Last Updated : 07 Nov, 2014 11:01 AM

 

Published : 07 Nov 2014 11:01 AM
Last Updated : 07 Nov 2014 11:01 AM

கூட்டைக் கலைத்த குயிலின் ஓசை

ஆங்கிலத்தில் ‘ஐரனி’ என்று அழைக்கப்படும் நகைமுரண் திரைப்படப் பாடல்களில் வெளிப்படும் விதம் வியப்பளிக்கும். மகிழ்ச்சியுடன் திரைப்பட நாயகன் – நாயகி ஓடியாடி பாடும் இனிமையான பல பாடல்களின் மெட்டும் பொருளும் வலுவான உணர்வை ஏற்படுத்துவதை நாம் புரிந்துகொள்ள இயலும்.

ஆனால், இதைவிடப் பன்மடங்கு அதிக அழுத்தமான தாக்கத்தையும் அலாதியான உணர்வையும், திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வரும், திரைக்கதைக்கு அதிகம் தொடர்பில்லாத யாரோ பாடும் பாடல் மெட்டும் வரிகளும் ஏற்படுத்துவதே இந்த நகை முரணாக விளங்குகிறது. அப்பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வுதான் இதன் முக்கியக் காரணம்.

‘ ஜுதாயி’ என்ற சொல்லால் இந்திப் பாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்தப் பிரிவாற்றாமை உணர்வில் ஒளிரும் இரு பாடல்களைப் பார்ப்போம்.

ஜாக்கி ஷெராஃப் –மீனாட்சி சேஷாத்திரி நடித்த, ஹீரோ என்னும் படத்தில் வரும் இந்தப் பாடலை எழுதியவர் ஆனந்த் பக்‌ஷி. இசை. லக்ஷ்மிகாந்த்-பியாரிலால். இப்பாடலைப் பாடியுள்ளவர் ரேஷ்மி ஒரு பாகிஸ்தானிய நாட்டுப்புறப் பாடகி. ராஜஸ்தான் மலைவாழ் சமூகத்தில் பிறந்த இவரின் குடும்பம் தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எங்கோ ஒரு மூலையில் தன் வசீகரக் குரலில் கிராமியப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவர், திரைப்படப் பாடல்களைப் பாடியதன் மூலம் பின்னாளில் இந்தியத்துணைக்கண்டத்தின் சிறந்த பாடகியாகப் போற்றப்பட்டார்.

பாட்டு:

பிச்சடே அபி தோ ஹம் பஸ் கல் பர்ஸோ

ஜீயூங்கி மே கைஸே இஸ் ஹால்மேஃபர்ஸோ

மவுத் நா ஆயீ தேரி யாத் கியோன் ஆயீ,

ஹாய் லம்பீ ஜுதாயீ

சார் தினோன்கா பியார் ஹே ரப்பா

படீ லம்பீ ஜுதாயீ லம்பீ ஜுதாயீ

ஹோட்டோன் பே ஆயீ, மேரி ஜான்,

துஹாயீ, ஹாய் லம்பீ ஜுதாயீ

இதன் பொருள்:

இப்போதுதான் நாம் பிரிந்துள்ளோம்

நேற்று -- நேற்றைக்கு முன் தினம் (என்று)

இந்த நிலையில் காலம் முழுவதும்

நான் எப்படி வாழப்போகிறேன்

இறப்பு வரவில்லை

(பிறகு) உன் நினைவு மட்டும் ஏன் வந்தது

ஐயோ நீண்ட பிரிவே நீண்ட பிரிவே

நான்கே நாள் (போன்ற குறுகிய கால) காதல்

நீண்ட பிரிவே நீண்ட பிரிவே

என் முகத்தில் என் உயிரின் ஓலம் வந்துவிட்டது,

ஐயோ நீண்ட பிரிவே

என்னுடைய காதலன் என் அருகில் இல்லை

வேறு ஒருவர் மீதும் எந்த நாட்டமும் இல்லை

எந்த நாட்டமும் இல்லை

அதில் இந்த வசந்தம் வந்து (மனதில்) தீ மூட்டுகிறது. ஐயோ நீண்ட பிரிவே

மொட்டு கருகிவிட்டது மலர்வதற்கு முன்பே

பறவை பறந்துவிட்டது சந்திப்புக்கு முன்பே

குயிலின் கூ கூ என்ற ஓசையே

கூட்டைக் கலைத்துவிட்டது.

ஐயோ நீண்ட பிரிவே...

இதற்கு இணையான பிரிவாற்றாமை உணர்வை வெளிப்படுத்தும் தமிழ்ப் பாட்டும் கேட்பவர்களுக்கு இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது வியக்கத்தக்கது. மேலும் காட்சியின் பின்புலம், மெலடி, வழக்கமான கதாநாயகனின் திரைக்குரலுக்கு மாறுபட்ட சீர்காழி கோவிந்தராஜனின் குரல் என்று தனித்துவத்தோடு அமைந்த இந்தப்

பாடல் ஒரு காலத்தில் எல்லாப் பள்ளி, கல்லூரி இசைப் போட்டிகளிலும் பாடப்பட்டது.

பாடலை எழுதியவர்: கண்ணதாசன்

படம்: காத்திருந்த கண்கள்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்:

ஓடம் நதியினிலே … … … ஒருத்தி மட்டும் தரையினிலே…..

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

ஆசை என்னும் மேடையினிலே …

ஆடி வரும் வாழ்வினிலே….

யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே

ஓடம் நதியினிலே…

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்

பாட்டு வரும் வெளியினிலே

குரலை மட்டும் இழந்த பின்னே

உயிர் இருந்தும் பயனில்லே

ஓடம் நதியினிலே …

‘குயிலின் கூ கூ என்ற ஓசையே கூட்டைக் கலைத்துவிட்டது. ஐயோ நீண்ட பிரிவே’ என்ற இந்தி வரிகளும்,

‘கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டு வரும் வெளியிலே

குரலை மட்டும் இழந்த பின்னே உயிர் இருந்தும் பயனில்லே’ என்ற தமிழ் வரிகளும் உணர்விலும் சொல்லிலும் ஒன்றுபட்டிருப்பது வியப்புக்குரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x