Published : 22 Aug 2017 06:09 PM
Last Updated : 22 Aug 2017 06:09 PM
ஏ
னோ தெரியவில்லை.. சென்னையில் அல்லாமல், மும்பையில் தனது 2 புது நாடகங்களை அரங்கேற்றம் செய்துவிட்டு வந்திருக்கிறார் பாம்பே சாணக்யா. அங்கே சண்முகானந்தா ஹாலில் ‘எது நிழல்.. எது நிஜம்’ நாடகமும், ‘சுந்தரி நீயும் சுந்தரி ஞானும்’ நாடகமும் முதல் தடவையாக மேடையேறின. ‘‘இரண்டு புத்தம்புது நாடகங்களை அடுத்தடுத்த நாட்கள் மேடையேற்றியது அநேகமாக எங்கள் குழுவாகத்தான் இருக்கும்’’ என்கிறார் சாணக்யா. இன்னொரு ‘முதல்’ பெருமையும் இவருக்குக் கிட்டியிருக்கிறது. ‘சுந்தரி நீயும்...’ நாடகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தை அண்மையில் ‘லைவ்’வாக ஒளிபரப்பு செய்தது பொதிகை தொலைக்காட்சி. மேடை நாடகம் ஒன்று டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாம். இனி இந்த இரு நாடகங்களும் சபா மேடைகளில் வலம்வரும்.
பிரும்ம கான சபாவின் நாடக விழாவில் ‘எது நிழல்... எது நிஜம்’ பார்த்தேன். அரங்கம் நிரம்பியிருந்தது.
நாடகத்தின் மையம் சாருலதா. கர்னாடக இசைப் பாடகி. சாதித்து உயரம் தொடவேண்டும் என்ற வெறியில், மும்பையில் இருந்து சென்னை வந்து செட்டிலானவர். இவருக்கு கணவர் குருமூர்த்திதான் ஸ்பீடு பிரேக்கர். கிடைத்த வேலைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, வீட்டோடு முடங்கிய முழுச் சோம்பேறி. மனைவியை வசைபாடுவதும், தலையில் தண்ணீர் ஊற்றி மகனை கரித்துக்கொட்டுவதும் பொழுதுபோக்கு. மனைவியை சந்தேகப்படுவதும், நாக்கில் நரம்பின்றி தூற்றுவதும் உபதொழில்.
வாழாவெட்டியாக வந்துசேரும் பவானி, குருவின் சகோதரி. பேராசையும், வீண் பகட்டும் இவர் ரத்தத்தில் ஊறியவை. சாருவின் இசைத் திறமையை மூலதனமாகக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக அவளை மாற்றி, சேரும் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, அண்ணனின் உதவியுடன் அதில் வெற்றியும் காண்கிறாள்.
கச்சேரிகளுக்கு அமெரிக்கா புறப்படும் சமயம், பவானியின் சூழ்ச்சி தெரிந்து கொதித்து எழுகிறாள் சாரு. உச்சகட்ட பரபரப்பில் கணவனால் தரையில் தள்ளிவிடப்படுகிறாள். அவளது கால்கள் செயலிழக்கின்றன. சில தினங்களில் தலைநகர் சென்று பத்மஸ்ரீ விருது பெறவேண்டும். சாருவுக்கு அது சாத்தியப்பட்டதா என்பதை அறிய, சாத்தியப்படும்போது நாடகத்தைப் பார்த்துவிடுவது நலம்!
வாழ்க்கைத் துணைவி சொந்தக் கால்களில் நின்று பணமும், புகழும் குவிக்கும்போது அதை ஜீரணிக்க முடியாமல் எகிறிக் குதிக்கும் கணவன்மார்கள் எல்லா துறைகளிலும் உண்டு. எனினும், இசைத் துறையில் இந்த அவலத்துக்கு அதிக வெளிச்சம் கிடைத்துவிடுகிறது. படைப்பாளியும் இதை வைத்து எளிதில் ‘விளையாட’ முடிந்துவிடுகிறது.
பாம்பே சாணக்யாவின் கூர்மையான வசனங்களும், நேர்த்தியான இயக்கமும் நாடகத்தின் தரத்தை உயர்த்திவிடுகின்றன. ‘சே! இத்தனை மோசமாவா ஒரு புருஷன் நடந்துப்பான்?’ என்று பார்வையாளர்களை அங்கங்கே முகம்சுளிக்க வைப்பது சாணக்யாவின் வெற்றி!
சாருவாக கவிதா சுரேஷ். கணவனின் டார்ச்சர் கண்டு ஒதுங்கிவிடாமல், தேவை ஏற்படும் நேரத்தில் சீறி எழும்போது, கணக்கு வழக்கு நிரம்பிய ராகம் - தானம் - பல்லவி கேட்ட உணர்வு! கனத்த சரீரமும், சாரீரமும் துணைநிற்க, காம்ப்ளெக்ஸ் கணவன் ரோலில் பாம்பே குமார் கச்சிதம்! சிறுவன் சஞ்சய் வேடத்தில் யுகு என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் அட்டகாசம். அவனது டைமிங் சென்ஸ் சூப்பர்!
சாருவுக்கு தொடர்ந்து வயலின் வாசிக்கும் பட்டாபியும் (முத்தரசன்), மிருதங்கம் வாசிக்கும் ஸ்ரீனியும் (ஸ்ரீராம்) பக்கவாதம் வந்து பாதிப்புக்கு உள்ளாகும் சாருவுக்கு உதவும் பக்கா வாத்தியக்காரர்களும்கூட! வயலின் பட்டாபியை கீச்சுக் குரலில் பேச வைத்திருப்பது தேவையற்ற கொடுமை! ஒரு பாடகியின் வாழ்க்கைக் கதையில், இசைக்கு முக்கியத்துவம் தர சாணக்யா தவறியது வியப்பு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT