Last Updated : 11 Aug, 2017 10:30 AM

 

Published : 11 Aug 2017 10:30 AM
Last Updated : 11 Aug 2017 10:30 AM

சினிமாஸ்கோப் 42: டும் டும் டும்

தி

ரைப்படங்களில் காதலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சரக்கு திருமணமாகத்தான் இருக்கும். திருமணம் குறித்து வெளியான படங்களில் பெரும்பாலானவை அது தொடர்பான பொதுவான பிரச்சினைகளைப் பொதுப் பார்வையுடன் விவாதிக்கின்றன. இவை தவிர்த்து ஓரிரு படங்கள் சில சிக்கலான விஷயங்களைத் தனியான பார்வையுடன் பரிசீலித்துள்ளன. அதற்குப் பல சான்றுகளும் உள்ளன.

‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’, ‘நான் கவிஞனுமில்லை’ போன்ற இனிய பாடல்களைக் கொண்ட இயக்குநர் பீம்சிங்கின் ‘படித்தால் மட்டும் போதுமா’ (1962) திரைப்படத்தில் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பாலாஜி, சிவாஜி கணேசன் ஆகியோர் அண்ணன் தம்பியாகவும் சாவித்திரியும் ராஜ சுலோசனாவும் மனைவிகளாகவும் நடித்திருப்பார்கள்.

தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். எப்போதுமே படித்தவன் சூது வாதில் கெட்டிக்காரனாகத்தானே இருப்பான். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள். அவளை அடைய திட்டம் போட்டு, ஒரு மொட்டைக் கடிதம் வழியே அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான் அண்ணன்காரன். ஆனால், தம்பியின் வாழ்க்கையிலோ புயல்வீசுகிறது. படிக்காதவனை அவனுடைய மனைவியே விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் தம்பிக்கு அண்ணனின் சூழ்ச்சி தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை திரைக்கதை சித்தரித்திருக்கும்.

இந்தப் படத்தில் தன் அண்ணியின் பெயர் சீதா என்பதால் சீதாப்பழத்தைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் நாயகன். அது ஒரு காலம். இப்போது இதைக் கேட்டாலே சிரிப்புதான் வருகிறது.

மாங்கல்ய தோஷம்

‘அவளா சொன்னால் இருக்காது’ என்னும் பாடல் இடம்பெற்ற, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘செல்வம்’ (1966) படத்திலும் திருமணம்தான் படத்தின் கரு. கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோஷம். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அந்த மணாளன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் ஜோதிடர்கள். நாயகனோ தன் மனதுக்கு உகந்த மாமன் பெண்ணைக் கைப்பிடிக்கத் துடித்திருக்கிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் ஜோதிடர்கள். ஜோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன்.

தோஷத்தை மீறித் திருமணம் செய்ததால் ஒரு பரிகாரம் என்று ஓராண்டுக்கு நாயகனையும் நாயகியையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். ஆனால், இளமை வேகம் அதையும் மீறிவிடுகிறது. நாயகனும் நாயகியும் ஒருவரில் ஒருவர் கலந்துவிடுகிறார்கள். இப்போது என்ன ஆகும் ஜோதிடம் பலித்ததா, இல்லையா என்பதைத் தனது பாணியில் படமாக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சாவித்திரி தன் நாயகனை எமனிடமிருந்து மீட்கப் போராடிய புராணச் சம்பவம் படத்தில் கதாகாலட்சேபமாக இடம்பெற்றிருக்கும். படத்தில் எஸ்.வி.ரங்கராவ் ஏற்றிருக்கும் ஆங்கில மருத்துவர் வேடம் புதுமையானது. ஜோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், ஜோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர்.

இதே திருமண தோஷத்தை இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் தனது முதல் படமான ‘கன்னி ராசி’யில் (1985) பயன்படுத்தியிருப்பார். அவர் கதை எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் எழுதியிருக்கிறார்கள். அக்காள் மகளை மணந்துகொள்ளும் ஆசையில் இருப்பார் நாயகன். திருமண நேரத்தில் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் என்பது தெரியவரும். அதன் காரணமாகத் திருமணம் தடைபடும். ஜோதிடம் என்பதை நம்பி வாழ்வை அழித்துக்கொள்வது அவசியமா என்பதை உணர்த்தும் வகையில் ஜோதிடம் தெரிவிப்பதற்கு நேர் எதிரான சம்பவத்தை வைத்துப் படத்தை முடித்திருப்பார்கள்.

விதியின் விளையாட்டு

திருமணம் என்ற சடங்கையும் குடும்பம் என்ற அமைப்பையும் கேள்விக்குட்படுத்திய இயக்குநர் மகேந்திரனின் ‘மெட்டி’யில் (1982) ஒரு குடும்பமே திருமண தோஷத்தால் அவதிப்படும். ஆனால், இதில் ஜோதிடம் என்பது காரியமில்லை, விதிதான் கைகாட்டப்படும். தமிழின் தீவிரமான சில படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் தமிழ்ச் சமூகத்தின் முகத்திரையை முடிந்த அளவு சேதாரப்படுத்தியிருப்பார் மகேந்திரன். குடிகாரத் தகப்பனின் தகாத செயல்களால் அவரை வெறுத்து ஒதுக்கும் மகன் வேடம் நாயகனுக்கு. கல்யாணி அம்மா, தரகர் தங்கம், டீக்கடைக்காரரான பாலேட்டா, எழுத்தாளர் விஜயன் போன்ற கதாபாத்திர சித்தரிப்புகள் பிறர் படங்களில் காணக்கிடைக்காதவை. கல்யாணி அம்மாவின் தற்கொலைக் காட்சி தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது எச்சிலை உமிழ்ந்திருக்கும். இளையராஜாவின் இசை படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கும்.

‘பணங்கிறது ஒரு க்வாலிஃபிகேஷன் இல்ல... நான் தங்கத்த ரொம்ப கேவலமா நெனைக்கிறவன்… நீங்க என்னிக்கோ அவங்கள கொல பண்ணீட்டீங்க, ஆனா அவங்க இறந்தது இன்னக்கிதான்... இப்படிக் குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன மாதிரி எதுக்கு அவனக் கட்டிக்க ஆசைப்படுற… உந்தலைவிதியையும் உங்கம்மா தலைவிதியையும் யார் மாத்துறது எல்லாம் நாசமாப்போங்க. இந்தக் குங்குமத்துல தான் உலகமே இருக்கோ பொம்பளய்ங்களுக்கெல்லாம்… நான் அம்மாவ நெனச்சி அழல, அம்மா வாழ்ந்த வாழ்க்கையை நெனச்சி அழறேன்…’ போன்ற பல வசனங்கள் மின்னல் கீற்றுகளாய் ‘பளிச் பளிச்’என வந்து விழும். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை அறிந்த இயக்குநர் மகேந்திரன், இந்தப் படத்தின் ரத்தினச் சுருக்கமான பல வசனங்கள் வழியே நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சாடியிருப்பார். பெண்கள் திருமணத்தை வேண்டி விரும்பி எல்லாம் ஏற்கவில்லை, வேறு வழியே இல்லாத காரணத்தால்தான் ஏற்க வேண்டியதிருக்கிறது என்னும் யதார்த்தத்தையே படம் சுட்டி நிற்கும்.

உடன் கட்டை என்னும் சதி

இயக்குநர் அபர்ணா சென், ‘சதி’ (1989) என்னும் பெயரில் ஒரு வங்க மொழிப் படம் எடுத்திருக்கிறார். இது 1800-களில் இந்தியச் சமூகத்தில் வழக்கத்திலிருந்த உடன்கட்டை ஏறுதலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். அம்மா, அப்பாவை இழந்து, வாய் பேச இயலாத நிலையில் வாழும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் ஷபானா ஆஷ்மி. அவளுடைய திருமண தோஷம் காரணமாக அவளை ஓர் ஆலமரத்துக்குத் திருமணம்செய்து வைத்துவிடுவார்கள். அவள் கருத்தரித்தும் விடுவாள். ஆனால் அது மரத்தின் வேலையல்ல; ஒரு மனிதரின் கைங்கர்யம்தான். மாடு பெண் கன்றை ஈன்றால் மகிழும் சமூகம் பெண் பிள்ளை பிறந்தால் ஏன் துக்கம்கொள்கிறது எனும் கேள்வியைக் காட்சிரீதியாக எழுப்பியிருப்பார் அபர்ணா சென். இந்தப் படத்தின் திரைக்கதை தாயைவிட மேலாக உங்களைத் தாலாட்டும். அதையெல்லாம் மீறி பொறுமை காத்தால் படத்தைப் பார்த்து முடிக்க இயலும்.

பொதுவாக அனைத்துப் படங்களிலுமே திருமணத் தடை போன்ற நம்பிக்கை காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை மாறவில்லை. சமீபத்தில் வெளியான ‘பாம்புச் சட்டை’ படத்தில்கூடத் தன் அண்ணிக்குத் திருமணம் நடத்திவைக்க அந்த நாயகன் படாதபாடு படுவான். அவருடன் ஒரே வீட்டில் இருக்க நேரும் நாயகனையும் அண்ணியையும் தொடர்புபடுத்தி ஊரே பேசும். ஆண் - பெண் உறவு, திருமணம் என்பவை குறித்தெல்லாம் இன்னும் இந்தச் சமூகத்தில் பெரிய அளவிலான புரிதல் வரவில்லை. ஆனாலும் மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வப்போது திரைப்படங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றன என்பதே ஆறுதல்.

தொடர்புக்கு:chellappa.n@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x