Published : 12 Dec 2014 06:04 PM
Last Updated : 12 Dec 2014 06:04 PM
இது இசையமைப்பாளர்கள் நடிகர்களாகும் காலம். ஆனால் ஜி.வி.பிரகாஷ் இசையைத் தன் காதலி போல் கண்களுக்குள் வைத்துக் கொண்டு சிரிக்கிறார். ‘‘மனம் அதிர ஒரு பேய்ப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் ஊர்ந்துகொண்டே இருந்தது. அந்த எல்லையை ‘டார்லிங்’ படத்தின் வழியே எட்டிப் பிடித்திருக்கிறேன். தற்போது ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் மாதிரி ஒரு நெகடிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனத்துக்குள் விழுந்துள்ளது. அப்படி ஒரு கதையைக் கொண்டுவரும் இயக்குநரைத் தெரிந்தால் உடனே சொல்லுங்கள் ஒரு ‘மீட்டிங்’ அமர்வோம்’’ என அதிரடி அழைப்போடு பேட்டியைத் தொடங்கி வைத்தார்…
உங்களோட நடிப்பில் முதல் படம் ‘பென்சில்’என்று வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ‘டார்லிங்’ திரைப்படம் முன்னால் வந்து நிற்கிறதே?
நடிப்போம் என்று முடிவெடுத்து ‘பென்சில்’பட வேலைகள் தொடங்கிய நேரம். மூன்று மாதங்கள் கிடைத்த இடைவெளியை உடற்பயிற்சிக்காக ஒதுக்கினேன். நான் போய்வரும் ஜிம்முக்கு மேல் தளத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவைச் சந்தித்தேன். நான் முகமெல்லாம் தாடி வளர்த்துக்கொண்டு நின்றதை ஆச்சர்யத்தோடு பார்த்துக் காரணம் கேட்டார். படப்பிடிப்பு தொடங்கும் வரைக்கும் இருக்கட்டுமே என்று கூறினேன். அன்று மாலை போனில் கூப்பிட்டார்.
‘பிரேம கதா சித்ரம்’தெலுங்குப் படத்தைத் தமிழில் எடுக்கப்போகிறோம். நீங்க நடிக்கிறீங்களா?!’ என்று கேட்டார். கதையுள்ள ஒரு படத்தைத்தான் கண்டிப்பாகத் தேர்வு செய்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒப்புக்கொண்டேன். மொத்தம் 33 நாட்கள் ‘டார்லிங்’படப்பிடிப்பு. கிடுகிடுவென வளர்ந்து தடதடவென ரிலீஸுக்குத் தயாராவிட்டது.
அறிமுகப் படமே பேய்ப் படம் என்றால் பரவாயில்லையா?
அப்படி எல்லாம் பார்க்கத் தேவையில்லை. ஸ்கிரீன் எபெக்ட், நடிப்புக்கான ஈடுபாடு வரும் அளவுக்குப் படம் சரியாக அமைந்தால் நிச்சயம் நமக்கு நல்ல இடம் கிடைக்கும். இதில் என் இசைக்கும் நல்ல ஸ்கோப் கிடைக்கும் என்று நம்புகிறேன். தெலுங்குப் படத்தை அப்படியே பிரதிபலிக்காமல் கிளைமாக்ஸ், பிளாஷ்பேக் காட்சிகளில் எல்லாம் நிறைய மாற்றங்களை இயக்குநர் சாம் ஆன்டன் செய்திருக்கிறார். படத்தில் நாயகி மட்டும்தான் பேய் வேடமேற்றிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். இன்னும் இரண்டு, மூன்று கதாபாத்திரங்கள் பேயாக நடித்திருக்கிறார்கள். பயம், திரில்லோடு அழகான காதலும் இழையோடும் படம். பேயுடன் டூயட்டும் இருக்கிறது.
முன்னணி இயக்குநர், ஹீரோ படங்களின் வேலைகளுக்கு இடையிலும் சிம்பனி, படங்களின் இசைக் கோப்புப் பணிகள் என்று வெளிநாட்டுப் பயணங்களை லகுவாகத் திட்டமிட்டுக்கொள்கிறீர்களே எப்படி?
‘டார்லிங்’ படத்தின் மாஸ்டரிங் வேலையை லண்டனில் உள்ள டிராக் வல்லுநரான கிறிஸ்டியன் ரைட்கூட அமர்ந்து முடித்தேன். விருதுகளை அள்ளிய ‘கிராவிடி’ படத்தில் பணிபுரிந்தவர் அவர். அவரோட அனுபவங்கள் என்னை ஈர்த்தன. அங்கு சென்று இணைத்த அந்த டிராக் படத்தின் முக்கியமான இடங்களில் பலம் சேர்க்கும். ‘சிம்பனி’ இசை நிகழ்ச்சிக்காக ஜெர்மனி போனது புதிய அனுபவம்தான்.
நமக்கும் அவர்களுக்குமான நட்பில் ஒரு கூட்டுறவு ஏற்படுத்தும் விஷயமாக இருக்கட்டுமே என்று சென்றேன். நம்ம ஊரில் கிளாசிக்கல் கலாச்சாரம் போல அங்கே ‘சிம்பனி’பெரிதாக உள்ளது. நம்மோட இசையை அவர்களும் கொண்டாடுகிறார்கள். அடுத்து விஜய், அட்லீ படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளேன். படத்தின் தீம் மியூசிக் வேலைக்காகவும், சில பாடல்கள் உருவாக்கம் தொடர்பாகவும் ரஷ்யா போகவிருக்கிறேன். விரைவில் அந்தப் பயணம் இருக்கும்.
‘பென்சில்’ எப்போது ரிலீஸ்?
வரும் மார்ச் அல்லது பிப்ரவரி இறுதியில் ரிலீஸாகும். இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் உள்ளது. பாடல் படப்பிடிப்புக்காகச் சமீபத்தில் ‘ஜப்பான் சென்று திரும்பினோம். இப்போது அங்கே இலையுதிர் காலம். மரங்களின் இலைகள் சிவப்பு நிறத்தில் பழுத்து விழத் தயாராக இருக்கும் சமயம் அவ்வளவு அழகு. அதை எல்லாம் பார்த்துப் படமாக்கியதுடன் என் பர்ஷனல் வீடியோ கேமராவிலும் ஷூட் செய்து வந்திருக்கிறேன். விரைவில் அதில் இசை கோத்து யூடியூபில் வெளியிடலாம் என்றும் இருக்கிறேன்.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் என்ன கதை?
‘சிவா மனசுல சக்தி’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ மாதிரி இது ஒரு கல்ட் படம். தொடர்ச்சியாகக் காதல் படங்கள் வந்துகொண்டிருக்கும்போது காதலைப் புதியகோணத்தில் சொல்லும் படம் அது. ‘பொறியாளன்’, ‘கயல்’ படங்களில் நடித்த ஆனந்தி நாயகியாக நடிக்கிறாங்க.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினீங்களே. ‘மதயானைக்கூட்டம்’ படத்துக்குப் பிறகு கவனம் செலுத்தவில்லையே?
அடுத்த ஆண்டு என்னோட தயாரிப்பில் புதிய படத்தின் அறிவிப்பு இருக்கும். நடிப்பு குதிரையில் ஏறிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். இது கொஞ்சம் ‘செட்’ ஆனதும் அடுத்த கட்ட வேலைகளைத் தொடரலாமே என்று நினைத்தான். ஆண்டுக்கு 5 படங்கள் இசை அமைக்க வேண்டும். 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். தயாரிப்பு என்பது மிக முக்கியமான வேலை. கதை கேட்பது தொடங்கி விவாதிப்பது, நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு என அதிக நேரம் தேவைப்படுகிறது.
‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்துக்கு இசை அமைக்கிறீர்களே ?
பாரதிராஜா அங்கிள் கதை. மனோஜ் இயக்குகிறார். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இயக்கத்தையும் இசையையும் கொடுத்த இரண்டு ராஜாக்களின் தாக்கம் இப்போதும் மிரளவே வைக்கிறது. அது ஒரு காவியம் என்றுதான் சொல்வேன். பார்ட் 2 படத்துக்காக பாரதிராஜா அங்கிள் மீண்டும் இப்போது கதை எழுதியிருக்கிறார். இளையராஜா சார் அளவுக்கு இசை மேட்ச் செய்ய முடியாது என்ற மனநிலையோடுதான் என்னோட இசைப் பணியையே தொடங்கியிருக்கிறேன். ஏதாவது வித்தியாசம் செய்ய வேண்டும் என்பது மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பார்க்கலாம்.
ரொமான்டிக் காட்சிகளுக்கு எளிதாக இசை அமைக்கிறீர்கள். ரொமான்டிக் காட்சிகளில் நடிப்பது எப்படி இருக்கிறது?
ரொமான்டிக், ஆக்ஷன் இடங்களில் எல்லாம் தப்பிவிடுகிறேன். காமெடிக் காட்சிகளில்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பொதுவாக எல்லோருக்கும் பேய்மீது பயம் இருக்கும். அந்தப் பயத்தை நம் முகத்தின் வழியே வெளிப்படுத்த வேண்டும்.அப்போதுதான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்படியான நடிப்பைக் கொண்டுவரப் பயிற்சி தேவைப்பட்டது. ‘ஆடுகளம்’ நரேனிடம் ஒரு மாதம் நடிப்பு பயிற்சி எடுத்துகொண்டேன். நல்ல அனுபவம் அது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT