Last Updated : 05 Jul, 2019 11:57 AM

 

Published : 05 Jul 2019 11:57 AM
Last Updated : 05 Jul 2019 11:57 AM

ஐஸ்லாந்து பட விழா: மரம் அல்ல மனமே!

எங்கெங்குக் காணினும் இயற்கை அழகு, ஆண்-பெண் சமத்துவம் மட்டுமின்றி மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் நேசக் கரம் நீட்டும் அன்பான மக்கள்… இப்படி ஜஸ்லாந்து என்றாலே மகிழ்ச்சி. இதுவே ஐஸ்லாந்து குறித்த உலகின் பார்வை. இதற்கு அப்பாற்பட்டு ஓர் ஐஸ்லாந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது, ’அண்டர் தி ட்ரீ’ (Under the Tree).

இளம் தம்பதியினர் இடையே மனஸ்தாபம் ஏற்படக் கணவன் அட்லியை வீட்டைவிட்டுத் துரத்துகிறாள் மனைவி ஆக்னஸ். தன் பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிடுகிறான் அட்லி. அங்குச் சென்றுபார்த்தால், பக்கத்து வீட்டுக்காரருடன் எந்நேரமும் சண்டைசச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் தாய். பிரச்சினைக்குக் காரணம், ஒரு மரம்.

அட்லியின் தாய் வளர்க்கும் மரத்தின் நிழல் பக்கத்துவீட்டின் முன்புறத்தில் விழுவதால் அந்த மரத்தின் கிளைகளை வெட்டிவிடும்படி பக்கத்துவீட்டுக்காரர் சொல்கிறார். அட்லியின் பெற்றோர் இதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். வாக்குவாதமாகத் தொடங்குவது நாளடைவில் ஒருவர் வீட்டின் செல்லப் பிராணியை மற்றொருவர் கொல்லும் அளவுக்கு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்குக் கைமீறிப் போகிறது.

இதற்கிடையில் ஆக்னஸுடன் சமாதானமாக அட்லி முயன்று முடியாமல்போகிறது. அதன்பின் அவளைப் பின்தொடர்ந்து தொல்லைகள் தர ஆரம்பிக்கிறான் அட்லி.

அக்கம்பக்கத்தார் இடையிலான பூசலும் கணவன் மனைவிக்கு இடையிலான விரிசலும் எந்த எல்லைவரை போக்கும் என்பதைக் காட்சிக்குக் காட்சி உணரலாம். பிரச்சினை மரத்தில் இல்லை மனத்தில்தான் உள்ளது என்பதை திகிலூட்டும் விதத்தில் நகைச்சுவை தூவிப் பேசுகிறது படம்.

‘அண்டர் தி ட்ரீ’ திரைப்படத்துடன், ‘ஹார்ட்ஸ்டோன்’ (Heartstone),

 ‘வர்ஜின் மவுண்டன்’ (Virgin Mountain), ‘விண்டர் பிரதர்ஸ்’ (Winter Brothers), ‘தி ஸ்வான்’ (The Swan) ஆகிய ஐஸ்லாந்து நாட்டின் சிறந்த திரைப்படங்களைக் காட்டவிருக்கிறது ‘ஐஸ்லாந்து பட விழா’.

சென்னை சர்வதேப் படவிழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம் புது டெல்லியில் உள்ள ஐஸ்லாந்து தூதரகத்துடன், ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐஸ்லாந்து திரை மையத்துடன் இணைந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ்-ல் ஜூலை 8-10வரை ‘ஐஸ்லாந்து பட விழா’வை நடத்தவிருக்கிறது.ஐஸ்லாந்து பட விழா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x