Published : 12 Dec 2014 04:51 PM
Last Updated : 12 Dec 2014 04:51 PM
சென்னையின் தரமணியை இன்று ஐடி காரிடார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அதன் அழுத்தமான அடையாளம் அரசுத் திரைப்படக் கல்லூரி. அது அபூர்வமாகக் காணக் கிடைக்கிற பல கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகத்துக்குக் கொடுத்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ரகுவரன்.
அந்தத் திரைப்படக் கல்லூரிக்கு வருகை தரும் பேராசிரியராக இருந்தவர் கே. ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றவர், ஆற்றல் மிக்க திரை விமர்சகர், எழுத்தாளர், பல இந்திய மொழிகளில் அழுத்தமான படைப்புகளைத் தந்த இயக்குநர் என அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட ஆளுமை. இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் இணைக்க முயன்ற இவர் தனது இரண்டாவது தமிழ்ப் படமாக ‘ஏழாவது மனித’னை இயக்கினார். கதையின் நாயகனை அவர் தேடியபோது திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிலும் மாணவர்களில் ஒருவருக்கே அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பினார்.
அதனால் தரமணிக்கு வரும்போதெல்லாம். நடிப்பு பயிற்சி வகுப்புகள் முடிந்து போய்க்கொண்டிருந்த மாணவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். ஏழடி உயரத்தில், ஒல்லி உடலோடும், தீர்க்கமான கண்களோடும் போய்க்கொண்டிருந்த ரகுவரன் அவரது கண்களில் பட அவரை அழைத்தார் ஹரிஹரன். அவரை ஏற்கனவே அறிந்திருந்த ரகுவரன் அருகே சென்று வணக்கம் சொன்னார். இவன்தான் நமது நாயகன் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்த ஹரிஹரன் ‘ ஏழாவது மனிதன்’ படத்தில் நடிக்க உனக்கு விருப்பமா என்று கேட்டார்.
“நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு நடனமும் தெரியாது, சண்டை போடவும் வராது. கண்டிப்பாக இவை இரண்டுமே உங்கள் படத்தில் இருக்காது என்று தெரியும்” என்றார். அந்தக் கணமே ரகுவரனின் நேர்மை ஹரிஹரனுக்குப் பிடித்துப் போய்விட்டது. ரகுவரனைப் பற்றி அதே கல்லூரியில் படித்த இயக்குநர் ராஜேஷ்வரும், அருள்மொழியும் ஏற்கனவே ஹரிஹரனிடம் சொல்லியிருந்தார்கள்.
சரியான ஆளைத்தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டார் ஹரிஹரன். நடிப்பு பயிற்சியில் சேர்ந்து ஆறு மாதங்களே முடிந்திருந்த நிலையில் அறிமுகப் படத்திலேயே பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அமைந்தது ரகுவரனுக்கு. தனது கிராமத்தைச் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாக்கும் சிமெண்ட் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் கோபக்கார இளைஞன் கதாபாத்திரம்.
அந்தத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக இருந்துகொண்டே, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகப் போராடும் மனசாட்சியுள்ள இளைஞன்; ஒரு கண்ணியமான காதலன். அந்தக் கிராமத்தின் ஆற்றில் தவழ்ந்து செல்லும் பரிசலில் காதலி அமர்ந்திருக்க அவரைவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தபடி, பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி செல்லும்போது அவரது உடல்மொழி ஈரம் காயாத களிமண் தன்மையோடு பார்வையாளர்கள் மனதில் பசுமையாக ஒட்டிக்கொண்டது.
ஆனால் உலகப்பட விழாக்களில் கவுரவிக்கப்பட்ட ‘ஏழாவது மனித’னுக்கு (1982) தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது மட்டுமல்ல, ரகுவரன் எனும் உயர்ந்த கலைஞனைத் தமிழ் சினிமாவுக்குத் தனித்து அடையாளம் காட்டியது. இதன் பிறகு ‘ஆர்ட் பிலிம் ஆக்டர்’ என்ற முத்திரை ரகுவரன் மீது விழுந்தாலும், கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்தும் கதாநாயகனாக அவரது கலைப் பயணம் தொடங்கியது.
திரைப்படக் கல்லூரி சினிமா பற்றி அள்ளிக் கொடுத்த அறிவும் அங்கே கிடைத்த நண்பர்களின் அன்பும் ரகுவரனை மாறுபட்ட வசன உச்சரிப்பும், தேர்ந்த உடல்மொழியும் கொண்ட ரசனையான கலைஞனாக உருவாக்கியிருந்தன. கதாநாயகனாக அறிமுகமான அடுத்த ஆண்டே ‘சில்க் சில்க் சில்க்’ என்ற படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். இது கிட்டத்தட்ட வில்லன் வேடத்துக்கு நெருக்கமானது என்று சொல்லிவிடலாம். இதனால் ரகுவரனை வில்லனாகவும் தேர்ந்துகொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.
நாயகன், வில்லன் என்று தொடக்கத்தில் மாறி மாறிப் பயணித்த ரகுவரன் நடித்து 1986-ல் வெளியான படம் மந்திரப் புன்னகை. வில்லனாக நடித்து நாயகன் அந்தஸ்து பெற்ற சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார் ரகுவரன். இப்படி ஆச்சரியகரமான பல முரண்களைக் கொண்டது ரகுவரனின் திரைப்பயணம். அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்கள் என்றாலே பெரும்பாலும் தன் புஜபலம் காட்டும். காது கிழியும் அளவுக்குக் கத்திப் பேசி, கூலிப்படை திரளாகக் கையில் மிரட்டும் ஆயுதங்களோடு திரையைக் கிழித்துக்கொண்டு மிரட்டும்.
ஆனால் அளவாகவும் தேவைப்படும் இடங்களில் மிகையாகவும், கூர்மையான பார்வையை முன்னிறுத்தி வசன உச்சரிப்பிலும் சிரிப்பிலும் எதிர்மறைப் பாத்திரத்தின் நோக்கத்தைப் புதிய வடிவத்துக்குள் வார்த்துக் கொடுத்தார் ரகுவரன். கிழிந்து தொங்கும் கிளிஷேவாகிவிட்ட வில்லன் கதாபாத்திரங்களுக்குப் புதிய அடையாளம் கிடைத்தது. இப்படி இளம் கிளாசிக் வில்லனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகப் பொருந்திக் காட்டிய நடிகராகவும் இருந்த ரகுவரனைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இயக்குநர் ஆர்.சி சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லா ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும். ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து விலகியும் விலகாமலும் முழுநீளக் குணசித்திரக் கதாபாத்திரங்களில் அதிக ஆர்வம் காட்டியபோது அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.
வில்லன் கதாபாத்திரங்கள் வழியே எத்தகைய வெறுப்பையும் தமிழ் ரசிகர்களிடம் சம்பாதித்துக்கொள்ளாத ரகுவரன், தான் ஏற்ற குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான பரிமாணத்தை வழங்கினார். இப்படியும் ஒரு கலைஞன் என்று பாராட்டும் விதமாக இயல்பும் எளிமையுமாக அத்தகைய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தினார். அவரது கதாபாத்திரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இங்கே இடம் போதாது.
சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, முதல்வன் என்று இடைவெளியின்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ரகுவரன், தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்திப்பட உலகிலும் கால் பதித்தார். ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் உயரதிகாரியாக வருவார்.
கறாரும் கனிவும் கலந்த ஒரு சித்திரத்தை அந்தப் பாத்திரத்துக்கு வழங்கியிருப்பார் ரகுவரன். மொத்தப் படத்திலும் பத்து நிமிடங்கள்கூட இல்லாத அந்தக் கதாபாத்திரம் முதன்மைப் பாத்திரங்களை மீறி நினைவில் நிற்க ரகுவரன் எனும் கலைஞனின் ஆகிருதியே காரணம். திரைநடிப்புக்கு வெளியே கவிதை வாசிப்பு, இசையமைப்பு இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்த ரகுவரன், தலைமுறைகளைத் தாண்டியும் ஆகர்சிக்கும் அபூர்வக் கலைஞன். டிசம்பர் 11 அவரது 56 வது பிறந்த தினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT