Published : 05 Jul 2019 10:51 AM
Last Updated : 05 Jul 2019 10:51 AM
‘சதுரங்க வேட்டை’, 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ஹெச். வினோத். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீஸர் இணையத்தில் அமோக வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் ‘இந்து தமிழ் திசை’க்காக அவர் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
அஜித்துடன் எப்படிக் கூட்டணி அமைத்தீர்கள்?
‘சதுரங்க வேட்டை' படம் வெளியான பிறகு அஜித் சாரை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் கொண்டுபோயிருந்த கதையைச் சொன்னவுடன், ‘நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று சுரேஷ் சந்திரா சொன்னார். ‘பிங்க்’ இந்திப் படத்தின் மறு ஆக்கத்தில் நடிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன். உங்களுக்கு ஆர்வமிருந்தால் அதைப் பண்ணலாமா?’ என்று கேட்டார்.
முதலில் கொஞ்சம் தயங்கினேன். ரீமேக் படம், ஒப்பிடப்படுவோமே என்று நினைத்தேன். ‘தயங்கியதைப் பார்த்து, உங்களுக்கு ஆர்வமிருந்தால் சொல்லுங்கள், நாம பேசலாம்' என்றார் அஜித். பிறகு படத்தைப் பார்த்தேன், ரொம்ப நல்ல படம். நம்மால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது, சமூகத்துக்கு மிக முக்கியமான படம். உடனே ஒப்புக்கொண்டேன். படத்தையும் உடனே தொடங்கிவிட்டோம்.
தமிழ் மறு ஆக்கத்துக்காக என்னவெல்லாம் மாற்றியிருக்கிறீர்கள்?
கதையை மாற்றக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கதை என்று சொல்வதைவிட, அது ஒரு விவாதம் என்று சொல்வேன். வயதான அமிதாப் பச்சன் சாருடைய கதாபாத்திரத்தைக் கொஞ்சம் அஜித்தின் வயதுக்கு ஏற்ப மாற்றி எழுத வேண்டியிருந்தது சவாலாக இருந்தது. அது மட்டும்தான் இதில் மாற்றம்.
இந்தி, தமிழ் என்ற ஒப்பீடே இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அஜித் அவருடைய ஸ்டைலில் பண்ணியிருக்கிறார். ‘பிங்க்’ படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் இரு தரப்புக்குமே இந்தப் படம் பிடிக்கும். அஜித் ரசிகர்களுக்கான விஷயங்களையும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் ரங்கராஜ் பாண்டே முதன்முறையாக நடித்திருக்கிறாரே?
துணைக் கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்த நடிகர்களைத் தேடத் தொடங்கினேன். ஒரு வக்கீல் கதாபாத்திரத்துக்கான நடிகர் அமையாமல் இழுத்துக்கொண்டே இருந்தது. உதவி இயக்குநர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, வந்த பெயர்தான் ரங்கராஜ் பாண்டே. அவர் அரசியல் பேசிக்கொண்டே இருக்கும் நபர்.
அரசியலே பேசாத நபர் அஜித். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் நின்றால் எப்படியிருக்கும் எனப் பேசினோம். இறுதியில், பாண்டேயிடம் இது குறித்துப் பேசியபோது, அவருக்கு ஆர்வமிருந்தது. அஜித் சாருடைய படம், பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்புக்காக எவ்வளவு பேர் போராடுகிறார்கள் என்பது தெரியும் என்று நிறைய ஆர்வம் காட்டினார். இறுதியில் படத்துக்குள் வந்தார்.
அஜித் அதிகமாக வசனம் பேசியிருக்கும் படம் என்ற நிலையில், இதற்காகச் சிறப்புப் பயிற்சி எதுவும் அவர் எடுத்தாரா?
இல்லை. அனைத்தையுமே ‘சிங்கிள் டேக்’கில் ஓகே பண்ணியிருக்கிறார். அவர் வசனம் பேசியிருக்கும் ஸ்டைல்தான், இந்தப் படத்தில் மிகப் பெரிய சர்ப்பிரைஸாக இருக்கும். இதுவரை அஜித் படங்கள் இப்படித்தான் இருக்கும் என ஒன்றை நினைத்திருப்போம். அது எல்லாமே இந்தப் படத்தில் மாறும். அப்படியொரு பிரமாதமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.
அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறீர்கள். அது எந்த மாதிரியான படம்?
ஒரு நல்ல கமர்ஷியல் ஆக் ஷன் படம். அதைப் பற்றி இப்போதே பேசும் அளவுக்கு எதுவும் பெரிதாக நடக்கவில்லை. செய்திகள் சுற்றிக்கொண்டிருப்பது தெரியும். படம் பண்ணலாம் என்று அஜித் சார் சொல்லிவிட்டார். இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தான் எல்லாமே முடிவாகும்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்று ஒரு இயக்குநருக்குச் சவாலாக இருப்பது என்ன?
ஒரு படத்துக்கான கதையை உருவாக்குவதே கடினமா இருக்கு. ஏனென்றால், முன்பு போட்டி என்பது தமிழ் சினிமாவுக்குள் இருந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க அந்தப் போட்டி பரவியுள்ளது. அனைத்து மொழிப் படங்களையும் அனைவரும் பார்க்கிறார்கள். அதனால் ஒப்பிடும் அதிகமாகிவிட்டது.
ஒரு கதையைக் கண்டுபிடித்து அது புதிதாக இருக்கிறதா, குடும்பத்துக்குப் பிடிக்குமா என்றெல்லாம் யோசித்து எழுதி முடிப்பதற்கு ஒரு நேரம் தேவைப்படுகிறது. வருடந்தோறும் படம் பண்ணிக்கொண்டிருந்தால், மூன்று படங்களுக்குப் பின் இவன் ஒரே மாதிரி படம் எடுக்கிறான் என்று நம்மைக் கிளம்பச் சொல்லிவிடுவார்கள்.
இந்தப் படத்துக்குப் பின் சிறிய பட்ஜெட் படங்களை இயக்குவீர்களா?
சரியான ஒரு படம் அமையணும், வியாபாரம் சரியாக நடக்கணும். அதற்கான முயற்சிகளில்தான் இருப்பேன். எனக்கு வரும் விஷயங்களை மட்டுமே செய்யலாம் என்பதுதான் ஆசை. என்ன பட்ஜெட்டில் இருக்கணும், யார் நடிக்கணும் என்பது போன்ற விஷயங்கள் எதையுமே நான் யோசிப்பதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT