Published : 12 Jul 2019 11:47 AM
Last Updated : 12 Jul 2019 11:47 AM
காலமெனும் நதியில் விழும் எல்லாக் கனிகளும் கரையோரத்தில் ஒதுங்கி மரங்களாவதில்லை. சில கனிகள் அப்படி எஞ்சி, கரையொதுங்கி வளர்ந்து மரங்களாக நிலைத்துவிடுகின்றன. இதைப் போலவே நூற்றாண்டு கடந்த தென்னிந்தியத் திரைவானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், சிலர் மட்டும் காலம் கடந்தும் ரசிகர்கள் மனத்தில் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய ஒப்பனை மாற்றங்கள் எவையுமின்றி, வெகு சில நடிகர்களால் மட்டுமே ஏற்ற கதாபாத்திரத்தை நடிப்பில் முழுமையாக வேறுபடுத்திக் காட்ட முடிந்திருக்கிறது. உதராணமாக : மார்கன் ஃப்ரீமேன், அமிதாப் பச்சன், சாவித்திரி போல. அதே வரிசையில் ஒருவர், ‘இரண்டாவது டேக் என்பதே தனக்கு எப்போதும் இருந்ததில்லை’ என கர்வமின்றிச் சொல்லி, தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒளிர்ந்து, மறைந்ததுவிட்டாலும் ரசிகர்கள் மனங்களில் மறையாத ஒரு மகாநடிகராக நிலைபெற்றுவிட்ட நூற்றாண்டு நாயகர் எஸ்.வி.ரங்காராவ்.
நதிமூலம்
இந்தத் துருவ நட்சத்திரம், கிழக்கு கோதாவரி மாவட்டம் நுஜ்வித் என்னும் ஊரில், சாமர்ல கோட்டேஸ்வரராவ் - லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாக அஸ்வினி நட்சத்திரத்தில் 1918 ஜூலை 3 அன்று பிறந்தவர். தந்தையார் ஒரு சுங்கத்துறை ஆய்வாளர். குடும்ப வழியில் சாமர்ல வெங்கட ரங்கா ராவ் எனப் பெயர் கொண்ட எஸ்.வி.ரங்கா ராவ், மூன்று சகோதரர்கள், ஏழு சகோதரிகளுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்தார். தௌலேஸ்வரத்தில் தொடக்கக் கல்வி பயின்றார்.
மருத்துவராகப் பணியாற்றிய தாத்தா சாமர்ல கோட்டைய ராவின் மறைவுக்குப் பிறகு ரங்கா ராவின் பெற்றோர் சென்னையில் குடியேறினர். அப்போது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தார். பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் குட்டி மந்திரவாதி வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். பின்னாளில், நாடு போற்றும் நேபாள மந்திரவாதியாக ‘பாதாள பைரவி’யில் நடித்ததன் தொடக்கமாகக்கூட இதைக் கருதலாம்.
பின்னர், விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், காக்கிநாடா பி.ஆர். அரசுக் கல்லூரியில் இளங்கலை அறிவியலும் முடித்து தீயணைப்புத் துறையில் வேலையில் அமர்ந்தார். இதனூடே, நாடக வசனங்களை நன்றாகப் பேசுவதற்காகப் பேச்சுப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்வதுடன் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தும் வந்தார். பல பெரும் கலைஞர்களை உருவாக்கிய ‘காக்கி நாடா இளைஞர் நாடகக் குழு’வில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்குழு நடத்தில் நாடகமொன்றில் 22 வயதில் 65 வயது முதியவர் வேடம் போட்டுப் பெயர் வாங்கினார்.
அக்குழுவின் புகழ்பெற்ற ஆங்கில நாடகங்களான ‘அலாவுதீன் கில்ஜி’யில் மாலிக் கபூர், ஷேக்ஸ்பியரின் ‘ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா’ நாடகத்தில் சீஸர், ஷைலாக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் பெற்றார். அங்கு, அவருக்கு பி.எஸ்.சுப்பா ராவ், ரேலங்கி , அஞ்சலிதேவி, அவருடைய கணவர் ஆதி நாராயணராவ் ஆகியோரின் நட்பு கிடைத்ததது. நாடகத்திலிருந்து திரைக்கு வந்தபோது தனது தீயணைப்புத்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர், வெள்ளித்திரையில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார் ரங்கா ராவ்.
முதல்நாள் படப்பிடிப்பு
பின்னாளில் கொடி கட்டிப் பறந்தபோது, தனது முதல் நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது என்பதை இதழ் ஒன்றில் எஸ்.வி.ரங்கா ராவ் கட்டுரையாகவே எழுதியிருக்கிறார்.
“ஆகச் சிறந்த நடிகனாவது என் ஆசை. பின்னர் 1946-ல் தூரத்து உறவினரான பி.வி.ராமானந்தம் அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில் ‘வரோதினி’ என்ற படத்தில் நடித்தேன். அதற்காக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ரயிலேறிச் சென்றேன். ஊர் புதிது, ஆட்கள் புதிது, தொழில் புதிது, நண்பர்கள் யாரும் இல்லை எனப் பல குழப்பங்கள்.
அனைவரின் கண்களும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. அதனால் மனதில் தயக்கம். படபடப்பு, பயம் எனக் கலவையான மனநிலையில் இருந்த என்னை ஒரு காதல் காட்சியில் நடிக்க வைத்தார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? உடன் நடித்த தாசரி திலகம் என்னும் நடிகை தனது வசனத்தைத் தெளிவாகப் பேசி நடிக்க, நானோ தரையைப் பார்த்து என் வசனத்தைப் பேசினேன். வெல்லம் உடைக்கும் கல்போல உணர்ச்சியில்லாமல் பேசியதாக எல்லாரும் சிரிக்க, திட்டு வாங்கினேன்.
அவமானம் என்னைப் பிய்த்துத் தின்றது. நாம் நடிக்க வந்ததே தவறு, உடனே ஊருக்குத் திரும்பிட வேண்டும் எனத் தோன்றிய நாள் அது. பின்னர் இயக்குநர் சமாதானம் செய்து என்னைத் தேற்றியதால் தட்டுத் தடுமாறி நடித்து முடித்தேன்” என்று எழுதியிருந்தார்.
ரங்காராவ், ‘வரோதினி’ படத்துக்காக இயக்குநர் பி.வி.ராமானந்தத்துடன் 21.10.1945-ல் ஒரு நடிகராக அதிகாரபூர்வமாகப் போட்டுக்கொண்ட முதல் பட ஒப்பந்தத்தைப் பொக்கிஷமாக இன்னும் அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். அதில் கிருஷ்ண தேவராயுடு, பிரவராயுக்குடு வேடங்களில் 90 நாட்கள் நடிக்க ரூபாய்.750 சம்பளமும் ரூபாய்.150 முன்பணம் பெற்றுக்கொள்வது என்பதில் தொடங்கி படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் , போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பத்துக்கும் மேலான ஷரத்துக்கள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் படம் 1947-ல் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகி வணிகரீதியில் தோல்வியடைந்ததால், திரும்பவும் ஊருக்குப் போய்விடுகிறார்.
நடிப்பில் ஒளிந்த நவரசம்
பின்னர், 27.12 1947 –ல் ஏலூரில் நடந்த ஒரு எளிய விழாவில் பத்தெட்டி வெங்கட்ராமையாவின் மகளான ஸ்ரீமதி லீலாவதியை மணமுடித்து ஜாம்ஷெட்பூரில் டாட்டா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நடிப்பு அவரை விடுவதாக இல்லை. திரும்பவும் ராஜினாமா, திரும்பவும் ஸ்டுடியோ எனத் தென்னகம் வந்தவருக்கு ‘மன தேசம்’ (1949), ‘பல்லெட்டூரிபில்லா’ (1950) என அஞ்சலி தேவி, எல்.வி.பிரசாத்தின் உதவியில் வேடங்கள் கிடைத்தன.
‘சுன்னப்ப ரங்குடு’ என்ற ரௌடிக் கதாபாத்திரத்தில் ‘சௌகார்’ (1950) படத்தில் நடித்ததால் சின்ன திருப்பம் கிடைத்தது. பின்னர் நாடறிந்த பெருந்திருப்பம் நேபாள மந்திரவாதியாக நடித்த ‘பாதாள பைரவி’யில் (1951) கிடைத்தது. இது என்.டி.ஆருக்கும் திருப்பம் தந்த படம். அதைத் தொடர்ந்து நடந்தது வரலாறு. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்குக் கதாநாயகர்களைவிட அதிக சம்பளமும் பெற்று நடித்த ஒரே குணச்சித்திர நடிகராகத் திரையுலகம் இவரை உயர்த்தியது. இவரின் வளர்ச்சியில் விஜயா வாகினி ஸ்டுடியோவின் அதிபர் நாகி ரெட்டிக்குப் பெரும் பங்கு உண்டு.
தந்தை வேடமென்றாலும் அதில்தான் எத்தனை வகைகள்! பாசமிகு தந்தையாக, பணக்காரத் தந்தையாக , ஏழைத் தந்தையாக, நகைச்சுவை உணர்வுமிக்க தந்தையாக (‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’) என்று பட்டியல் நீளும். தந்தை கதாபாத்திரங்களுக்கு அப்பால், மந்திரவாதியாக, ஜமீன்தாராக, அக்பர் பாதுஷாவாக, உக்கிர சேனனாக, எமதர்மனாக, ஹிரண்யகசிபுவாக, நரகாசுரனாக, ராஜா அரிச்சந்திரனாக, நரசிம்ம வர்ம மன்னனாக (‘பார்த்திபன் கனவு’), கீசகனாக, துரியோதனனாக, பலராமனாக, போஜராஜனாக, கடோத்கஜனாக, கம்சனாக, பாதிரியாராக, பீஷ்மராக, ராவணனாக, தக்ஷனாக, வழக்கறிஞராக என இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் தனித்த, பிரதி செய்ய முடியாத நவரச நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார்.
கீசகன், ஹிரண்யகசிபு போன்ற சில புராணக் கதாபாத்திரங்களைக் கறுப்பு வெள்ளைப் படங்களின் காலத்தில் முதல்முறையாகவும். அதே கதாபாத்திரங்களை வண்ணப் படக்காலம் வந்தபிறகு வேறு பரிமாணங்களிலும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார்.
ஒத்திகையில் செய்ததைத் தவிர, படப்பிடிப்பின்போது டேக்கில் வேறு ஏதாவது கூடுதலாகச் செய்து பெயர் வாங்குவதில் சாவித்திரியைப் போலவே இவரும் பெரிய கில்லாடி. ‘படிக்காத மேதை’ படத்தில் செல்வந்தர் சந்திரசேகராகச் செல்வச்செழிப்பின் உச்சத்தைத் தனது உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் கொண்டுவந்த ரங்கா ராவ், பங்குச்சந்தையில் சரிவால் நொடித்துப்போன பிந்தைய நிலையை அத்தனை நம்பகமாகத் தனது நடிப்பில் ஒரு கதாபாத்திரத்தில் இரு பரிமாணங்களைக் கொண்டுவந்து காட்டியவர். செல்வந்தர்கள் வீட்டில் போடும் ஹவுஸ் கோட்டுக்குக் கம்பீரம் சேர்த்ததும் இவரே.
சார்லி சாப்ளினின் பாராட்டு
ஒரு ரசிகனாக, பின்னாளில் வந்த வண்ணப் படங்களில் வில்லனாக ரங்கா ராவ் வரும் கதாபாத்திரங்கள் நிறைவில்லாதது போலவே தோன்றும் குறையும் உண்டு. அதேநேரம், ஆறே நிமிடங்கள் வந்தாலும் ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும், ‘ அப்பாவிக் கணவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் தெலுங்கு பேசும் இயக்குநராகவும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.
ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் இலியட்டின் ‘சைலஸ் மார்னர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘பங்காரு பாப்பா’ (1954) படத்தைப் பார்த்த சார்லி சாப்ளின், அதில் கோட்டையாவாக வேடம் தரித்திருந்த ரங்கா ராவின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதாக தகவல் இருக்கிறது. தெலுங்கு, தமிழ் தவிர இந்தி, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
1971-ல் இவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைந்ததை ஒரு விழாவாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். 4 படங்களைத் தயாரித்ததும் 2 படங்களை இயக்கியதும் இவரின் சிறப்புகள். வேட்டையாடுதல், ருசியான உணவுகள், ஒளிப்படமெடுத்தல், கவிதை எழுதுதல் இவருக்குப் பிடித்தமானவை. இவரின் இஷ்ட தெய்வம் சிவன். இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் என அனைவருமே ஏலூரில் வசிக்கிறார்கள்.
1954 நவம்பர் மாத ‘கினிமா’ என்னும் சினிமா இதழில் ஒரு கேள்வி பதிலில் தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். 70-களில் ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு ‘படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் மட்டும் மரணம் தப்புமா?’ என சமாதானம் சொல்லி ஓய்வில்லாமல் நடித்தார். பின்னர் 74 ஜுலை மாதத்தில் மறைந்தார். இன்றுவரை இவரது குரலையும் பாவனையையும் பலகுரல் கலைஞர்களால் ‘மிமிக்ரி’ செய்ய முடியாதது ஒன்றேபோதும் இந்த மாபெரும் கலைஞனின் தனித்துவத்தைச் சொல்ல. ஒரே ஒருவர் என்ற பொருள்பட ‘ஒக்கே ஒக்கடு’ என விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருசேரப் பாராட்டும் ரங்கா ராவ், நடிப்புலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிக்கூடம்.
ஆறடிக்கும் மேலான தோற்றம், சரித்திர வேடங்களைத் தாங்கும் கம்பீரம், பேசும் கண்கள், யாரையும் பின்பற்றாத பாணி , நாடகத்திலிருந்தது வந்தாலும் இயல்பான நடிப்பு, நவரசங்களிலும் வெளிப்பட்ட திறமை என்பவை இவரின் சிறப்புகள்.
ஒரு பத்திரிகைக் கேள்வி பதிலில் சிவாஜி கணேசனுக்குப் பெரிய விருதுகள் கிடைக்காமல் போனது பற்றிய கேள்விக்குப் பதிலாக “அவர் சிரிக்கும்போது நாம் சிரித்தோம்.. அவர் குரல் உடைந்து அழத் தொடங்கும் முன்னரே நாம் அழுதோம். இதைவிட என்ன விருது வேண்டும். மக்களின் மனங்களை ஜெயிப்பதுதான் ஒரு கலைஞனுக் கான விருது” எனக் கூறினார். இதே பதிலை நாம் எஸ்.வி.ஆருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஐந்துமுறை விருது
நட சாராவ பவும, நட சிம்ஹா, நட சேகர, நட சாம்ராட், விஸ்வ நட சக்ரவர்த்தி என தெலுங்கு ரசிகர்கள் இவருக்குப் பல பட்டங்கள் கொடுத்துக் கொண்டாடினார்கள். ‘நர்த்தன சாலா’ படத்தில் கீசகனாக நடித்ததற்கு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் ஆசிய அளவில் விருது வாங்கினார். அவர் இயக்கிய இரண்டு படங்களுக்கும் ஆந்திராவின் நந்தி விருது கிடைத்தது. நடிப்புக்காக ஐந்து முறை இவர் ஜனாதிபதி விருது வாங்கியிருக்கிறார் 1968 -க்குப் பிறகு இந்த விருதுகள் தேசிய விருதுகளாகிவிட்டன.
நல்ல வாசகரான ரங்கா ராவின் தனி நூலகத்தில் விவேகானந்தர் புத்தகங்கள் இருந்ததும் மிகுந்த குடிப்பழக்கம் கொண்டிருந்ததும் ஒரு முரண். அந்நாளில் பர்க்லி சிகரெட்டின் வாடிக்கையாளராக இருந்த அவரை, அந்நிறுவனம் தனது வணிகத் தூதுவராகவும் ஆக்கிக்கொண்டது. பாகிஸ்தான், சீனா யுத்தங்களின் போதும் நிறைய நிதியுதவி செய்திருக்கிறார்.
2013-ல் தெலுங்கு சினிமாவின் நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக இவரின் தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும், 2018-ல் இவரின் நூற்றாண்டு விழாவை ஹைதராபாத்தில் ஒரு வாரத்துக்கு ஆந்திர திரையுலகம் கொண்டாடியது. ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச் சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: tottokv@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT