Published : 25 Aug 2017 08:49 AM
Last Updated : 25 Aug 2017 08:49 AM
எந்த ஒரு நிலையிலும் முயற்சியைக் கைவிடாதவன், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் ‘விவேகம்’ படத்தின் ஒருவரிக் கதை.
புளூட்டோனிய அணு ஆயுதங்களை பூமிக்கடியில் புதைத்து, செயற்கையாக நிலநடுக்கத்தை ஏற்படுத்தி, பல நாடுகளின் பொருளாதாரத்தைக் குலைக்கத் திட்டமிடுகிறது சர்வதேச அளவிலான ‘சீக்ரெட் சொஸைட்டி’. அக்குழுவின் முக்கிய நபர், இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தத் திட்டமிடுகிறார். அதற்கான ரகசியக் குறியீடுகள் கொண்ட கருவி, அட்சரா ஹாசனிடம் உள்ளது. ஹேக்கிங் திறமை கொண்ட அவரைப் பிடிக்க, சர்வதேச அளவிலான தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படை அமைக்கப்படுகிறது. அதன் தலைவர் அஜித். அட்சரா அவர்களிடம் சிக்கினாரா? அஜித் இந்தியாவைக் காப்பாற்றினாரா? இந்தியாவை அழிக்கத் திட்டமிட்ட முக்கிய நபர் யார்? இதுதான் கதை. நண்பன் துரோகியாகிறான் என்ற பழைய கதைதான். ஆனாலும், கண்ணாடியில் விரியும் கணினித் திரைகள், சுரங்கப் பாதைகளில் பைக் சேஸிங், நிமிடத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு, அதிரடி சண்டைகள் என ‘வீடியோ கேம்’ டெம்போவில் லேசாக புதுமை காட்டியிருக்கிறார்கள்.
உடலை சீராக்கி, பார்வையை கூராக்கி, நடையை நேராக்கி தெறிக்கவிடுகிறார் அஜித். எந்திரத் துப்பாக்கியை ஏந்தி, மின்னும் நரை முடியோடு அவர் கம்பீரமாக நடக்கும்போது ஆங்காங்கே ‘ஜேம்ஸ்பாண்ட்’ தெரிகிறார். கண்களில் காதலைத் தேக்கி, உடல்மொழியில் நேசத்தைக் கடத்தும் அழகிய மனைவியாக காஜல் அகர்வால். கணவருக்காக காதலோடு காத்திருக்கும் போதும், களத்தில் நிற்கும் கணவரின் வீரத்தை செருக்கோடு பேசும்போதும் அவரது பாத்திரம் நிமிர்ந்து நிற்கிறது. அஜித் - காஜல் இடையிலான சிறுசிறு உரையாடலும், சமிக்ஞை மொழியும் குறுங்கவிதையாக நீள்கிறது. அட்சரா ஹாசன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அஜித்தின் நண்பராக வரும் விவேக் ஓபராய், ஒவ்வொரு முறையும் அஜித்தை ‘நண்பா, நண்பா’ என்று புன்னகையோடு அழைத்துக்கொண்டே, அதற்குப் பின்னால் இருக்கும் வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். இருந்தாலும், ஹீரோவுக்கு எந்நேரமும் பில்டப் கொடுப்பதையே இந்த வில்லனின் வேலையாக்கி இருப்பது அத்தனை விவேகமாகத் தெரியவில்லை. அஜித்துக்கு உதவும் மொழிபெயர்ப்பாளராக சில காட்சிகளே வந்தாலும், கிடைத்த கேப்பில் நம்மைச் சிரிக்க வைக்கிறார் கருணாகரன்.
அஜித் திரையில் தோன்றினாலே எந்திரத் துப்பாக்கிகள், பிஸ்டல்கள் அவரைக் குறிவைத்து வெடித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒரு தோட்டாகூட அவரைத் துளைப்பதில்லை. ஆயிரம் அடி உயர அணைக்கட்டில் இருந்து குதித்துத் தப்பிக்கிறார். தர்க்கத்தை கேலிசெய்யும் நாயகனின் இதுபோன்ற சாகசங்கள் வேறு நாயகனாக இருந்தால் வெறும் காமெடி ஆகியிருக்கும். அஜித் ரசிகர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். கூடவே கிராஃபிக்ஸ் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பமும், அதைப் பயன்படுத்திக்கொண்ட இயக்குநரின் புத்திசாலித்தனமும் ஓரளவு ஈடுகட்டுகின்றன.
அஜித்துக்கென எழுதப்பட்ட பஞ்ச் வசனங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ‘ஜெயிக்கறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும், ஜெயிச்ச அப்புறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே இல்லை’, ‘இன்னும் இந்த உலகத்துல விலைபோகாத உண்மையும் வளையாத நேர்மையும் இருக்குடா நண்பா.’ - இதுபோன்ற வசனங்களுக்காக சிவாவைப் பாராட்டலாம்.
அழுத்தமில்லாத கதைக் கரு, ஐரோப்பியர்கள் பேசும் அந்நியத் தமிழ், புரியாத அதிநவீன தொழில்நுட்பம், லாஜிக் இல்லாத சண்டைக் காட்சிகள் ஆகியவை திரைக்கதைக்கு வலு சேர்க்கவில்லை. வெற்றியின் கேமராவும், ரூபனின் எடிட்டிங்கும், அனிருத்தின் பின்னணி இசையும் ஒரு ஆக்சன் படத்துக்குத் தேவையான கச்சிதத்தைத் தருகின்றன. கபிலன் வைரமுத்துவின் ‘காதலாட’ பாடல் மட்டும், ஸ்லோவேனிய நாட்டு குளிருக்கு, இதம் தரும் தேநீராக இருக்கிறது. ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளுக்காக உழைத்த அஜித்தும், ஸ்டன்ட் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சண்டைக் காட்சிகளில் அஜித்துடன் சேர்ந்து இயக்குநர் சிவாவும் சண்டையிட்டிருக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் கலோயன் வோடனிச்சரோவ் மற்றும் கணேஷின் சண்டைக் காட்சிகள் அசர வைக்கின்றன. செர்பியக் காடுகளில் அஜித் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள், சில்வஸ்டர் ஸ்டலோன் நடித்த ‘ஃபர்ஸ்ட் ப்ளட்’ படத்தை நினைவூட்டுகின்றன.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை, ‘நெவர் எவர் கிவ்அப்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் அஜித். ஆனால், முழு படத்தையும் பார்த்து முடிக்கிற வரை நம்மால் அப்படி இருக்க முடியவில்லை. குறைகள், பிழைகள் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT