Published : 12 Jul 2019 11:24 AM
Last Updated : 12 Jul 2019 11:24 AM
விபத்துக்குள்ளாகி கோமாவில் ஆழ்ந்துபோகும் அஞ்சலக ஊழியர் ஒருவர் நீண்ட காலம் கழித்துக் கண் விழிக்கிறார். தன்னிடம் தங்கிவிட்ட எட்டுக் கடிதங்களை உரியவர்களின் ஒப்படைக்க வேண்டு மென தவிக்கிறார்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் கடந்துபோனாலும் அந்தக் கடிதங்கள் பொத்தி வைத்திருக்கும் கலைடாஸ்கோப் கதைகள், அத்தியாயம் தோறும் தனி அனுபவங்களாக ஜாலம் காட்டுகின்றன. தலா இருபது சொச்ச நிமிடங்களில் விரியும் பத்து அத்தியாயங்கள் அடங்கிய ‘போஸ்ட்மேன்’ வலைத்தொடரை ‘ஜீ5’ வெளியிட்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறிபிடித்த ரசிகனாகவும் தனது போஸ்ட்மேன் பணியை அதே பாணியில் அனுபவித்து செய்பவ ராகவும் வருகிறார் ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ். ரஜினியின் வசனங்கள், ஸ்டைலுடன் தனது அன்றாட தினத்தைப் போக்கும் இவருக்கு, ‘பாட்ஷா’ படம் வெளியாகும் தினம் சோதனையாக அமைந்துவிடுகிறது.
கடிதங்கள் அடங்கிய பையுடன் பணிக்குக் கிளம்பும் முனீஸ்காந்தை ‘பொட்டி வந்திருச்சு’ என்ற சக ரசிகர்களின் உற்சாகக் குரல் இழுக்கிறது. தன்னை மறந்து குத்தாட்டத்துடன் தியேட்டருக்குள் நுழைபவர், ஓர் அடிமட்ட ரசிகனின் ஆர்வத்துடன் அன்றைய தினத்தின் நான்கு காட்சிகளையும் தொடர்ந்து பார்க்கிறார். இரவு இரண்டாம் ஆட்டம் முடிந்து வீடு திரும்பும்போது விபத்துக்கு ஆளாக, தலையில் அடிபட்டு கோமாவில் ஆழ்கிறார்.
நினைவு திரும்பும்போது 23 வருடங்கள் கடந்திருக்கின்றன. தான் அஞ்சலக ஊழியர் என்பதையும் கடைசி நாளில் கடமை மறந்ததையும் நினைவுகூர்ந்து வருந்து கிறார். தன்னிடம் தங்கிப்போன எட்டுக் கடிதங்களையும் உரியவர்களிடம் சேர்க்க உத்வேகம் கொள்கிறார்.
மகள் ரஜினியும் அதில் ஆர்வம் கொள்ள, இருவரும் முகவரி களை ஒவ்வொன்றாகத் தேடி கடிதங்களில் பொதிந்திருக்கும் புதுப்புதுக் கதைகளைக் கண்டடைகிறார்கள். அதன் வழியே தங்கள் சொந்த வாழ்வின் விடைதெரியாத கேள்வி ஒன்றுக்கும் தீர்வு காண்கிறார்கள்.
ரஜினி ரசிகன் ராஜாவாக அலப்பறைகள் கூட்டுவதாகட்டும் தலைவரின் அரசியல் பிரவேச அறிவிப்பைத் தொலைக்காட்சியில் கேட்டு கோமாவில் இருந்து மீள்வதாகட்டும், ‘லெட்டர்ங்கிறது தனி ஃபீல்ம்மா’ என்று மகளிடம் கடிதங்களின் பெருமையை விதந்தோதுவதாகட்டும்.. ஒத்துழைக்காத உடல்வாகைச் சமாளித்துக்கொண்டு முனீஸ்காந்த் மின்னுகிறார்.
மகளாகத் தோன்றும் நடிகர் அருண்பாண்டியனின் வாரிசான கீர்த்தி பாண்டியனுக்கு, மேடை நாடக அனுபவத்தை வெளிக்காட்ட ‘போஸ்ட்மேன்’ தனி மேடை தந்திருக்கிறது. கடிதங்களின் கதைகளை அறிய முற்படுவது இங்கிதக் குறைபாடு என்றுணர்ந்தும் ஆர்வம் மேலிட அதை நோக்கி அடியெடுப்பதும் உளறிக்கொட்டி அடிக்கடி மயக்கம் போடும் அப்பாவைச் சமாளிப்பதும் ஒரே மூச்சில் வசனங்களைக் கொட்டுவதுமாக கீர்த்தி ஈர்க்கிறார்.
அப்பாவும் மகளுமாய் முகவரிகளைத் துழாவிச் செல்லும் ஒவ்வொரு கடிதமும் தனி ரகமாய் அமைவதுடன் அவற்றுக்கு உரிய உண்மையை உடைத்துச் செல்கின்றன. காதலியின் கடைசி வரிகள், தற்கொலைக்கு முன்பான அறிவிப்பு, ஒரு கொலையின் ரகசியம், பாகிஸ்தானிலிருந்து நீளும் நட்பு என ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைக்கான உள்ளடக்கத்துடன் செல்கின்றன. ஆனால், அவற்றில் பலதும் எதிர்பார்ப்புக்குரிய பெரும் திருப்பங்களின்றி, எளிதில் ஊகிக்கவைத்து ஏமாற்றுகின்றன. முதலும் கடைசியுமான இரு அத்தியாயங்களின் அழுத்தத்தை மற்றதுக்கும் கொடுத்திருக்கலாம்.
எல்லாக் கடிதங்களும் எதிர்பார்ப்பைக் கூட்டத்தான் வேண்டுமா என்று தர்க்கரீதியாய் யோசித்தவர்கள், ஒரு கடிதத்தை ‘காப்பீட்டு நிறுவனத்தின் நினைவூட்டலாக’ எளிமையாய் முடித்திருக்கிறார்கள். ஆனால், அந்த அத்தியாயத்தை நகைச்சுவையாகக் கொண்டுசெல்ல முயன்று சொதப்பியிருக்கிறார்கள். வேறு சில அத்தியாயங்களில் கதை முடிந்த பிறகும் ‘சுபம்’ போடும் உந்துதலுக்காக இழுவையாக்கி வைத்திருக்கிறார்கள்.
அத்தியாயங்களுக்கு சூப்பர்ஸ்டாரின் பிரபல முத்திரை வசனங்களைத் தலைப் பாக சூட்டிய ரசனையை ஒட்டுமொத்தக் காட்சிகளிலும் காட்டியிருந்தால் மேலும் சிறப்பு சேர்ந்திருக்கும். ஒரு வலைத் தொடருக்கு இவை போதும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. காதல் காட்சிகளில் அசத்தும் பின்னணி இசை, சில இடங்களில் வசனங்களை விழுங்கும் இரைச்சலாகிறது. அத்தியாயங்கள் தோறும் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்புமாக மெனக்கிட்டிருக்கிறார்கள்.
ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப்போன காகிதக் கடிதங்களின் பின்னணியில் கதைகளைச் சொன்னதற்காகவே இயக்குநர் பிரசாந்த் குணசேகரன் உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டலாம்.
வலைத்தொடரின் முன்னோட்டத்தைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT