Published : 11 Aug 2017 10:28 AM
Last Updated : 11 Aug 2017 10:28 AM
‘மை
யிக்கே’ என்ற உருது சொல்லுக்கு ‘அம்மாவின் வீடு’(மா-அம்மா, கா-உடைய) என்று பொருள். ‘மாமியார் வீடு’, ‘தன் மனைவியின் பிறந்த வீடு’ என்ற பொருள்படும் இச்சொல், உருது, இந்தி பேசும் மக்களின் வாழ்வில், குறிப்பாக, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இளம் மனைவிகள் பயன்படுத்தும் தருணங்களின் பின்னணி சுவையானது.
நம் தமிழ் கலாச்சார வழக்கம் போல் அல்லாது, வட இந்தியக் குடும்பங்களில், பெண்கள் தனது முதல் பிரசவத்துக்குக்கூடத் தாய் வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். தன் மாமியாரை அம்மாவாக, மாமனாரை அப்பாவாக நினைத்துப் புகுந்த வீட்டுக்குள் ஒன்றிப்போகும் அவர்கள், கணவனுடன் பிணக்கு ஏற்படும் பொழுது மட்டும், “நான் மைக்கே (அம்மா வீட்டுக்கு) போய்விடுவேன் பார்த்துக்கொண்டே இரு” எனப் புருஷனை மிரட்டுவார்கள். பாதி கொஞ்சலும் பாதி கோபமும் கலந்து விடுக்கும் இந்த எச்சரிக்கைகள், முக்கால்வாசி நேரங்களில், அதற்கு மேலே எடுத்து செல்லப் படாமல் சமரசம் ஆகிவிடும். இந்தச் செல்லப் பிணக்கை மையமாக வைத்து, டிம்பிள் கபாடியாவும் ரிஷிகபூரும் குழுவினருடன் பாடுவதாக, ஆனந்த பக்ஷி ‘பாபி, படத்துக்கு எழுதிய ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ என்று தொடங்கும் இப்பாடல் இளமையும் இனிமையும் விஞ்சி நிற்கும் விருந்து. இத்தகைய மிகச் சில இந்திப் பாடல்களில் (தமிழில் இப்படிப்பட்ட பாடல் இல்லையென்றே சொல்ல வேண்டும்) நடன வகைப் பாடல்களில் ‘நம்பர் ஒன்’ ஆகத் திகழும் இப்பாடலின் பொருள்.
பொய்(நீ) சொன்னால்(உன்னை) காகம் கொத்தும்
கறுப்பு காகத்திடம் (அதனால்) கலக்கம் கொள்
நான் அம்மா வீட்டுக்குப் போகத்தான் போகிறேன்
ஏன் ஏன் என நீ பார்த்துக்கொண்டே இரு –டிம்பிள்
நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டால் தடி
எடுத்துக்கொண்டு தடாலடியாக(அங்கு) வருவேன்-ரிஷி
தடியை எடுத்துக்கொண்டு நீ அங்கு வந்தால்
அடியோடு நான் கிணற்றில் வீழ்ந்திடுவேன்-டிம்பிள்
கயிற்றால் வெளியே உன்னை இழுத்திடுவேன் –ரிஷி
அருகில் உள்ள மரத்தில் நான் ஏறி விடுவேன் –டிம்பிள்
கோடாலியால் அந்த மரத்தை அறுத்திடுவேன்-ரிஷி
(இந்தச் சமயத்தில், டிம்பிள் உடன் நடனமாடும் தன் தோழிகளில் ஒருத்தியிடம் சென்று) காதலிக்கும் கன்னிகளே கோடாலி தூக்கும் இவரைப் போன்றவர்களிடம் கலக்கம் கொள்க - டிம்பிள்
நான் அம்மா வீட்டுக்குப் போகத்தான் போகிறேன்
ஏன் ஏன் எனப் பார்த்துக்கொண்டே இரு –டிம்பிள்
நீ பிறந்த வீட்டுக்குப் போகத்தான் போகிறாய் எனில்
நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்-ரிஷி
நீ இன்னொரு திருமணம் செய்து கொண்டால்
அய்யோ எனக்கு சக்களத்தி வந்துவிடுவாளே!
நான் அம்மா வீட்டுக்குப் போகமாட்டேன்
போகவே மாட்டேன் நீ பார்த்துக்கொண்டே இரு- டிம்பிள்
உன் காலடியில் விழுந்து கிடப்பேன் உன்னுடன்
வாழ அளித்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்
நான் அம்மா வீட்டுக்குப் போகமாட்டேன்
போகவே மாட்டேன் நீ பார்த்துக்கொண்டே இரு, மாட்டேன்.
-இப்படி டிம்பிள் பாடியவுடன்
பொய்(நீ) சொன்னால்(உன்னை) காகம் கொத்தும்
கறுப்புக் காகத்திடம் (அதனால்) கலக்கம் கொள்
என்று ரிஷிகபூர் பாடி, மீண்டும் செல்லமாக
‘உன் சக்களத்தியைக் கொண்டு வருவேன்
நீ பார்த்துக்கொண்டே இரு’ என்று பாடுவார்.
உடனே டிம்பிள்..
பொய்(நீ) சொன்னால்(உன்னை)காகம் கொத்தும்,
நான் அம்மா வீட்டுக்குப் போக மாட்டேன்,
போகவே மாட்டேன் என்று பாடுவதுடன் இந்தப் பாடல் நிறைவுபெறும்.
மீனவர்கள் குடியிருப்பைப் பின்புலமாகக் கொண்டு பொருத்தமான இசை, பாடல் வரிகள் மட்டுமின்றி அதற்கேற்ற உடை, ஒப்பனை, அலங்காரம் அமைந்தது இப்பாடலின் சிறப்பு. பாட்டின் இறுதியில் ஆடி ஓடி நடனமாடும் நடிகர் பிரேம்நாத் அணிந்திருக்கும் பேண்ட்டின் ஜிப்பு சரியாகப் போடப்படாமல்(கோவானிய மீனவ முதியோர்களதுபோல) அரை குறையாக இருக்கும். இயக்குநர் ராஜ்கபூர் நுட்பமான, சிறிய அம்சங்களையும் காட்சிக்குத் தக்க அமைக்கும் திறமைக்குச் சான்றாக இது போற்றப்பட்டது.
திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் வரை, ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ என்பது இளம் காதலர்கள் தங்களுக்குள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொலவடைபோன்று விளங்கியது. ‘பாபி’ திரைப்படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் ஆசை மனைவியாக ஆகிவிட்ட டிம்பிள், இப்பாடல் காட்சியாக்கும் பொழுது இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் எனவும் ராஜேஷ் கன்னாவிடம் அனுமதி பெற்ற பின்னரே இப்பாடல் காட்சியாகப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
மேலும், தன் மகன் ரிஷிகபூரை முன்னணி கதாநாயகனாக ஆக்கும் நோக்கத்துக்காகவே இயக்குநர் ராஜ்கபூர் இப்படத்தை எடுத்தார் என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது ரிஷிகபூர் அதற்குப் பதிலாக இப்படிச் சொன்னார். “உண்மையில், ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் அப்பா அடைந்த பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவே டீன் ஏஜ் காதல் கதை கொண்ட இப்படத்தை எடுத்தார். அதற்குப் பொருத்தமான நாயகனாக இருந்த ராஜேஷ் கன்னா கேட்ட ஊதியத்தைத் தர தன்னால் இயலாது என்பதற்காகவே அப்பா எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தார்”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT