Last Updated : 09 Dec, 2014 10:41 AM

 

Published : 09 Dec 2014 10:41 AM
Last Updated : 09 Dec 2014 10:41 AM

வெட்டிவேரு வாசம் 13 - மலரும் முள்ளாய் மாறும்!

மலரும் முள்ளாய் மாறும்!

வெளியூருக்கு மாற்றலாகிப் போன வங்கி நண்பனிடம் இருந்து போன்:

“என் பையன் அருணுக்கு சென்னையில போஸ்டிங். உங்க ஏரியாவுல ஏதாவது அபார்ட்மென்ட்ல சிங்கிள் பெட்ரூம் கிடைச்சா முடிச்சு குடுடா..”

தெரிந்த புரோக்கர் மூலம் சில வீடுகளைச் சென்று பார்த்து, ஒரு அபார்ட்மென்ட் பிடித்துக் கொடுத்தேன்.

இனிப்புகளும், பழங்களும் வாங்கிக்கொண்டு அருண் வீடு தேடி வந்தான். உடன் வந்திருந்தவள் அவனுடைய இளம் மனைவி. பளிச்சென்றிருந்தாள். வேற்று மதத்தைச் சேர்ந்தவள் என்று முகமெங்கும் எழுதியிருந்தது.

“லவ் மேரேஜா..?”

“லவ்தான். அப்பா, அம்மா சம்மதத்தோடதான் பண்ணிக்கிட்டோம்.. ஆனா, ஜெனிஃபர் வீட்லதான்...” என்று இழுத்தான்.

“எங்க வீட்ல ஒப்புக்கல...” என்றாள் அவள், உலர்ந்த புன்னகையுடன்.

“இவகிட்ட அவங்க பேசக் கூட மாட்டேங்கறாங்க...” என்றான் அருண், வருத்தத்துடன்.

“விடு.. பெரியவங்களுக்கு எப்பவும் இருக்கிற ஈகோ இது. தானா சரியாயிடும். அனுபவத்துல சொல்றேன். ஆறேழு மாசத்துல கோபம் குறையும். உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும். தாத்தா, பாட்டியானதும் எல்லாத்தையும் மறந்துருவாங்க. பேரக் குழந்தையைக் கொஞ்சறதுக்கு ஓடி வருவாங்க...” என்றேன்.

நம்பிக்கைக் கொடுக்கும் என் வார்த்தைகள் ஜெனிஃபருக்கு ஆசீர்வாதமாகத் தோன்றியிருக்க வேண்டும்.

“தேங்க்ஸ் அங்கிள்... உங்க வார்த்தைப் பலிக்கணும்.” என்றாள்.

அதற்கப்புறம், எப்பொழுதாவது அழைப்பு வரும்.

“அங்கிள், கேஸ் தீர்ந்துடுச்சு. கிடைக்குமா?”

“ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கணும். அப்பா, உங்களையும் அழைச்சிட்டுப் போகச் சொன்னாரு...”

பெரும்பாலான நேரங்களில் நான் வெளியூர்களில் சுற்றிக் கொண்டிருப்பேன். என் மனைவி அவர்களுக்குத் தேவையானதை சந்தோஷமாக ஏற்பாடு செய்து கொடுப்பாள்.

சில மாதங்கள் கழித்து, ஒருநாள். நண்பர்களோடு சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது, ஒரு ஹோட்டல் வாசலில் ஓடிவந்து பிடித்தான், அருண்.

“உங்க வார்த்தை பலிக்கப் போவுது அங்கிள்...” என்றான் பூரிப்போடு.

“என்னப்பா சொல்ற..?”

“இன்னிக்குதான் கன்ஃபர்ம் ஆச்சு. ஜெனிஃபர், பிரெக்னன்டா இருக்கா.”

“கங்கிராட்ஸ்...” என்று கைகுலுக்கி னேன். “ஜெனிஃபர் எங்க..?”

“ஃப்ரெண்ட்ஸோட வந்தேன் அங்கிள். அவ வீட்ல இருக்கா..”

“வந்து பார்க்கிறேன்...” என்று விடைபெற்றேன்.

இனிப்புகளை வாங்கிக் கொண்டு மறுநாளே நேரில் சென்று ஜெனிஃபரை வாழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஏதோ அவசர வேலை. வெளியூர் கிளம்பிப் போய்விட்டேன். தொடர்ந்த பயணங்கள், நெருக்கடியான வேலைகள். ஜெனிஃபரைப் போய்ப் பார்ப்பதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்.

எந்த டாக்டரிடம் போகலாம்? என்ன உணவருந்தலாம்? என்னென்ன உடற்பயிற்சிகள் நல்லது... என்றெல்லாம், என் மனைவி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்திருந்தாள். அவள் பலமுறை நினைவுபடுத்தியும் நான் நேரில் சென்று வாழ்த்துவது மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

கிட்டத்தட்ட 45 நாட்கள் கழித்து, “இப்படியே போனா, ஒருநாள் ஜெனிஃபர் குழந்தையோட உங்களைப் பார்க்க வந்துருவா...” என்றாள் மனைவி.

ஒரு முடிவுடன் அன்றிரவு வீடு திரும்பும் வழியில், இனிப்புகளோடு ஒரு பூங்கொத்தையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.

பெல் அடித்தேன். கதவைத் திறந்த அருணிடம் பூங்கொத்தைக் கொடுத்தேன்.

“இது உனக்கு. ஸ்வீட்ஸ் ஜெனிஃபருக்கு. கூப்பிடு...” என்று உரிமையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.

பூங்கொத்தை அங்கிருந்த மேஜை மீது வைத்தான்.

“அதையும் என் கிட்டயே குடுத்துருங்க அங்கிள். ஜெனிஃபர் வந்ததும், தர்றேன்..” என்று கை நீட்டினான்.

“ஏன்... வெளிய போயிருக்காளா..?”

சட்டென்று உடைந்து அழுதான். கண்களில் மிதந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. “இன்னிக்கு திடீர்னு ப்ளீடிங் அதிகமாயிடுச்சு. அவ போன் பண்ணி, நான் ஆபீஸ்லேர்ந்து புறப்பட்டு வர லேட்டாயிடுச்சு. ஆட்டோ பிடிச்சு டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனேன். ஆனா, கரு கலைஞ்சிருச்சு அங்கிள்...” என்றான், குரல் நடுங்க.

திடுக்கிட்டேன்.

“டி அண்ட் சி பண்ணிடணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. அவ இன்னும் ஹாஸ்பிடல்லதான் இருக்கா. நாளைக்கு சாயந்திரம்தான் டிஸ்சார்ஜ். மாத்துத் துணி எடுத்துட்டு போறதுக்காகதான் வந்தேன்.” என்றான்.

என் இதயத்தில் ஊசிகள் இறங்கின. மேஜை மீது வைத்திருந்த பூங்கொத்து, துடைப்பமாக எழுந்து என்னை அடித்தாற் போலிருந்தது. சில விஷயங்களை உரிய நேரத்தில் செய்யாவிட்டால், அர்த்தமற்றுப் போகும் என்று புரிந்தது.

என்னிலிருந்து விலகி, அருணுடைய மனநிலையில் என்னை வைத்துப் பார்த்தால், இன்னும் சுருக்கென்று வலித்தது. பூங்கொத்தோடு போய் வாழ்த்துவதற்கு அன்றைய நாளையா நான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்?

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, அவர்களுக்கு தேவதை போல் ஒரு பெண்குழந்தை பிறந்தது. தாத்தா, பாட்டி, பேத்தி... என்று குடும்பங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன.

ஆனால், மனதில் அன்றைய தினம் எனக்குள் கசடாய் தங்கிவிட்டது!

'கனா கண்டேன்’ திரைப்படம்.

மதன் (பிருத்விராஜ்) என்னும் வஞ்சகனிடம் கடன் வாங்கி மாட்டிக் கொண்டு, பெரும் போராட்டத்தில் சிக்கியிருப்பாள், நாயகி அர்ச்சனா (கோபிகா). 'கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது' என்ற செய்தியை அவள் தொலைக்காட்சியில் பார்க்க நேரும். பிணங்களில் ஒரு பிஞ்சுக் குழந்தையும் காட்டப்பட்டதும், கர்ப்பமாயிருக்கும் நிலையில்... பெரிதும் கலங்கிப்போவாள்.

மதனால் தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று, கணவனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் போய் கருவைக் கலைத்துவிட்டு, அவள் மருத்துவமனையில் சோர்ந்து கிடப்பாள். கையில் ஒரு குட்டி மலர் வளையத்துடன் அவளைத் தேடி வருவான், மதன்.

“பொம்பளைங்களுக்கு பிரெக்னன்சி சுகம்னு சொன்னியே அர்ச்சனா, இப்ப ஏன் சுமையா நினைச்சிட்டே?” என்று சீண்டுவது போல் அவன் கேட்பான்.

பார்ப்பவர் இதயத்தை சுருக்கென்று தைக்கும் காட்சியாக இது அமைந்தது!

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x