிருத்விராஜ் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ரஹ்மானின் இசையைத் தனியாகக் கேட்கும்போது ரசிக்க முடிகிறது. படத்தின் பின்புலத்தோடு அவ்வளவாக ஒட்டவில்லை. வடிவு (வேதிகா) அறிமுகமாகும் காட்சியில் வரும் பாடல் அற்புதமாக ஒலிக்கிறது. நடிப்பைப் பற்றிய விவரணைகள், காளிக்கும் குருவுக்கும் இடையில் எழும் முரண்கள், காளியைக் கோமதி அடித்து விரட்டும் இடம் ஆகியவற்றில் ஜெயமோகனின் எழுத்தாளுமையை உணர முடிகிறது.

இந்த வலிமைகள் வெறும் ஆறுதல்களாகத் தங்கிவிடும் அளவுக்குப் படத்தின் பிரதான ஓட்டம் வலுவற்றிருக்கிறது. நாடகச் சூழல் என்னும் பின்புலத்துக்கு நியாயம் சேர்க்காத திரைக்கதையில் பின்புலம் என்னும் பாவனையைக் கழித்துவிட்டால் மிஞ்சுவது என்ன? நண்பர்களிடையே எழும் சிக்கல்களும் நிறைவேறாத காதல்களும். இதைச் சொல்ல இந்தப் பின்புலமும் இத்தனை மெனக்கெடல்களும் உரிமைகோரல்களும் எதற்காக? பின்புலமும் கதையும் ஒன்றையொன்று வலுப்படுத்தவில்லை என்றால் இரண்டையும் இணைக்கும் கண்ணிதான் என்ன? இயக்குநரின் பாவனைகளா? அது போதுமா ஒரு படத்தைக் காப்பாற்ற?

நவராத்திரி என்று ஒரு படம். வெளிவந்து அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. அதில் நாடகக் காட்சி ஒன்று இடம்பெறும். அதில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் நாற்பதுகளின் நாடக மேடையின் ஒரு வகைமையைத் துல்லியமாகவும் படைப்பூக்கத்துடனும் சித்தரித்திருப்பர்கள். காவியத் தலைவன் படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காட்சி அது.

தொடர்புக்கு:aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x