Published : 18 Aug 2017 10:29 AM
Last Updated : 18 Aug 2017 10:29 AM
ஒ
வ்வோர் அம்சத்திலும் வித்தியாசங்களைக் கொண்டிருந்தது ‘பாபி’ திரைப்படம். இளைஞர்களை ஈர்க்கும் இசை மட்டுமின்றி, அதுவரை திரையில் கேட்டிராத உச்ச ஸ்தாயியில் இனிமையுடன் பாடும் தனிச் சிறப்பான குரல் வளம் கொண்ட நரேந்திர சஞ்சல் என்ற பின்னணிப் பாடகர் அப்படத்தில் அறிமுகம் ஆனார். பாரம்பரியம் மிக்க பக்தியான குடும்பத்தில் பிறந்த இந்த பஞ்சாபிப் பாடகர், சிறு வயது முதல் ‘பீண்ட்’ அல்லது ‘பேட்’ எனப்படும் அர்ப்பணிப்பு வகை ஆரத்தி பாடல்கள் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இடைவிடாத கடும் முயற்சிகளையும் போராட்டங்களையும் தொடக்கத்தில் எதிர்கொண்ட இவர், ‘பாபி’ படத்தில் பாடிய ‘பே-ஷக் மந்திர், மஜீத், தோடோ புலேஷா ஏ கஹத்தா’ என்று தொடங்கும் பாடல், இவரை அந்தப் பாடலின் மூலம் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. இவரது முதல் இந்திப் படப் பாடலான இது, பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. பின்னர் ராஜ்கபூர் நினைவுப் பரிசும் அவருக்கு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பெரும் புகழ்பெற்ற மற்ற ‘பாபி’ படப் பாடல்கள் அளவுக்கு, இப்பாடல் புகழ் அடையாமல் போனதற்கு சில முக்கியக் காரணங்கள் இருந்தன. முதலாவதாக, ‘ஆடு கத்துவதைப் போல் இருக்கிறதே’ என்று கிண்டலடிக்கப்பட்டது சஞ்சலின் பின்னணிக் குரல். (வெகு காலத்துக்குப் பிறகு, ஏறக்குறைய அந்தக் குரலின் சாயல் உடைய மாணிக்க விநாயகம் தமிழில் புகழ் அடைந்தார்). இரண்டாவதாக, ஆழ்ந்த கருத்துச் செறிந்த அப்பாடலின் பொருள் அனைவரையும் முழுமையாக அச்சமயம் சென்றடையவில்லை. பொருள் உணர்ந்து கேட்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவு வேறு!
பல இந்திப் படங்களில் நாம் ஒரு காட்சியைப் பார்க்கலாம். குளிர் காய நெருப்பை மூட்டி சுற்றிலும் ஒரு குழுவாக அமர்ந்து பலர் பாடுவார்கள். அவ்வகைப் பாடல்களின் சூழல், அவர்களிடம் தஞ்சம் அடைந்திருக்கும் காதலர்களின் நிலையை விளக்குவதாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நரேந்திர சஞ்சலே பாடகராக நடித்து, பாடிய ‘பாபி’ படத்தின் மற்றொரு முக்கியப் பாடலின் பொருள்.
‘புலேஷா’ இப்படிச் சொல்லுகிறார்
ஆலயங்களையும் பள்ளிவாசல்களையும்
அவசியம் ஏற்படின் தயக்கமின்றித் தகர்த்து கொள்க
ஆனால் காதல் ததும்பும் உள்ளங்களை உடைக்காதீர்
அவற்றில்தான் காதலர்கள் வாழ்கிறார்கள்
காதலை எடை போடும்(அன்பு) தராசில்
பொற்காசுகளை எடை போட்டுப் பார்க்காதீர்கள்
அய்யோ... என் மேல் கோபம் கொள்ளாதீர்கள்
நான் சொல்லவில்லை இதையெல்லாம்
‘புலேஷா’ இப்படிச் சொல்லுகிறார்.
காதல், கனல் நெருப்பு இரண்டும் ஒன்றே.
தண்ணீரால் நெருப்பை அணைக்க முடியும்
ஆனால், காதலர்கள் விடும் கண்ணீர் என்ற தண்ணீர்
காதல் என்ற தீயை அதிகமாக்குகிறது
உன் எதிரில் உட்கார்ந்து கண்ணீர் உகுக்கும்
காதல் உள்ளத்தை (காதலியை) உடைத்துவிடாதே
அய்யோ இதெல்லாம் நான் சொல்லவில்லை
என்னை ஒன்றும் செய்யாதீர்கள்
நான் சொல்லவில்லை ‘புலேஷா’ சொல்லுகிறார்.
இப்படிப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தை புலேஷாவின் கருத்தாகப் பாடல் வரிகளில் ஆனந்த் பக்ஷி எழுதியிருப்பதன் அடிப்படை இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.
பஞ்சாபி மொழியில் கூட்டாக அமர்ந்து பாடும் பல ‘காஃபி’ வகைப் பாடல்களை எழுதியுள்ள புலேஷா 17 -ம் நூற்றாண்டில் தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த சூஃபி கவிஞர். உஸ்பெகிஸ்தான் பகுதியைத் தாயகமாக கொண்ட இவருடைய முன்னோர்கள் அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவில் குடியேறியனர். முகலாய ஆட்சியின் உச்சகட்ட காலமான அச்சமயத்தில் சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடும் பகை நிலவியது. இந்து, முஸ்லிம் சமயங்களில் உள்ள சிறந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சூஃபி மார்க்கம் என்ற சகோதரத்துவத்தை வளர்க்கும் இயக்கம் அப்போது தோன்றியது. சூஃபி மார்க்கத்தில் இறைவனை அடையும் வழியாக நான்கு முக்கிய நிலைகள் கூறப்படுகின்றன. அவை, ஷரியத் (பாதை), தரிகத் (பின்பற்றுதல்), ஹக்கீகத் (உண்மை), மர்ஃபத் (ஒன்றுகூடுதல்). இந்த அம்சங்களை வலியுறுத்திப் பாடல்கள் இயற்றிய சூஃபி மார்க்கக் கவிகளில் முக்கியமான புலேஷா எழுதிய பல பாடல்கள் அழியா வரம் பெற்றன. அவ்வகைப் பாடல்களின் கருத்தை ஒட்டி அமைந்த இப்பாடல் எச்சமயத்திலும் எவராலும் பாடத்தக்கது. ‘புலே கீ ஜான’ (புலேவுக்கு என்ன தெரியும்) என்ற இவரது பாடல் மேற்கத்திய, இந்திய சங்கீத உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT