Published : 12 Jul 2019 11:50 AM
Last Updated : 12 Jul 2019 11:50 AM
ஜூலை 12: நா.முத்துகுமார் 44-வது பிறந்த தினம்
எனது கல்லூரி நாட்களின் வெள்ளிக் கிழமைகள் திரையரங்குகளில் தொடங்கும். எனது வகுப்புத் தோழர்கள் கதாநாயகர்களின் படங்களுக்குச் சென்றால் நான் இயக்குநர்களின் படங்களுக்குச் செல்வேன். பல வேளைகளில் என்னுடைய தெரிவை ஏற்று நண்பர்கள் என்னுடன் வரும்போது திரையில் இயக்குநர்களின் பெயர் ஒளிர்கையில் நான் கரவொலி எழுப்புவேன். அதைச் சற்று விநோதமாக நோக்குவார்கள். திரைப்படம் என வருகிறபோது இயக்குநரே நட்சத்திரங்களின் நட்சத்திரம் என நம்புகிறவன் நான். கல்லூரி முடிந்ததும் எப்படியாவது இயக்குநர் ஆகிவிடுவது என்ற கனவுடன் கோடம்பாக்கத்தில் அடிவைத்தேன்.
இப்படியும் கூட சுவாரசியமாகக் கதை சொல்ல முடியுமா என்று எண்ண வைத்த ஒரு முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர அலையாய் அலைந்துகொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நாமே குறும்படம் எடுத்து இயக்குநர் ஆகிவிடலாம் என்று எண்ண வைத்துவிட்டார் அவர். இந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஒரு படம் இயக்கப்போகிறார் என்ற செய்தியைப் படித்தபோது எனக்கு சிலீர் என்றிருந்தது.
கவிதைகளையே திரைப்பாடல்களாக எழுதிவந்த அவரது மொழியும், பத்திரிகைகளில் அவர் எழுதிவந்த தொடர்களும் என்னை ஆரத் தழுவியிருக்கின்றன. அவரது பேட்டி எந்தப் பத்திரிகையில் வந்திருந்தாலும் படித்துவிடுவேன். அப்படித்தான் அவர் பாலுமகேந்திராவின் உதவியாளர் என்பதைத் தெரிந்துகொண்டிருந்தேன். எனக்கு ஆர்வம் அதிகரித்தது. எனது அதிர்ஷ்டம், கவிஞர் முத்துவிஜயனிடம் ‘ எனக்கு நல்ல உதவி இயக்குநர் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் முத்துக்குமார். உடனே அவருக்கு என் நினைவு வர, என்னை அழைத்துச்சென்று முத்துக்குமாரிடம் அறிமுகப்படுத்தினார்.
2007, நவம்பர் 4-ம் தேதியை மறக்க முடியாது. அன்றுதான் நா.முத்துக்குமாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். சேர்ந்த சில நாட்களிலேயே உடன்பிறந்த அண்ணனைப் போல ஒன்றிப்போய்விட்டார். “ தம்பி... ஒருவாரம் எங்காவது ஒரு வெளியூருக்குப் போய் நம்முடைய திரைக்கதையை எழுதிக் கொண்டு வந்துவிடுவோம்” என்று என்னிடம் சொல்வார். நானும் ‘சரி அண்ணே ..’ என்பேன்.
வார்த்தைகளின் விளைநிலம்
ஆனால், ஒரு நாளில் குறைந்தது ஒரு பாடலும் அதிகபட்சம் ஐந்து பாடல்களும் எழுதிக்கொண்டிருந்தார். ஆண்டுக்கு 100 முதல் 110 படங்களுக்கு அவர் எழுதிக்கொண்டிருந்தார். சில இயக்குநர்கள் ஒரு பாடலையாவது முத்துகுமாரிடம் எழுதி வாங்கிவிட வேண்டும் என்று உரிமையுடனும் நட்புடனும் அவரை ஒப்புக்கொள்ள வைத்துவிடுவார்கள். நேரம் அவரை ஒரு கைதியைப் போல நடத்தியது. அதிகாலையில் தூங்கி மீண்டும் அதிகாலையில் எழுந்துவிடுவார். நானும் அப்படியே பழகிக்கொண்டேன். மதிய உணவு உண்டபிறகு அரைமணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தைப் போடுவார்.
நான் எழுப்பிவிடாமலேயே உடல் கடிகாரம் அவரை எழுந்து உட்கார வைத்துவிடும். தூங்கி எழுந்தபின் அவர் தேநீர் அருந்தும் அழகே தனிதான். படிப்பதும் எழுதுவதும் எழுத்தையும் இலக்கியத்தையும் பற்றி போனிலும் அங்கே வருகிறவர்களிடமும் உரையாடி அறிவைப் பகிர்வதில் வஞ்சகம் இல்லாதவர். நான் ஒருமுறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர ரகசியம்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்தவர், அந்தப் புத்தகம் பற்றி அரை மணிநேரம் பேசினார். அவர் படிக்காத புத்தகம் என்று எதுமே இருக்காது என எண்ணத் தோன்றும்.
சாலிகிராமத்தின் அருணாசலம் சாலையில் இருந்த அடுக்ககத்தின் தரைத் தளத்தில்தான் அண்ணனின் அலுவலகம் இருந்தது. இன்றைய நம்பிக்கைகளாக வளர்ந்து நிற்கும் படைப்பூக்கம் மிகுந்த இயக்குநர்கள் அத்தனைபேரும் அங்கே மகிழ்ச்சியோடு உரையாடிச் சென்றிருக்கிறார்கள். அங்கே பாடல்கள் மட்டுமல்ல; கதைகளும் பிறந்திருக் கின்றன. காட்சிகள் விளைந்திருக்கின்றன.
அலுவலகம் என்பது அவர் கழற்றிவைத்திருக்கும் மூளை என்று கூடச் சொல்லலாம். அது வார்த்தைகளின் விளைநிலம். பாடல்கள் எழுதிக்கொண்டி ருக்கும் போது எதிரே இருக்கும் சுவரைப் பார்த்து யோசிப்பார், வார்த்தைகள் வந்து விழும். அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தால் எனக்கு மின்விசிறி ஓடுவது தெரியும், அவருக்கு மட்டும்தான் அங்கு வார்த்தைகள் ஒளிந்துகொண்டிப்பது தெரியும். அதனை மெல்ல பறித்து மெட்டில் கோப்பார்.
சில நேரம், மெட்டின் மீட்டரில் உட்கார வார்த்தைகள் மறுத்தால் எழுந்து குளியலறைக்குப் போவார். போனவேகத்தில் கதவைத் திறந்துகொண்டு வார்த்தைகளைச் சொல்லியபடியே வெளியே வருவார். அவரது அறையின் சுவரில் ஸ்க்ரோலிங் ஓடிய வார்த்தைகள் குளிக்கப் போயிருக்கும் போலும். அந்த வார்த்தைகள் குளித்து முடிப்பதற்கு முன்பே அதன் தலையில் ஈரிழைப் பருத்தித் துண்டால் துவட்டிவிடுகிறாரே அண்ணன் என்று சிலவேளை நான் சிரித்துக்கொள்வதுண்டு.
ஒரே ஒரு ஒளிப்படம்
பாடல் எழுதும் வைபவம் முடிந்து அனைவரும் அலுவலகத்தை விட்டுச் சென்ற பிறகு குளியலறைக்குச் சென்று பார்ப்பேன். அதுவும் சிறிய புத்தக அறை போன்றே இருக்கும். படித்த பக்கத்தை ஞாபகப்படுத்தியபடியே சில புத்தகங்கள் கிடக்கும்.
இன்று ஜூலை 12. அண்ணனின் 44-ம் பிறந்த நாள். இன்று அவர் இருந்திருந்தால், காலையில் எழுந்து புத்தாடை அணிந்து மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கலைஞர் ஐயாவைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றிருப்பார். பிறந்தநாளில் கலைஞரைச் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே அவர் வைத்திருந்தார். அவரது பிறந்தநாளில் நானும் புத்தாடை அணிய வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிடுவார்.
நான் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆடை வாங்கிக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரோஜாக்களை வாங்கி வந்து அவரது பிறந்தநாள் பிறக்கும் இரவில் அலுவலகத்தை மலர்களால் நிறைத்துவிடுவேன். அது அவரது முகத்தை இன்னும் மலர வைத்தது. ஒரு பிறந்தநாளில் “மலர் அலங்காரத்தையும் கவிதை எழுதுவதுபோலவே செய்திருக்கிறாய்” என்றார்.
முத்துகுமார் அண்ணனோடு இருந்த ஆறு வருடங்களில் அவரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளத் தோன்றியதில்லை. முத்துகுமார் என்றாலே ‘உன்னை விட்டு நான் விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை’ என்ற பிரபலமான பைபிள் வாசகத்தின் மறுபதிப்பாக அவர் இருந்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம் வெளியான வருடம் அது. நடிகர் ஆர்யா, முத்துகுமார் அண்ணன் மகனின் பிறந்த நாள் விழாவுக்கு வீடுதேடி வந்திருந்தார்.
ஆர்யாவுடன் புகைப்படம் எடுக்கும் போது அருகில் அழைத்து நிறுத்திக்கொண்ட அண்ணன் “ வேல்முருகன்.. என்னோட அசிட்டெண்ட், இவனுக்கும் நீங்க கால்ஷிட் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அதுவரை வெறுமனே நின்றிருந்த ஆர்யா, என் தோள்மீது கைபோட்டுக்கொண்டார். அவரிடம் சேர்ந்திருந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை “உன்னை ரொம்ப காக்க வைக்கிறேன்னு நினைக்கிறேன்... நீ ஏ.எல்.விஜய்கிட்ட சில படங்கள் வேலை செய்றீயா?” எனக் கேட்டுவிட்டு, அலுவலகத்துக்கு வந்திருந்த இயக்குநர் விஜயிடம் எனக்கு வாய்ப்புக் கேட்டார்.
பின்னர் நான் வசனம் எழுதி, நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான ‘எனக்குள் ஒருவன்’ படம் வெளியானபோது மும்பையில் ஒரு படத்தின் பாடல்களுக்காக அண்ணன் பணியாற்றிக்கொண்டிருந்தார். ‘எனக்குள் ஒருவன்’ படத்தை ஊருக்கு வந்ததும் பார்த்துவிடுகிறேன்’ என்று வாழ்த்தியவர், அதேபோல் பார்த்துவிட்டுப் பாராட்டினார்.
அப்போது அவரிடம் ‘உங்க ஸ்கிரிப்ட் வேலையைத் தொடங்கலாமா?’ என்றேன். ஆனால் அவரது அனுமதியுடன் காற்றில் கலப்பதற்காகக் காத்திருந்த வார்த்தைகள் அவரைத் திரைக்கதை எழுத கடைசிவரை அனுமதிக்கவே இல்லை. பாடல்கள் அமையும் சூழ்நிலையில் மனத்தை அலையவிடுவதற்காக நிறைய திரைக்கதைகளைக் கேட்டு, வியத்தகு திருத்தங்கள் சொன்ன பாடலாசிரியர் நா.முத்துகுமார், இயக்குநர் நா.முத்துகுமாருக்கான திரைக்கதை எழுதாமல் போனது இன்னும் என் உள்ளத்துள் கனமாக வலித்துக்கொண்டே இருக்கிறது.
- வேல்முருகன், கவிஞர், பாடலாசிரியர். இயக்குநர்
தொடர்புக்கு: mabel.velmurugan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT