Published : 04 Aug 2017 11:45 AM
Last Updated : 04 Aug 2017 11:45 AM
தி
ரைக்கதை, படமாக்கும் விதம், உணர்த்தும் விஷயம் ஆகியவற்றில் சாரமிருந்தால் சாதாரணக் கதையே நல்ல படமாக மாறும். கதையையும் திரைப்படத்தையும் இணைக்கும் பாலம் திரைக்கதையே. பாலத்தையே திரைக்கதையின் பலமாக்கி இயக்குநர் டேவிட் லீன் தனது ‘த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்’ (1957) என்னும் படத்தில் வாழ்வைச் செழுமைப்படுத்த உதவும் பல செய்திகளைச் சொல்லியிருப்பார். இப்படம் பிரெஞ்சு நாவலாசிரியர் பியர் போல்லே எழுதிய ‘த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய்’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவத்தினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு ரயில் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா ரயில் தட உருவாக்கப் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த நாவல் இது.
கொள்கையில் உறுதி
டேவிட் லீனின் திரைப்படத்தில் பர்மா ரயில் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டிய பணி ஒன்று வருகிறது. இதை நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படைத் தலைவர் சைட்டோ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போர்க்கைதிகளைப் பணியாட்களாக வைத்து இந்தப் பாலத்தை அவர் கட்டி முடிக்க வேண்டும். புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் ‘அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும்’ என்று சைட்டோ மிகக் கண்டிப்புடன் கூறுகிறார்.
ஆங்கிலேயப் படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நிக்கல்சனை அவமானப்படுத்துகிறார்; கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.
வேறு வழியற்ற சூழலில், பணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இப்போது பணியை முடிக்க வேண்டிய பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். தொழில்நுட்பரீதியில் பாலம் சரியாக இல்லாததை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும் வியாதியஸ்தர்களையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை உருப்படியாகக் கட்டி முடிக்கிறார். வேலை, விதிமுறை, கொள்கை போன்றவற்றை முறையாக அனுசரிப்பதால் தனிமனிதருக்கு ஏற்படும் இழப்புகளை இந்தக் கதாபாத்திரம் மூலம் டேவிட் லீன் வெளிப்படுத்துகிறார்.
பைத்தியக்காரத்தனமான விதிமுறைகள்
இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம், இதே பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவமே ஒரு திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் கட்டளையை நிறைவேற்றத் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் பைத்தியக்காரத்தனமான விதிமுறைகளை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் டேவிட் லீன். சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபாத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது இப்படம்.
பாலத்தை அடிப்படையாகக் கொண்டு 1995-ல் ‘ஸேக்ரொலாய் பஹுடூர்’ (Xagoroloi Bohudoor) என்னும் அஸ்ஸாமியப் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ‘கடலுக்கான நீண்ட பாதை’ என்பதே இந்தத் தலைப்பின் பொருள். பொருள் பொதிந்த தலைப்பைக் கொண்ட இந்தப் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் ஜானு பரூவா. தொழில்நுட்பரீதியாகப் பெரிய மெனக்கெடல்கள் இல்லாத படம்.
மிகச் சாதாரணமான சம்பவங்களே படத்தின் காட்சிகளாகியிருக்கும். ஆனால், அழுத்தமான மன உணர்வை வெளிப்படுத்துவதில் நல்ல ஈரானியப் படங்களின் சாயலைக் கொண்டிருக்கும். நதிக்கரை ஓரத்துக் குடிசையில் வசித்துவரும் ஒரு முதியவரும் அவருடைய பேரனுமே பிரதானக் கதாபாத்திரங்கள். அவர்களிடையேயான உறவை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கும் தன்மையில் இயக்குநரைக் காண முடியும். நதியில் மூழ்கி மகனும் மருமகளும் இறந்துவிட்டதால் பேரனை ஆளாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
கடலுக்கான பாதை
கிராமத்து மனிதர்கள் கரையைக் கடக்கப் படகோட்டுவதன் மூலம் வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார் முதியவர். அந்த நதியின் மீது பாலம் ஒன்று அமைக்க கிராமத்தினர் முயல்கிறார்கள். அப்படிப் பாலம் அமைந்தால் வாழ்வாதாரம் பறிபோய்விடும் எனப் பதைபதைக்கிறார் முதியவர். எல்லோரையும் கரைசேர்க்கும் அவர் பேரனைக் கரையேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் தத்தளிக்கிறார். நகரத்தில் வாழும் மற்றொரு மகன் மூலம் பேரனுக்கு வழிகிடைக்குமா எனப் பார்க்கிறார். அதுவும் தவறிப் போகிறது.
நகரத்தில் வாழும் முதியவரின் மகனும் மருமகளும் உறவைவிட நிலத்தையும் பொருளையும் நம்புபவர்களாக இருப்பதைத் தங்கள் நடத்தை வழியே காட்டுகிறார்கள். பொதுவாக வயதான மனிதர் என்றால் அவரை மிகவும் வெகுளியாகவும் அப்பாவியாகவும் சித்தரிப்பார்கள். அந்தத் தவறைச் செய்யவில்லை ஜானு பருவா. கடலுக்கான பாதை நீண்டதுதான், ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை உணர்த்தி நிறைவுறும் படம்.
தமிழில் ‘பாலம்’ என்ற பெயரிலேயே 1990-ல் ஒரு படம் வந்திருக்கிறது. தனக்குத் தீங்கிழைத்த அரசியல்வாதி ஒருவரைப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்திவந்து ஒரு பாலத்தில் சிறை வைத்திருப்பார். தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கும் தன் அண்ணன், அண்ணி, நண்பர்கள் இருவர் ஆகியோரை விடுவிக்காவிட்டால் அரசியல்வாதியைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவார்.
பொதுவாகத் தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரித் தான் இப்படியான கடத்தல்கள் நடக்கும். ஆனால், அப்பாவிகளை விடுவிக்கக் கோரியே இந்தப் புரட்சிப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். இதை இயக்கியவர் கார்வண்ணன். ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் முரளி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் அந்த அரசியல்வாதியாக நடித்திருப்பார்.
ஒரு கிராமத்துக்குப் பாலம் வந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என்பதால் அதை வரவிடாமல் தடுக்கும் அரசியல்வாதிக்கும் அந்த ஊர் மக்களுக்குமான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் அமீர்ஜான், ‘நட்பு’ (1986) என்னும் பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நாடகத்தனமான இத்திரைப்படத்தின் கதை வசனம் வைரமுத்து.
திரைப்படங்கள் வெறுமனே அறநெறிகளை மட்டும் போதித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அறநெறிகள் என்பவை காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியவை. அவற்றைத் திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உள்வாங்கிக்கொண்டு படங்களை உருவாக்கும்போது, பார்வையாளர்களுக்குப் புதிய உலகத்தின் தரிசனம் கிட்டும்.
அதை விடுத்துக் காலம் காலமாகக் கூறப்பட்டுவரும் மரபுகளுக்கு முட்டுக்கொடுத்து உருவாக்கப்படும் படங்கள் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மட்டுமே உதவும்.
தொடர்புக்கு: chellappa.n@thehndutami.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT