Published : 14 Nov 2014 11:21 AM
Last Updated : 14 Nov 2014 11:21 AM
வி.காயத்ரி, திருபுவனம்.
ரஜினியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம் என்றால்… என்ன கேள்வி கேட்பீர்கள்?
கடந்த ஆண்டு கமல் சாருடைய பிறந்த நாள் விழாவில் ரஜினி சாரை சந்தித்தேன். ‘உங்கள் சஷ்டியப்தபூர்த்திக்கு அடியேன் நான் வந்திருந்தேன். என்னுடைய மணிவிழாவுக்கு தாங்கள் ஏன் வரவில்லை?’ என்ற கேள்வியைக் கண்களாலேயே கேட்டேன்.
என்னுடைய கண் குறிப்பறிந்த ரஜினி, அன்பொழுக என் கைகளைப் பற்றிக் கொண்டு… ‘மோகன்... என் மேல ஏதாச்சும் கோவமா? உங்கள் மணி விழாவன்று மும்பையில் அமிதாப் பச்சன் ஒரு விழாவுக்குக் கூப்பிட்டிருந்தார். அதான் போயிட்டேன்’ என்ற சமாதான காரணத்தைச் சொன்னார். அத்தனை கும்பலுக்கு இடையே என்னைக் கண்டுபிடித்து… அவர் ‘வராத காரணம்’ சொல்ல வேண்டிய அவசியம் அவருக்குத் துளிக்கூட இல்லை. அப்படி அவர் சொன்னதுதான் எனக்கு மிகப் பெரிய சூப்பர் ஆன்மிகமாகப்பட்டது.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் சற்றே சரியில்லை என்று கேள்விப் பட்டபோது, நான் வழக்கமாகச் செல்லும் திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலில் ‘ரஜினி சார் முன்போல் உடல்நலத்தோடு சூப்பர் ஸ்டாராக இருக்க…’ வழக்கம்போல் எனது வேண்டுதல் வெண்பாவில்… கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் பார்த்தி என் தோளைத் தட்டி ‘சார்... கூப்பிடுறார்’என்றான். ‘யாரது..?’என்று கண்களைத் திறந்து பார்த்தபோது, அங்கு நான் ஆரோக்கியமான ரஜினியைப் பார்த்தேன்.
என் கையைப் பற்றி தரதரவென்று சந்நிதிக்குப் பின்புறம் இழுத்துச் சென்ற அவர் ‘செளக்கியமா… இருக்கீங்களா’ என்று என் உடல்நலம் விசாரித்தார். அந்த இடத்தில் கும்பல் கூட ஆரம்பித்ததால் என்னிடமிருந்து விடைபெற்று ‘சூப்பர் ஸ்டார்’ தனது ஸ்டைல் வேகத்தில் நடந்துச் சென்று காரில் ஏறிக்கொண்டார். ஸ்ரீ ராகவேந்திரர் பிராத்தனைக்கு கைமேல் பலன் கிட்டியது!
ரஜினிக்கான வேண்டுதல் வெண்பா:
‘புஜம்நீளப் பாம்பில் படுத்துறங்கும் மாலே
நிஜம்நீ நினைத்தால் நடக்கும் - ரஜினிக்(கு)
உடல்நலம் சேர்ப்பாய் படவுலகைக் காப்பாய்
கடல்நீல வண்ணா கனிந்து’
எஸ்.ரகுநாதன், சென்னை-44.
நீங்கள் பழுத்த ஆத்திகவாதி. உங்கள் நண்பர் கமல்ஹாசனோ நாத்திகவாதி. இதையும் மீறி உங்கள் நட்பு இறுக்கத்துக்குரிய ரகசியத்தை சொல்லுங்களேன்?
‘Opposite Poles Attract Eeach other’. மேலும் எங்கள் இருவரையும் இணைப்பது நகைச்சுவை ‘Naughtyகம்’!
மா.லதா, திருச்சி-20.
காந்திஜிக்கும் பிரதமர் மோடிஜிக்கும் என்ன ஒற்றுமை?
‘சத்யமேவ ஜெயதே’- காந்திஜி
‘சுத்தமேவ ஜெயதே’- மோடிஜி.
‘வாய்மையே வெல்லும்’ - காந்திஜி,
‘தூய்மையே இல்லம்’- மோடிஜி.
எம்.நாகராஜன், பொள்ளாச்சி.
சீக்ரெட், சிகரெட் உங்கள் பாணியில் விளக்குங்களேன்?
சீக்ரெட்டாகப் புடிச்சாலும் பப்ளிக்காக புடிச்சாலும்… இந்தக் கேள்விக்கு Answer… Cancerதான்!
கம்னு இருந்தா… சீக்ரெட். தம்முனு இருந்தா… சிகரெட்!
வி.முரளிதரன், காட்பாடி.
‘சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துட்டு’ன்னு யாரும் டாக்டரிடம் வருவது இல்லையே… ஏன்?
மைசூர் பாகு சாப்பிட யாரும் மைசூர் போறதில்லையே, ஏன்?
மு.கோமதி, திருநெல்வேலி.
வெண்ணெய், நெய், அப்பம், அதிரசம் என்று தின்னும் கோகுலக் கண்ணனுக்கு ‘ஷுகர்’ நோய் வராதா?
சுகர் முனிவர் எழுதிய ‘பாகவதப் பிள்ளைக்கு’ அந்த ‘ஷுகர்’ நோய் எப்படி வரும்?
வெண்ணெய் சாப்பிட்டே வெள்ளையாகாதவனுக்கு… ஷுகர் சாப்பிட்டா டயாப்டிக் வரப் போகிறது?!
நீரில் (பாற்கடலில்) படுத்திருப் பவனுக்கு நீரிழிவு வருமா?!
ஜி.பாலன், திருத்தணி.
தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்பது என்னங்க சார்?
டெண்டூல்கர் இருக்கும்போது டெயில்-எண்டர் ஹர்பஜன் ஓபனிங் பேட்டிங் செய்யலாமா? பத்து ‘தலை’ ராவணன் சபையில் ராமதூதன் ஆஞ்சநேயன் பவ்யமாக வாலை சுருட்டிக் கொண்டு இருந்தார் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்!
ஏ,வசந்தி, கோலார் தங்கவயல்.
‘கிரேசி’ வந்த காரணம் தெரியும். ‘மோகன்’ என்ற பெயரை உங்களுக்கு ஏன் வைத்தார்கள்?
எனது அப்பா வைத்த பெயர் காரணத்தை, யப்பா… நீங்களாவது கேட்டீர்களே. ரொம்ப நன்றி வசந்தி!
தன்னுடைய மகன் ‘மோகன் குமாரமங்கலம்’ போல பெரிய சட்ட மேதையாக வர வேண்டும் என்கிற ஆசையில், என் தந்தை எனக்கு வைத்த பெயர்தான் மோகன். சட்ட ஆர்வம் மிக்க என் தந்தையார் எனக்குப் பிறகு பிறந்த பெண்ணுக்கு லீ’LAW’ என்றும், அதற்குப் பிறகு பிறந்த என் தம்பிக்கு பா’LAW’ஜி என்றும் பெயர் வைத்தார்.
‘லா லா’என்று அலைந்த அவருடைய புதல்வர்கள் நாங்கள் இருவரும், நாடகம் போட ‘லோலோ’ என்று ஊர் ஊராக அலைகிறோம். அவர் ஆசைப்படி பெண்ணுக்கு நல்ல சன் -இன் -LAW கிடைத்ததில் மனசைத் தேத்திக்கொண்டார்.
எம்.ரவி, புனே.
உங்களை வியக்க வைத்த சம்பவம்?
என்னை வியக்க வைத்த சம்பவம்… காளிதாசனின் ‘குமார சம்பவம்’!
மன்மதனை எரிக்க பரமசிவன் ரெடியாகிறார். அப்போ தேவர்கள் எல்லாம் ‘சாமீ… வேணாம். மன்மதன் நம்ம ஆளு’ன்னு கூவிக்கிட்டு ஓடியாறாங்க. இவங்க போடற சத்தம் (ஒலி) சிவன் காதில் விழறதுக்குள்ள, பரமசிவனின் நெற்றிக் கண் நெருப்பால (ஒளி) ரதிபுருஷன் அதோகதி! அதாவது Light Travels Faster than Soundனு அன்னிக்கே காளிதாசன் சூசகமா சொல்லியிருக்கார்னு தோணுது.
அடுத்ததா, நேஷனல் ஜியா கிரபிக் லெவல்ல காளிதாசன் இமய மலையை வர்ணித்தது இன்னொரு வியப்பு. ‘பார்வதி பரிணயம்’ அல்லது ‘பரமசிவன் கல்யாணம்’ என்கிற தலைப்புக்கள் எல்லாம் இருக்க, முருகருக்கு எந்த ரோலும் இல்லாத இந்தக் காவியத்துக்கு ‘குமார சம்பவம்’னு பேர் வெச்சது காளிதாசனுடைய ‘Lateral Thinking’ஐக் காட்டுது!
எம்.லட்சுமி, சென்னை-91.
எல்லாப் பத்திரிகைகளிலும் கேள்வி – பதில் வருகிறது. நீங்கள் ரசித்த கேள்வி - பதில் ஒன்றைச் சொல்லுங்களேன்..?
மின் - அம்பலத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் (கேள்வி -) பதிலில் ரசித்தது இது:
கேள்வி: ‘1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர், பன்மையில் சொல்லாமல் அவற்றை ‘குறள்’என்று சொன்னது, ஏன்?’
சுஜாதாபதில்: ‘கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய வள்ளுவருக்கு ‘கள்’ எப்படி பிடிக்கும்?’
- இன்னும் கேட்கலாம்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT