Published : 13 Aug 2017 10:50 AM
Last Updated : 13 Aug 2017 10:50 AM
பொறியாளரான நாயகன், ஒரு பெண் தொழிலதிபர் தரும் இடையூறுகளைச் சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பதைச் சொல்லும் படம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ஆண்டின் சிறந்த பொறியாளராக விருது பெறுகிறார் நாயகன் தனுஷ். அதுவரை தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளைப் பெற்றுவந்த பெண் தொழிலதிபர் கஜோல் இதனால் வெறுப்படைகிறார். தனுஷை தன் நிறுவனத்தில் வேலையில் சேர்க்க உத்தரவிடுகிறார். அதற்கு மசியாத தனுஷ், கஜோலை சீண்டுகிறார். இதனால், தனுஷுக்கு பல வகையிலும் தொந்தரவுகள் கொடுக்கிறார் கஜோல். ஒரு கட்டத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மீண்டும் ‘வேலையில்லா பட்டாதாரி’ ஆகிறார் தனுஷ். பிறகு ‘விஐபி’ டீமை வைத்துக்கொண்டு கஜோலை எப்படி வழிக்குக் கொண்டுவருகிறார் என்பது மீதிக் கதை.
முதல் பாகத்துடன் 2-ம் பாகத் தொடர்பை கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஆனால், முதல் பாகத்தில் இருந்த வேகம், சுவாரசியங்கள், எதிரியைச் சமாளிக்கும் சவால்கள் இதில் இல்லை. இடம், கதை, கதாபாத்திரங்கள், பஞ்ச் வசனம், காமெடி, தீம் மியூஸிக் என அசல் காப்பியாகவே இருக்கிறது. முதல் பாகத்தை இன்னொரு தடவை பார்த்ததுபோல சோர்வை ஏற்படுத்துகிறது. முன்கூட்டியே ஊகிக்கக்கூடிய வகையில் பயணிக்கும் திரைக்கதை, தேவையில்லாத பாடல்கள், சண்டை, ஃபேஸ்புக் வைரல் எல்லாம் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
சாதாரண நபர் - கோடீஸ்வரி மோதல் என்பது தமிழ்த் திரையுலகுக்கு புதிதில்லை என்றாலும், தனுஷ் - கஜோல் மோதல் காட்சிகள் எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றன. இந்த எதிர்பார்ப்பின் காரணமாக, 2-ம் பாதி சுவாரசியமாக, பரப்பரப்பாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருவருக்கு சாதாரண பொறியாளருடன் மல்லுக்கட்ட என்ன அவசியம் என்பதற்கு திரைக்கதையில் வலுவான காரணம் இல்லை. தனுஷ்-கஜோல் மோதல் காட்சிகள் உச்சமடையும்போது, வெள்ளக் காட்சிகளை வைத்து படத்தை முடிப்பது அயர்ச்சியைத் தருகிறது.
நாயகன் தனுஷ்தான் படத்துக்கு வசனம். அடிக்கடி பஞ்ச் வசனம் பேசுகிறார். எதிரிகளை ஓடவிடுகிறார், பழைய வண்டியில் பயணிக்கிறார். நடுரோட்டில் நடனம் ஆடுகிறார், கஜோலுடன் வார்த்தையால் விளையாடுகிறார், ஸ்டைலாக புகைவிடுகிறார். மார்க்கெட்டில் எதிரிகளைப் புரட்டி எடுக்கிறார். தவறாமல் ரஜினியை இமிடேட் செய்கிறார்.
சென்னையைப் புரட்டிப்போட்ட பெருமழையை உதாரணமாக சொல்லி ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என ஏற்றத்தாழ்வுகளை சாடும் வசனமும், இடையிடையே தனுஷ் உச்சரிக்கும் இருவரி திருக்குறளும் ரசிக்க வைக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் நடித்துள்ள கஜோல் குறையில்லாமல் நடித்திருக்கிறார். மிடுக்காக, மேற்கத்திய உடையில் அழகாக இருக்கிறார். ஆனால், பெரிய நிறுவனத்தின் திமிர் பிடித்த தலைவராக வரும் அவரது பாத்திர வார்ப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தனுஷின் மனைவியாக வரும் அமலா பால் கண்டிப்பான குடும்பப் பெண்ணாக வந்து சண்டை போடுகிறார். குடித்துவிட்டு வரும் தனுஷைப் பிடித்து கேள்வி கேட்கும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். கண்கலங்க வைத்த சரண்யா பொன்வண்ணனின் தாய்ப்பாசம், இதில் காமெடியாக மாற்றப்பட்டிருக்கிறது. விவேக் தனது பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் அறிவுரையாகப் பேசும் சமுத்திரகனி, இந்தப் பாகத்தில் அமைதியாக, இயல்பாக நடித்திருக்கிறார். வலிமையே இல்லாத வில்லனாக வருகிறார் சரவணா சுப்பையா. ரீது வர்மா, பாலாஜி மோகன், செல் முருகன் எனப் பலரும் அவ்வப்போது வந்துபோகிறார்கள்.
படத்துக்கு இசை ஷான் ரோல்டன். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. சமீர் தாஹீரின் ஒளிப்பதிவு கச்சிதம். சண்டைக் காட்சிகளில் ஸ்லோமோஷன் தவிர்த்திருக்கலாம்.
நல்ல பொழுதுபோக்குக்கான எல்லா அம்சங்களும் இருந்தும், வலுவில்லாத திரைக்கதையால் ‘வேலையில்லா பட்டாதாரி’ தள்ளாடுகிறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT