Published : 12 Jul 2019 11:15 AM
Last Updated : 12 Jul 2019 11:15 AM
கமல்ஹாசனின் தயாரிப்பு, அவருடைய உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வாவின் இயக்கம், கமலின் மகள் அக்ஷரா ஹாசன் – நாசரின் மகன் அபி ஹாசன் ஜோடி என ‘கடாரம் கொண்டான்’ படத்துக்குச் சுவாரசியங்கள் கூடியிருக்கின்றன.
ஆனால், எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அம்சம் விக்ரமின் பங்கேற்பு. முதல்முறையாகத் தாடியில் கொஞ்சம் வெள்ளை தெரிய, முரட்டுத்தனமான ஆக்ஷன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் விக்ரம். அவரது கதாபாத்திரம் என்ன என்பது உட்பட, நமது கேள்விகள் அனைத்துக்கும் மனம் திறந்து உரையாடினார் விக்ரம்..
‘கடாரம் கொண்டான்’ டிரைலர் வெளியீட்டில் ‘விக்ரம்... சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டதே’ என்று கமல், உங்கள் மீது அக்கறையுடன் ஆதங்கப்பட்டார். இதற்குமுன் உங்கள் நடிப்பைப் பாராட்டியிருக்கிறாரா? அவரது இயக்கத்திலோ தயாரிப்பிலோ இதற்கு முன் நடிக்க அழைத்திருக்கிறாரா?
‘ஜெமினி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது, ‘மீரா’ படத்தில் எனது சில ‘லுக்’குகளைப் பார்த்துவிட்டு நான் நம்பிக்கைக்குரிய நடிகன் என்பதைத் தெரிந்துகொண்டதாகப் பாராட்டியிருக்கிறார்.
அதை தேசிய விருதுக்குச் சமமாக நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு ‘பொன்னியின் செல்வ’னைத் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கும் திட்டத்தில் கமல் இருந்தார். என்னை அழைத்து ‘இதில் நீங்கள் விரும்பும் எந்தக் கதாபாத்திரத்தையும் தேர்வுசெய்துகொண்டு நடியுங்கள்’ என்றார்.
பிறகு, ‘குருதிப்புனல்’ படத்துக்கான டப்பிங் நடந்துகொண்டிருந்த நேரத்தில் என்னை அழைத்தார். அர்ஜுனுக்கு வாய்ஸ் கொடுக்க அழைக்கிறாரோ என்று நினைத்துப்போனேன். ஆனால், ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரத்துக்குக் குரல்கொடுக்க அழைத்திருந்தார். எதற்கு என்றால், குரலை மாற்றிப் பேச வேண்டும்.
ஒரு சின்ன டப்பிங் கூடத்தில் கமலின் இயக்கத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்குக் குரல்கொடுத்தேன். அந்தத் தருணம் மறக்கவே முடியாது. நடிகர் கமலை எனக்கு எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு இயக்குநர் கமலையும் பிடிக்கும். அவரது இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிடவேண்டும் என்பது அப்போதும் இப்போதும் எனது விருப்பப் பட்டியலில் இருக்கிறது.
அப்போது கைவிட்டுப்போனாலும் இப்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வ’னில் நடிக்கிறீர்கள் இல்லையா?
ஆமாம்! அதில் ஆதித்த கரிகாலனாக நடிக்க இருக்கிறேன். ‘கடாரம் கொண்டா’னில்கூட பொன்னியின் செல்வனுடைய சிறு நிழல் இருக்கிறது என்று சொல்லலாம். ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் கடல்கடந்து போய் பெற்ற போர் வெற்றிக்காகத் தரப்பட்ட பெயர்தான் ‘கடாரம் கொண்டான்’. அதே மலேசியாவில் நடக்கும் கதை. அங்கே நடக்கும் பிரச்சினையில் கதாநாயகன் வெற்றிபெற்றானா இல்லையா என்பதுதான் கதை. ஸ்டைலும் ஆக்ஷனும் மட்டுமல்ல; எனது கதாபாத்திரத்துக்கான சவாலும் புதிதாக இருந்ததால்தான் ஏற்றுக்கொண்டேன்.
கமல், இயக்குநர் உட்பட இந்தப் படம் ‘ஆங்கிலப் படம்போல் இருக்கும்’ என்று சொல்லிவருகிறார்கள்; எந்தவிதத்தில் என்று கூறமுடியுமா?
திரைக்கதை செல்லும் விதம், கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் விதம் என்பேன். இத்தனை பாட்டு, இத்தனை ஃபைட்டு என்று இல்லாமல் கதைக் களத்தின் பிரம்மாண்டமும் கதாபாத்திரங்களின் வளர்ச்சியும் ஆச்சரியப்படுத்தும். நான் ஏற்றிருக்கும் கே.கே. கதாபாத்திரத்துக்கான தோற்றமே ‘ஐகானிக்’ ஆக இருக்கும். சவாலை அது எதிர்கொள்ளும்விதம் ஸ்டைலாகவும் வேகம் நிறைந்ததாகவும் இருக்கும்.
முக்கியமாக, சேஸிங் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளைச் சொல்லலாம். பிரான்ஸிலிருந்து ஜில்ஸ் என்ற சண்டை இயக்குநர் வந்து ஆக்ஷன் காட்சிகளை ரியலிஸ்டிக்காக டிசைன் செய்தார். நமது பாணி சண்டைக்காட்சிக்கான சுவாரசியங்களும் வேண்டும் என்று கேட்டதால், அந்த அம்சங்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். மலேசியாவில் மிக பிஸியான இடங் களில் அனுமதி வாங்கி, பக்காவான திட்டமிடலுடன் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். சுடச் சுட பிரியாணி சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
‘துருவ நட்சத்திரம்’ பற்றிப் பேச்சாக இருக்கிறது. அந்தப் படத்துக்கு என்ன ஆயிற்று?
இன்னும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு மட்டும் மிச்சமிருக்கிறது.
உங்களது மகன் துருவ் நடித்துவரும் ‘ஆதித்ய வர்மா’ எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தீர்களா?
‘ஆதித்ய வர்மா’வின் டீஸர் 12 மில்லியனைத் தாண்டிவிட்டது. இதை நானே எதிர்பார்க்கவில்லை. பிலிம் மேக்கிங் படிப்பதற்காக துருவ் லண்டன் சென்றான். அந்தப் படிப்பை முடித்துவிட்டு வந்து, படம் இயக்குவான் என்றுதான் எதிர்பார்த்தேன்.
ஆனால் என்ன நினைத்தானோ தெரியவில்லை. ‘நான் நடிகனாகப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டான். அதன்பிறகு ‘ஆதித்ய வர்மா’ படத்தின் செட்டில் பார்த்தபோதுதான் அவனுக்குள் ஒரு ‘நேச்சுரல் ஆக்டர்’ இருக்கிறார் என்பதையே தெரிந்துகொண்டேன். அவன் அழுது நடிக்கிற சில காட்சிகளின் ‘மேக்கிங் ஆஃப் த மூவி’வீடியோ பார்த்து மிரண்டுவிட்டேன்.
காட்சி முடிந்தும் அழுதுகொண்டே இருந்தான். காட்சியின் மூடிலிருந்து அவனை வெளியே கொண்டுவருவது இயக்குநருக்குப் பெரிய சிரமமாக இருந்திருக்கிறது. நடிப்பைப் பற்றி அவனிடம் இருக்கும் அளவுகோல் வியப்பைத் தருகிறது. இது அவன் படித்த சினிமா படிப்பால் வந்ததா; இல்லை என் மூலமாகக் கொஞ்சம் வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் டப்பிங் வழியே சினிமாவுக்கு வந்தவன். ‘கடாரம் கொண்டான்’ டப்பிங் பணியின்போது பதிவுக்கூடத்துக்கு என்னைப் பார்க்க வந்தான். நான் பேசியிருந்த சில காட்சிகளைப் பார்த்துத் திருத்தங்கள் சொன்னான். அவை ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தன. அவனைப் பற்றி நான் பேசுகிறேனோ இல்லையோ நீங்களும் ரசிகர்களும் பேசப்போகிறீர்கள்.
உங்களது ரசிகர்கள் பற்றி எந்த சர்ச்சையும் வருவதில்லையே எப்படி?
எனது கதாபாத்திரங்களை ரசிப்பதிலேயே அவர்கள் அதிகம் லயித்துவிடுகிறார்கள் என்று நினைகிறேன். அது எப்படி என்றே தெரியவில்லை, நான் எதுவும் கூறாமலேயே தங்களால் முடிந்த உதவிகளைத் தேவைப்படுகிறவர்களுக்குச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அப்படிச் செய்யும் உதவிகள் எதற்கும் சிறிய அளவில்கூட விளம்பரம் தேடிக்கொள்வதில்லை. இந்த அமைதியான குணம்தான் அவர்களிடம் எனக்குப் பிடித்தது. நாம் பேசுவதைவிட, நமது செயல்கள் பேச வேண்டும் என்று நினைப்பதுதான் எனது குணமும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT