Published : 18 Aug 2017 10:22 AM
Last Updated : 18 Aug 2017 10:22 AM
அ
மெரிக்க இயக்குநரான டேரன் அரோனோஃப்ஸ்கி தனது படைப்புகளின் வழியாகச் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிவருபவர். முழுமையான உளவியல் த்ரில்லர் படங்களை உருவாக்கிவருவதில் ஒரு ‘உலக சினிமா’ இயக்குநராகவும் பார்க்கப்படும் ஒருவர். இவரது உளவியல் த்ரில்லர் படங்கள் பார்வையாளர்களைப் பல நாட்கள்வரை மனரீதியாகத் தொந்தரவு செய்யக்கூடியவை, டேரன் படம் இயக்குவதை நிறுத்துக்கொள்வது நல்லது என்றெல்லாம் இவரை வறுத்து எடுத்திருக்கிறார்கள்.
தணிக்கையிலும் இவரது படங்கள் சிக்கிக்கொள்வது சர்வ சாதாரணம். குறும்படங்கள் வழியே ஹாலிவுட்டுக்குள் நுழைந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், 1998 முதலே படங்களை இயக்கிவருகிறார். இவரது இயக்கத்தில் 2008-ல் வெளியான ‘பிளாக் ஸ்வான்’ இன்றுவரை வெகுஜன சினிமா ரசிகர்களைக் கடந்து உலக சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
கலையுலகில் உச்ச இடத்தை அடைவதும் அந்த இடத்தைத் தக்கவைப்பதும் எத்தனை பெரிய போராட்டம் என்பதை அசத்தலாக ஆனால், வலியுடன் உணரவைத்தது இந்த ‘பிளாக் ஸ்வான்’. அதன் பிறகு இரண்டு படங்களை இயக்கி, இரண்டு படங்களைத் தயாரித்துவிட்ட டேரன் இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது ‘மதர்’.
அமெரிக்காவின் மாநகரிலிருந்து தொலைதூரக் கிராமப் பகுதி ஒன்றுக்கு மணமாகிச் செல்லும் இளம்பெண் ஒருவரது அதிபயரங்க அனுபவங்கள்தான் ‘மதர்’. ஹாலிவுட்டின் ஹாட் ஏஞ்சல்களில் முதன்மையானவராக வருணிக்கப்படும், ஹாலிவுட்டில் அதிக ஊதியம் வாங்கும் ஜெனிபர் லாரன்ஸ்தான் கதாநாயகி.
கணவனின் கிராமத்து வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர்களாக அறிமுகமாகும் வயதான தம்பதிதான் (எட் ஹாரிஸ், மைக்கேல் பிஃபெய்பர்)ஜெனிபரின் வீட்டுக்குள் ஆபத்தை அழைத்து வருகிறவர்கள். கணவனின் வீட்டில் நடப்பவை நிஜமா, நினைவுகளா இல்லை எண்ணங்களா என்பதை டேரன் அரோனோஃப்ஸ்கி சித்தரித்திருக்கும் விதம், வழக்கம்போல் ரத்தத்தை உறைய வைப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் ‘மதர்’ படத்தின் டிரெய்லர் விமர்சகர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT